எலெக்‌ஷன் எழுத்தாளர் அழகிய பெரியவன்

42

எழுத்தாளரும் ஆசிரியருமான அழகிய பெரியவன் , மே 17 ல் வெளியாக இருக்கும் எலெக்‌ஷன் படத்திற்கு வசனங்கள் எழுதியிருப்பதுடன், அப்படத்திற்கு தேவையான மிகப்பொருத்தமான கதைக்களத்தில் படப்பிடிப்பு நடத்தவும் தனது சக ஆசிரியரான எழிலுடன் சேர்ந்து உதவியிருக்கிறார்.

எலெக்‌ஷன் பட அனுபவத்தை பற்றி அவர்கள் கூறுகையில், ” இந்த கதையை எழுதிவிட்டு, என்னை சந்தித்து கதையை வாசிக்க சொன்னார் இயக்குநர் தமிழ். அவருடைய கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் கதை முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால் அரசியலை மட்டும் பேசவில்லை. மனிதர்களுடைய குணாதிசயங்களை… கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் குணங்களை… என எல்லாவற்றையும் கலந்து பேசுகிறது. அற்புதமான திரைக்கதையாகவும் இருந்தது. அதன் பிறகு அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நன்றாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கிறார்களே..! ‘ என்று சொன்னபோது, அவர் ‘அதனை இப்படித்தான் படமாக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருக்கின்றேன்’ என்றார்.

வேலூர் மாவட்டத்தின் கொளுத்தும் வெயிலுடனும், வியர்வையுடனும் கூட்டமாக தான் பதிவு செய்ய வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் தெரிந்த உறுதியை பார்த்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சொல்கிறது. நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய.. சமத்துவம் என்று சொல்லக்கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?  ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்?  எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.

ஆனால் ஒரு எளிய மனிதன்… எளிய மனிதனாக இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பம் விடுவதில்லை. அவனுக்கு நெருக்கடியை தருகிறது. இவை எல்லாம் சேர்த்து தான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என நான் கருதுகிறேன்.

ஜனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்வியை இந்த திரைப்படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன்.

இது தொடர்பாக மறைந்த தலைவர் ஒருவர் சிறந்த உதாரணம் ஒன்றை சொல்லி இருக்கிறார். ”ஒரு சட்டத்தை அரசு இயற்றுகிறது என்று சொன்னால்.. அதை நீங்கள் ஒரு பனிக்கட்டி என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பனிக்கட்டியானது பத்து அல்லது இருபது மனிதர்களைக் கடந்து.. கடை கோடியில் இருக்கும் எளிய மனிதனை சென்றடையும் போது அது ஒரு துளி நீராகத்தான் போய் சேரும்” எனக் குறிப்பிடுவார்.

இன்றைய சூழலும் இப்படித்தான் இருக்கிறது. சிறந்த சட்டங்களை இயற்றினாலும்… அற்புதமான திட்டங்களை திட்டினாலும்… அதை யார் செயல்படுத்துகிறார்கள்? அவர்களுக்கான அரசியல் என்னவாக இருக்கிறது? அந்த விசயங்களை எல்லாம் சேர்ந்துதான் இந்த படம் பேசுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் நடிகர் விஜய் குமார் என்னை சந்தித்த உடன் ஆரத் தழுவி , ‘நீங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

அதேபோல் படப்பிடிப்பின் போது ஒருநாள் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்திருந்தார் அவருடன் பேசும் போது அவர் விஜய்குமார் மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது.

இயக்குநர் தமிழ் எழுத்தாளர்களுக்கு தர வேண்டிய மரியாதையும், கௌரவத்தையும் அளித்தபோது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

திரைப்படம் என்பது கலைகளின் கூட்டு முயற்சி. அதுபோன்ற தளத்தில் எழுத்தாளர்கள் பணியாற்றும்போது அது இன்னமும் மேம்படும். வேறு வகையிலான அடுக்குகளுடன் முன்னேற்றம் பெற்று மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது.  அந்த வகையில் இந்த எலக்சன் திரைப்படம் ஒரு யதார்த்தவாத திரைப்படமாக… அரசியலை தீவிரமாக பேசக்கூடிய.. அதனை எளிய மனிதரின் பார்வையிலிருந்து பேசக்கூடிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். மக்களும், ரசிகர்களும், ஊடகமும் இதனை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

அழகிய பெரியவன் , தகப்பன் கொடி, வல்லிசை, யாம் சில அரிசி வேண்டினோம், சின்னக்கொடை ஆகிய நாவல்களையும் 10 சிறுகதைதொகுதிகள், 4 கவிதை தொகுப்புகள் மற்றும் 8 கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் சிறந்த நாவல், சிறந்த கவிதை நூல் பரிசுகள், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கிய பெருமன்ற பரிசு, தலித்முரசு கலை இலக்கிய விருது, கணையாழி குறுநாவல் பரிசு உட்பட மேலும் பல பரிசுகளும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.