தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று தீபா சங்கரை ஒரு சாதாரண இன்னொரு நடிகையாகத்தான் பார்த்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அவர் ஒரு சிறந்த பேச்சாளர் அதிலும் சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி தமிழில் அற்புதமான உரையாற்றக்கூடியவர் என்று ஒரு நொடி எல்லோரும் ஆச்சிரியப்பட்டுத்தான் போனார்கள்.
பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு. ஈரோடு மகேஷ், வேல ராமூர்த்தி மற்றும் பழ கருப்பையா ஆகிய மூன்று ஆகச்சிறந்த தமிழ் ஆளுமைகளுடன் ஒரு நொடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மேடையை பகிர்ந்து கொண்ட தீபா, தன் பங்கிற்கு ரத்தினச் சுருக்கமாக ஒளவையார் பாடல் ஒன்றை தனது பாணியில் படபடவென்று பேசி கைதட்டல்கள் அள்ளினார்.
பெரிய படங்கள் சிறிய படங்கள் என்கிற விவாதங்கள் மேடையில் எழுந்த போது, பேச அழைக்கப்பட்ட அவர், ஒளவையார் பாடிய, திருவள்ளுவ மாலை என்கிற தலைப்பில் 2 வதாக வரும்
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
என்கிற பாடலை பாடினார்.
அதன் பொருள்: தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது.