a K Vijay Anandh review
500 கோடி வசூல் ஆகும் படங்கள் எடுப்பது எளிது. 500 கோடி கொடுத்தாலும் எடுக்க முடியாத படங்களும் இருக்கின்றன, அதாவது முதல் முயற்சியில் .
அப்படிப்பட்ட படமாக ஜாக்கி வெளியாகி இருக்கிறது. மதுரையின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், திரையில் கிடா சண்டையை காட்டி அசத்தி இருக்கிறார்கள்.
கிடா சண்டையும் மதுரையின் தொன்மையான மற்றும் பாரம்பரியமான விளையாட்டு தான். அதனை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று மதுரையில் இருந்து வந்த படைப்பாளிகளுக்கு ஏன் தோன்றவில்லை என்கிற ஆச்சரியம் மேலோங்குகிறது.
அதிலும் மூன்று வருட ஆராய்ச்சி மற்றும் கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு, ஒரு சில முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர முழுக்க முழுக்க மதுரை சுற்றுவட்டார நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்தி ஜாக்கி என்கிற அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் டாக்டர் பிரக்பால்.
சிவகுமார் ஸ்ரீபிரியா நடித்த ஆட்டுக்கார அலமேலுவிற்கு பிறகு, கம்பீரமான கிடாக்களுடன் வந்திருக்கும் அற்புதமான படம் ஜாக்கி.
வழக்கமான ஃபார்முலா தான்.
கிடா சண்டை, தனது கிடா தோற்றுப் போனதை தாங்க முடியாத வில்லன் நாயகனின் கிடாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று வெறியுடன் அலைவது, நடுவில் ஒரு காதல் என்று வழக்கமான ஃபார்முலா என்றாலும் மிகவும் உணர்ச்சி பெருக்குடன் விறுவிறுப்பாகவும் சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வண்ணமும் இயக்கியிருக்கிறார்கள்.
நாயகன் ராமராக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா நாயகி அம்மு அபிராமி ஆகியோருக்கு இடையிலான காதல் மலரும் காட்சிகள் அற்புதம்.
வில்லன் ரிதன் கிருஷ்ணாவும் மிரட்டி இருக்கிறார்.
சரண்யா ரவிக்கு நாயகனின் அக்கா வேடம். கிடா சண்டை கிடா சண்டை என்றுதான் அப்பாவையும் புருஷனையும் இழந்து நிற்கிறேன் நீயும் அப்படி திரியாத டா… என்று அழும் இடங்களில் சரண்யா ரவி மதுரைக்கார யதார்த்த தமிழச்சியாக அற்புதமான நடித்திருக்கிறார்.
வில்லனுடன் வரும் துணை நடிகர்களும், குறிப்பாக பத்மன் கிடாவை பயிற்றுவிக்கும் ஆசனாக சிறப்பாக நடித்து இருக்கிறார்.
இயக்குனருடன் இணைந்து சூரிய பாண்டியன் சூரிய பாலா ஆகியோர் எழுதியிருக்கும் மதுரை தமிழை கேரளாவில் இருந்து வந்திருந்தாலும் பிழை இல்லாமல் பேசி ரசிக்க வைத்திருக்கிறார்கள் நாயகனும் வில்லனும்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவில் கிடா சண்டைகள் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மதுரை அருகே இருக்கும் ஆனைமலை அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகள், ஆனைமலை பின்னணியில் காட்டப்பட்டு இருக்கும் காட்சிகள் என்று சபாஷ் போட வைத்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் முக்கியமான மூன்று கிடாக்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்து, ஆக்ரோஷமாக சண்டை போட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கின்றன.
ஜாக்கி, சர்க்கரை பொங்கல்!