அர்ஜுன் தாஸ், சிம்மக்குரலோன் – 2

174

– a K.Vijay Anandh

தமிழ்த்திரையுலகைப் பொருத்தவரை, எத்தனையோ வசீகரக் குரல் வளத்துடன் பல நூறு நடிகர்கள் பல நூறு பாடகர்கள் என்று இருந்தாலும், அன்றைய தலைமுறைக்கு சிம்மக்குரலோன் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.

அவருக்குப் பிறகு அவரது கலை உலக வாரிசாக கமல்ஹாசன் அறியப்பட்டாலும் அவர் விட்டுச் சென்ற சிம்மக்குரலோனுக்கான நாற்காலி,    அர்ஜுன் தாஸின் வருகைக்காக, மிக நீண்ட வருடங்கள் காத்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்று சொல்வதற்கு ஏற்ப, பெரிய ஆஜானுபகுமான உடற்கட்டோ, ஆறடிக்கு மேல் உயரமோ இல்லை தான், ஆனாலும் இவரது குரலுக்கு ரசிகர்கள் அடிமையாகி போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பக்கம், நல்ல குரல் வளம் நல்ல துடிப்பான தோற்றம் என்று இருந்தாலும் கடந்த 13 வருடங்களில் இவர் நடித்திருப்பது 13 படங்கள் தான். வரும் வாய்ப்புகளை எல்லாம், ஒத்துக் கொண்டு நடிக்கும் ரகம் இல்லை இவர். வரும் தயாரிப்பாளர்களிடமெல்லாம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஆங்காங்கே முதலீடு செய்யும் நடிகரும் அல்ல அவர்.

அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் பெயர்களை கேட்டால், பெரும்பாலும் அன்பு, ராமகிருஷ்ணன், சதாசிவ பாண்டியன், மணிமுத்து என்று மிகவும் சாந்தமான ஆன்மீகத் தொடர்புடைய பெயர்களாகவே அமைந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் இவர் நாயகன் கதாபாத்திரங்களை ஏற்று நடத்திருக்கும் படங்களில், ஒரு சித்தரைப் போலவே இவரது நடை உடை பாவனைகள் இருக்கின்றன. மிகப்பெரிய உதாரணமாக சதாசிவ பாண்டியன் எனும் சித்த மருத்துவராக இவர் நடித்திருக்கும் ரசவாதி படத்தினை குறிப்பிடலாம்.

தனது கம்பீரக் குரலாலேயே தமிழகத்தின் டாப் ஸ்டார்களான  விஜய் மற்றும் அஜித்துடன்  வில்லனாக மோதியாகிவிட்டது.

அந்த வரிசையில், விஷால் வெங்கட் என்கிற இளம் படைப்பாளியின் இயக்கத்தில் இவர் நடித்து இன்று வெளியாகும் படம் பாம்.

தவளை, நரி, கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகள் எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருக்கும். அதனால், காட்டில் எந்த சலசலப்பும் தோன்றுவதில்லை. ஆனால், சிங்கம் எப்பொழுதாவது தான் கர்ஜிக்கும். அதன் ஒத்தை கர்ஜனையிலேயே காடுகள் கிடுகிடுத்துப் போகும், பிற விலங்குகள்,  தெறித்து ஓடும். இந்த ஒரு கூற்றை கவனித்து தான் , அர்ஜுன் தாஸை வைத்து பாம் படத்தை கொடுத்திருக்கிறாரோ என்று என்ன தோன்றும் அளவிற்கு அர்ஜுன் தாஸையும் அவரது குரலையும் மிகச் சரியான விதத்தில் மிகச் சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கிறார், விஷால் வெங்கட்.

முதலாவது சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனுக்கும் இரண்டாவது சிம்மக்குரலோன் அர்ஜுன் தாஸுக்கும் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அந்த காலகட்டங்களில் நாடகத்திலிருந்து வந்த சினிமா கதாநாயகர்களை படம் முழுவதும், பக்கம் பக்கமாக வசனம் எழுதி பேச வைத்துக் கொண்டிருக்கும்.

இன்றைய காலகட்ட சினிமா, மிகவும் அளவோடு பேச வைத்து அழகு பார்க்கும். படம் முழுவதும் வந்தாலும் பாம் படத்தில் அர்ஜுன் தாஸுக்கு,  நாலைந்து பக்க வசனங்கள்தான்.  பெரும்பாலும் அவர் பேசுவது பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட கேட்காத அளவிற்கு மென்மையாக பேசிக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், எப்பொழுது பார்த்தாலும் ஊளையிட்டுக் கொண்டு ஊர் ரெண்டு பட்டுபோய்க் கிடக்கும் வரை வைத்துக் கொண்டிருக்கும் குள்ளநரிகளை, ஒரு மூன்று நிமிட கர்ஜனையில் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறார்.

காளி வெங்கட்சொல்லுவார் , ” உன் குரலுக்கு நீ எல்லாம் மேடையில நின்னு பேசினா ஊரே கேட்கும்  ..” என்று. அந்தக் காட்சியில் கைதட்டுகிறார்கள் ரசிகர்கள் .

அதுவே அர்ஜுன் தாஸின் குரல் வளத்திற்கு ஒரு சோற்றுப்பதம்!

சந்தேகமே இல்லாமல் அர்ஜுன் தாஸ், இரண்டாவது சிம்மக்குரலோன் தானே!