a K.Vijay Anandh review
தாய் பேயாக வந்து தன் குழந்தைகளை காப்பாள், தாய் மாமனோ அந்த பேய்களிடமிருந்தே தன் மருமக்களை காப்பான்.
இதுதான் அரண்மனை 4 இன் அட்டகாசமான ஒரு வரி கதையாக இருக்க முடியும். இதனை பிரம்மாண்ட அரண்மனை ஆக்சன் காமெடி தெய்வாம்சம் அண்ணன் தங்கை சென்டிமென்ட் என்று அடர்ந்த காடுகளின் பின்னணியில் படமாகி இருக்கிறார் சுந்தர் சி.
அன்றைய வடகிழக்கு இந்திய பகுதிகள் அன்றைய பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டன என்பது வரலாற்று உண்மை. அந்த அடிப்படையில் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதுவும் அடர்த்தியான காடுகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒருவேளை பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்காகவே வடகிழக்கு அடர் வனங்களில் காணப்படும் அந்த அமானுஷ்ய சக்திக்கு பாக் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் அந்த பழங்குடி மக்கள் .
அந்த அச்சுறுத்தும் அமானுஷ்ய சக்தியான பாக் என்பதை மையப் புள்ளியாக வைத்து ரசிகர்களை பயமுறுத்தலின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இளம் காதலர்களாக வரும் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது காதலி அவரது பெயர் செல்வி அவரை துரத்தும் நமோ நாராயணன் தலைமையிலான வில்லன்கள். அவர்களை அடித்து நையப்படைப்பதில் அரண்மனை 4 விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. பாலசுப்ரமணியன் மற்றும் அவரது காதலி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு அந்த சண்டைக் காட்சிகளுக்கு நடுவிலேயே கோவை சரளா காட்டும் காமெடி இந்த படம் எத்தனை பேய்கள் வந்தாலும் காமெடி டிராக்கில்தான் செல்ல போகிறது என்பதற்கு அச்சாரம் இட்டு விடுகிறது.
படம் முழுக்க முழுக்க தமன்னாவின் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்கான ஒரு பாசப் போராட்டமாகவே அமைந்திருக்கிறது. உயிரோடு இருக்கும்பொழுது பிரிந்து விட்டு, அரண்மனைக்கு வந்த அண்ணன் அருகில் பேயாக அமர்ந்து அழும் இடங்களில் ரசிகர்களின் மனதையும் கரைய வைத்து விடுகிறார். உச்ச நட்சத்திர நடிகைகளுடன் ஜோடி சேர உச்ச நடிகர்களாக இருக்க வேண்டும் என்பது இல்லை ஆறடி உயர ஆஜானுபாகுவான சந்தோஷ் பிரதாப் தமன்னாவின் கணவராக சிறப்பாக வந்து போகிறார்.
யோகி பாபு விடிவி கணேஷ் மற்றும் கோவை சரளா இவர்களெல்லாம் காமெடியில் தனி ஆவர்த்தனம் ஆடக்கூடியவர்கள் ஆனால் இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து காமெடியில் கதகளி ஆட வைத்திருக்கிறார் சுந்தர் சி. கரண்ட் ஷாக் அடித்து சேசு மீது கோவை சரளா ஸ்கூட்டி ஓட்டும் காட்சி தியேட்டர்களில் சிரிப்பு சத்தத்தால் பூகம்பத்தை ஏற்படுத்தும். இடைவேளைக்கு அப்புறம் பேய்களிடம் இவர்கள் நிறைய மொத்து வாங்க வேண்டி இருப்பதால், நான் கடவுள் ராஜேந்திரனிடம் வாங்கும் அடிகளின் அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். போதாக்குறைக்கு டெல்லி கணேஷ் மற்றும் சேசு வேறு. பல்லுக்கு கம்பி போடலாம் பல்செட்டுக்கு கம்பி போட்ட முதல் ஆள் நீ தான்யா… படம் முடியும்போதும் சிரித்துக் கொண்டே வரவேண்டும் என்பதற்காக சுந்தர் சி வைத்திருக்கும் காமெடி.
ராஷி கண்ணா, ஜமீன்தாரின் டாக்டர் மகளாக வந்து வசீகரித்து இருக்கிறார்.
கருடா ராம் வழக்கம் போல தனது வில்லத்தனங்களின் மிரட்டி இருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலம் பல நூறு நடிகர்களை நடிக்க வைத்த இயக்குனர் டா என்கிற பெருமையோடு அசால்டாக நடித்திருக்கிறார் சுந்தர் சி.
காவல்துறை அதிகாரிகளாக வரும் கே எஸ் ரவிக்குமார், சிங்கம் புலி மற்றும் இன்னொரு இயக்குனர் ராமதாஸ் மற்றும் விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட அனைத்து துணை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மருமகளை துஷ்ட சக்தியிடமிருந்து காப்பாற்ற. கோயில் திருவிழாவில் நடைபெறும் பிரம்மாண்டமான சண்டை காட்சிகள் ஜாக்கி சான் படங்களை நினைவு படுத்துகிறது என்றால் மிகை அல்ல. அத்தோடு அந்த சண்டைக் காட்சிகளின் பின்னணியாக ஆயிரம் பக்தர்களோடு சிம்ரனும் குஷ்புவும் ஆடும் ஆட்டம் வேற லெவல் ரகம். நிச்சயமாக கிராமப் பகுதிகளில் பெண்கள் திரையரங்குகளில் சாமி ஆடுவது உறுதி. இவர்களுடன் இதற்கு முந்தைய அரண்மனை பதிப்புகளில் நடித்த நடிகைகளும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியும் ஆட்டம் போட்டிருந்தால் தியேட்டர்களில் அனல் பறந்திருக்கும்.
அப்புறம் இங்கே குழந்தைகளுக்கான படம் வருவதே இல்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள். ஆனால் சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால் பேய் படங்களை குழந்தைகள் விழுந்து விழுந்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். படங்களில் வரும் பேய்களுக்கு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் வேண்டுமானால் பயப்படலாமே தவிர அவர்கள் பயப்படுவதும் பேய் அவர்களை பயமுறுத்துவதும் படம் பார்க்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை வழங்கி இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் அரண்மனை விட்டு வெளியே வந்தாலோ, காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தாலோ, அத்தனையும் பசுமை பசுமை பசுமை அடர் வனங்களின் நடுவே அமைக்கப்பட்டிருந்த அந்த கோவூர் கிராமம் ஈ. கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் அத்தனை அழகு. நகர்புறங்களில் ஒரு மரங்களை கூட கடக்காமல் திரையரங்குக்குள் சென்றவர்கள், திரும்பி வரும் பொழுது எங்கடா இங்கிருந்த காட்ட காணோம் என்று அங்கலாய்க்கப் போவது நிச்சயம்.
அரண்மனை 4, கண்ணுக்கு குளிர்ச்சியான காமெடி விருந்து.