கடந்த வாரம், நெவர் எஸ்கேப் சிறகன் வல்லவன் வகுத்ததடா ரூபன் ஆகிய சிறு முதலீட்டு படங்கள் வெளியாகின. அதே நாளில் தேர்தல் நடந்ததால் தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் திரையரங்குகளில் காட்சிகள் தொடங்கின.
சனி ஞாயிறு மற்றும் கோடை விடுமுறையை மட்டுமே நம்பி இந்த நான்கு புதுப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில், அதே நாளில் விஜய் நடித்த கில்லி படமும் மறு வெளியீடு செய்யப்பட்டது. வார இறுதியில் புது படங்களை பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த ரசிகர்களையும் சேர்த்து கில்லி தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
இது குறித்து நெவர் எஸ்கேப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆல்பர்ட் ரஞ்சன், “நாங்கள் விடுமுறை தினங்களை மட்டுமே நம்பி படங்களை வெளியிட முன் வருகிறோம். வாரம் 7 நாட்கள் என்கிற நிலையில் தேர்தல் நடந்ததால் எங்களுக்கு அதுவும் ஆறு நாட்களாக குறைந்து விட்டது. இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் வித்தியாசமான கதைக்களங்களை தேடி போய் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கையில், எங்களது படங்களையும் வெளியிட்டோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த வார வெளியீட்டில் கில்லி படம் மட்டுமே வசூலை வாரிக்குவித்து கொண்டிருக்கிறது. அந்தப் படத்தையோ விஜய்யையோ அல்லது மறு வெளியீடு செய்தவர்களையோ திரையரங்கு உரிமையாளர்களையோ எந்த விதத்திலும் கோபித்துக் கொள்வதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என்பது தெரியும். கோடை விடுமுறையில் படத்திற்காக போட்ட முதலீடையாவது எடுத்துவிடலாம் என்று நாங்கள் படத்தை வெளியிட்ட நிலையில், பள்ளி கல்லூரி விடுமுறையை தொடர்ந்து திரையரங்குக்கு வந்த இளைஞர்கள் அத்தனை பேரும் கில்லி படத்திற்கே சென்றனர். அவர்களின் ஆரவாரத்தை பார்த்து நாங்கள் வெளியிட்ட புது படங்களை பார்க்கலாம் என்று வந்த ரசிகர்களின் பெரும்பாலானவரும் கில்லி படத்திற்கே சென்று விட்டனர். நான்கு நாட்களில் கில்லி படத்தின் வசூல் எட்டு கோடிக்கும் அதிகம் என்று கேள்விப்படும் பொழுது ஒருபுறம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்த வசூல் ஆண்டு முழுவதும் அவர்களுக்கு திரையரங்குகளை நடத்துவதற்கான உற்சாகத்தை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அவர்களின் திரையரங்குகளை தொடர்ந்து நடத்தினால் தான் எங்களைப் போன்ற சிறு பட தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க முன் வருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் எங்களது நிலையை கில்லி படத்தின் மறு வெளியீட்டின் மூலம் 100% லாபம் பார்த்தவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களது லாபத்தில் ஒரு பகுதி எங்கள் படங்களுக்கு சேர வேண்டியதே என்கிற குறைந்தபட்ச புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும்….வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை….” என்று தனது வேதனையை தெரிவித்தார்.
அவர் சொல்வது உண்மை என்று கில்லி படத்தை மறு வெளியீடு செய்தவர்கள் உணர்ந்து கொண்டால், அவர்களது லாபத்தில் சிறு சதவிகிதத்தை கடந்த வாரம் வெளியான படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து பகிர்ந்து கொண்டால் தெய்வத்திற்கு நிகராக அவர்கள் போற்றப்படுவார்கள் என்றால் மிகையாகாது.