18 ஜன., அதிரப்போகும் தமிழகம்

38 மாவட்டங்கள், 3800 கலைஞர்கள்

154

– K Vijay Anandh

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலைச்சங்கமம்  என்கிற பெயரில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 3,800 நாட்டுப்புற இயல் இசை நாடக கலைஞர்களை கொண்டு ஒரே நேரத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைச்சங்கமம் குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், ” தமிழக முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இருக்கின்றார்கள். தற்போதைய மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு அவர்களை அடையாளம் கண்டு அரசு சார்பில் அங்கீகாரம் அளிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் முன்னே எப்போதும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் பேருக்கு வாரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவர்களுள் நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நிதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

மேலும், அரசு உதவித்தொகையை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் ஆண்டு முழுவதும், நமது நாட்டுப்புற கலைஞர்களுக்கு வருமானங்களை உறுதிப்படுத்தும் விதத்தில், தமிழகம் முழுவதும்  ஆண்டு  தோறும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில், ஆங்காங்கே வசிக்கும் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களது வருமானம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், பொங்கல் விழாக்கள் முடியும் தருவாயில் ஜனவரி 18 அன்று ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் தலா 100  கலைஞர்கள் என்று கிட்டத்தட்ட நான்காயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது திறமைகளை பொதுமக்கள் கூடும் இடங்களில் வெளிப்படுத்த இருக்கின்றார்கள்.

பறைகள் அதிர, இசைக்கருவிகள் முழங்க, ஒயிலாட்டம் மயிலாட்டம் என்று அனைத்து விதமான கிராமிய கலைஞகளும் அரங்கேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவிருக்கின்றன.

அன்றைய நிகழ்வில், பொதுமக்களுடன் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என்று மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பிக்க இருக்கின்றனர்… ” என்றார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் விஜயா  தாயன்பன், “வருகிற 22.01.2026 மாலை 6 மணியளவில் சென்னை, ராஜாஅண்ணாமலை புரம், முத்தமிழ் அரசவையில் இயல் சங்கமமும், 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டிய சங்கமமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. பொதுமக்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்து கொண்டு நமது பாரம்பரிய கலைகளை வளர்க்கும் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்…” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சிறப்பு கவனம் செலுத்தி நமது பாரம்பரிய கலைகளை வளர்ப்பதுடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் என்று குறிப்பிட்ட வாகை சந்திரசேகர், ” தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் நமது கிராமிய கலைஞர்களை அழைத்துச் சென்று தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன …” என்று கூறினார்.

கலை பண்பாட்டு இயக்ககம், சார்பாக 1955 இல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதை , 1973 இல் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி, தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், இயல் இசை மற்றும் நாடகம் என்று பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாக 3 குணங்களிலும் தனித்துவமாக திகழும் தமிழின் தொன்மையை பறைசாற்றும் விதமாகவும் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் என்று மாற்றியதை, வாகை சந்திரசேகர் நினைவு கூர்ந்தார்.