பாம்

mysixer rating 4/5

199

a K Vijay Anandh review

காளகண்மாய் பட்டி, என்று ஒரே ஊராக இருந்தது அவரவர் வழிபாட்டு முறைகளால் காளப்பட்டி கண்மாய் பட்டி என்று இரண்டு ஊர்களாகிப் போனது.  அன்றிலிருந்து பல வருடங்களாக அந்த ஊர்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் முன்னேற்றம் அடைகிறதோ இல்லையோ, இரண்டு ஊர்க்காரர்களின் தொடர் பகையால், கிடைக்க வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தீவு போல துண்டிக்கப்பட்டு பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.

அவ்வளவு ஏன் ஒற்றுமையாக இருந்தது வரை கிடைத்துக் கொண்டிருந்த ஜோதி தரிசனம் எனும் அற்புதம், ஊர் ரெண்டு பட்ட பிறகு கிடைக்காமல் போய்விடுகிறது.

ஊர் ஒன்றுபட, அந்த இரண்டு ஊர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் பெற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கும் காளி வெங்கட். விரக்தியின்  உச்சத்திற்கு சென்று மதுவிற்கு அடிமையாகி உயிரை விட்டு ஊருக்கு சாமியாகி விடுகிறார்.

அடுத்த மூன்று நாட்களுக்கு நடக்கும் சாங்கியங்கள் தான் படத்தின் சுவாரசியமான திரைக்கதை. இறுதியில், இரண்டு ஊர்களும் ஒன்று படுகிறதா ? ஜோதி தரிசனம் கிடைத்ததா ? என்பதை பாம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே அர்ஜுன் தாஸே ஒரு சித்தர் எனும் அளவிற்கு நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், இந்தப் படத்தை இயக்கி இருக்கும் விஷால் வெங்கட் எனும் இந்த இளம் படைப்பாளி, ஆன்மீக குருவாக அற்புதமான செய்தியை இந்த படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்.

சாமியை சுமக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இருவர், ஒருவர் அர்ஜுன் தாஸ் இன்னொருவர் ஷிவாத்மிகா ராஜசேகர். இதில் ஷிவாத்மிகா வின் சாமியை சுமக்கும் ஆற்றலை சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று ஒரு முக்கியமான இடத்தில் பயன்படுத்திக்கொண்ட இயக்குனர் விஷால் வெங்கட்டின் புத்திசாலித்தனத்திற்கு பாராட்டுக்கள்.

சிங்கம் புலி தலைமையில் ஒரு ஊரும், அர்ஜுன் தாஸ் வாழும் ஒரு ஊரும் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொரு ஃபிரேமிலும் அத்தனை கதாபாத்திரங்களையும் கொண்டு வந்து ஒரு கிராமிய திருவிழா போன்று இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட்.

பூவையார் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறிப்பாக கிளைமாக்ஸ்சில் அவர் மனித பிரமிடில் ஏறி உச்சம் தொடும் காட்சிகளில் கைதட்டல்கள் விண்ணை பிறக்கின்றன. அது ஏன் என்பதற்கான விடைகளை படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளும் பொழுது கண்களும் கலங்கலாம்.

வழக்கம்போல, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை காளி வெங்கட் சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஷிவாத்மிகா ராஜசேகர், நாம் தொலைத்துக் கொண்டிருக்கின்ற, கிராமத்து வீரமங்கை கதாபாத்திரம் ஒன்றில் அற்புதமாக பொருந்தி போயிருக்கிறார்.

அர்ஜுன் தாஸ், காடுகளில் பல்வேறு விலங்குகள் சத்தமிட்டுக் கொண்டிருக்கும், எப்பொழுதாவது கேட்கும் சிங்கத்தின் கர்ஜனையை தொடர்ந்து அத்தனையும் அமைதியாகும். அதுபோலத்தான், இந்த படத்தில் கதையே இந்த வரிக்குள் அடங்கிவிடும் அளவிற்கு, அர்ஜுன் தாஸின் குரலுக்கு மரியாதை என்பதாக பாம் படம் வெளியாகி இருக்கிறது.

கலெக்டராக வரும் அபிராமி உள்ளிட்ட அத்தனை கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

உண்மையாகவே இந்த படத்திற்கு விமர்சனம் செய்வதோ எழுதுவதோ ஒரு மிகப்பெரிய சவால், முழுக்க முழுக்க படத்தின் காட்சிகளை, டி இமானின் பின்னணி இசைகளோடு அவரது இசையில் அமைந்த பாடல்களோடு அணு அணுவாக ரசிப்பதை தவிர வேறு எதுவும் கூறி விட முடியாது எனும் அளவிற்கு, எதார்த்தமாக நடக்கும் விஷயங்களை மிகவும் வித்தியாசமான சிந்தனையுடன் காட்சிப்படுத்தி தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்கு இட்டுச் சென்று இருக்கிறார் விஷால் வெங்கட்.

பாம், உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள ஜோதி !