– K Vijay Anandh
தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி அவன் வாழ்ந்த திருவல்லிக்கேணி பகுதியில் அவரது பெயரால் அமைந்த சாலையில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமைகளில் 100 பேருக்கு தலை வாழை இலையில் இலவசமாக அறுசுவை விருந்து வழங்குகிறார்கள் முத்துக்குமார் – சௌந்தரவள்ளி தம்பதியினர்

சென்னையில் திருவல்லிக்கேணி என்றாலே சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காது விதவிதமான சைவ அசைவ மெஸ்கள் மற்றும் உணவகங்கள் என்று திருவல்லிக்கேணி பகுதி உணவிற்கு பெயர் போன பகுதி.
கிரேசி மோகன் நாடக குழுவில் சாக்லேட் கிருஷ்ணா உள்ளிட்ட அனைத்து நாடகங்களிலும் நடித்த ரஜினி என்று அழைக்கப்படும் சௌந்தரவள்ளி தனது கணவர் முத்துக்குமார் உடன் இணைந்து ஸ்ரீ அன்ன போஜனம் என்கிற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து ரஜினி யிடம் கேட்ட பொழுது, ” நடிப்பு கலைக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்தமான கலை சமையல் கலை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் திருமணமான புதிது வரை எனக்கும் சமையல் கட்டிற்கும் தூரம் அதிகம். திருமணத்திற்குப் பிறகு எனது கணவருக்கும் புகுந்த வீட்டாருக்கும் நன்றாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மிக விரைவாக சமையல் கற்றுக்கொண்டு, அனைவரின் பாராட்டுக்கும் அன்புக்கும் பாத்திரமானேன்.
என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் வழங்கிய சுவையான உணவை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற ஆவலில் என் கணவருடன் இணைந்து இந்த உணவகத்தை ஆரம்பித்தேன்….” என்றார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு ரஜினி உடன்பிறவா சகோதரி போன்றவர். இவர்கள் நடிக்கப் போகும் படங்களின் கதைகளை படித்து பார்த்து கருத்து சொல்லும் அளவிற்கு, அவர்களுக்கு ஒரு நல்ல சகோதரியாக விளங்கி வருகிறார்.

இவர் நடத்தும் ஸ்ரீ அன்ன போஜனம் உணவகத்தில் 70 ரூபாய்க்கு வழங்கப்படும் அளவு சாப்பாட்டில் பருப்பு நெய் பருப்பு பொடி எண்ணெய் நல்ல ஒரு துவையல் சாம்பார் கார குழம்பு ரசம் மோர் கூட்டு பொரியல் அப்பளம் ஒரு இனிப்பு என்று பிரமாதப்படுத்துகிறார்கள், அதிலும் தலை வாழை இலை போட்டு .
வியாபாரத்தில் ஒரு சேவையை புகுத்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு மாதம் முழுவதும் அவர்கள் ஈட்டும் சிறு லாபத்தில், ஒவ்வொரு மாதமும் கடைசியாக வரும் வியாழன் அன்று 100 பேருக்கு இலவசமாக மதிய உணவை வழங்குகிறார்கள். அதிலும் தலை வாழை இலை போட்டு அன்லிமிடெட் மதிய உணவாக வழங்குகிறார்கள். இதற்கு வெளியில் இருந்து யாரும் ஸ்பான்சர் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையாட்கள் பற்றாக்குறையால் உணவகங்களை நடத்த முடியாத இன்றைய சூழலில், சமையல் கட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் கல்லாவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கணவன் மனைவியாக இவர்கள் நடத்தும் ஸ்ரீ அன்ன போஜனம் திருவல்லிக்கேணி பகுதியில் மக்களை அதிகமாக ஈர்த்துள்ளது என்றால் மிகை அல்ல
நங்கநல்லூர் மற்றும் சாலிகிராமம் பகுதியில் கிளைகள் ஆரம்பிக்க வேண்டும் என்பது, இவர்களது கனவு !





