இசைமைப்பில் இருபத்தைந்து

ஹிப்பாப் ஆதியின் பிடி சார், மே 24 முதல்

102

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் பாப் ஆதி நடித்து இசையமைத்திருக்கும் பி டி சார் திரைப்படம் ஆதியின் இசையமைப்பில் வரும் இருபத்தைந்தாவது திரைப்படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.

யூடியூப் கண்டண்ட் மேக்கரான கார்த்திக் வேணுகோபால் எடுத்துக்கொண்டுபோன கதை ஆதிக்கு பிடித்துப்போக,  அதை ஐசரி கே கணேஷிடம் அரைகுறை மனதுடனே ஹிப்பாப் ஆதி எடுத்துச்செல்ல, அட இப்படிப்பட்ட கருத்தை நாம்  தான் சொல்லவேண்டும் என்று உடனே அப்படத்தை ஆரம்பிக்கச்சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஐசரி கே கணேஷ்.

” முதல்பட இயக்கு நராக இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனம் அமையும் என்றோ,  கதைக்கு தேவையான அத்தனை விஷயங்களும் முழுமையாக கிடைக்குமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை..” என்று நெகிழ்ந்தார் கார்த்திக் வேணுகோபால்.

” ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின் அரண்மனை 4 க்கு இசையமைத்தேன். அந்தப்பாடல்களும் இசையும் பெரிய வெற்றிபெற்றிருக்கிறது. அதைப்பார்த்துவிட்டு இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அதைப்போல இசை வேண்டும் என்று கேட்டார். இந்தப்படத்திற்கு அவர் கேட்டதை விட, சிறப்பாக இசையமைத்திருக்கிறேன். கடந்த வாரம் சர்பரைசாக வெளியிடப்பட்ட ஆல்பம் த்திற்கு கிடைத்த வரவேற்பில் நெகிழ்கிறேன். ரேட்டிங்கில் டாப் 10 க்குள் எனது இசையில் உருவான  நான்கு பாடல்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ஆசிரியர், மாணவர்கள் என்று மட்டுமில்லாமல், அதைத்தாண்டிய உணர்வுபூர்வமான விஷயமும் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு ஒரு காட்சிக்கு பின்னணி இசை கொடுத்துக்கொண்டிருந்தபொழுது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்… இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தபடமாக இருக்கும்..” என்றார் ஆதி.

“ இவரை நடிக்க கூப்பிடலாமா வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே பலரும் என்னை அழைக்காமல் இருக்கும்  நிலையில். என்னுடைய அரசியல் பயணம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை பார்த்து விலகிச்சென்றுவிடாமல், இந்தக்கதாபத்திரத்திற்கு  மதுவந்தி தான் வேண்டும் என்று கேட்டு எனக்கு இப்படத்தில் நடிக்க ஒரு நல்ல கதாபாத்திமும் கொடுத்த இயக்கு நர் கார்த்திக் வேணுகோபாலுக்கு நன்றி..” என்றார் மதுவந்தி.

இந்தப்படத்தில் கஷ்மீரா பர்தேசி நாயகியாகவும், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அனிகாவும், ஆதியின் தங்கையாக பிரணிகாவும் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மே 24 ல் வெளியாக விருக்கும் பி டி சார் படத்தின் முன்னோட்டத்தை கண்டுகளியுங்கள்.