2026 தமிழ் சினிமாவுக்கு சூப்பரா இருக்கப்போகுது !

86

கடந்த வருடத்தில் ஒரு சில நேரடித்தமிழ்ப்படங்களே வெற்றிபெற்றன. மிழில் டப் செய்யப்பட்டு வெளியான பிறமொழிப்படங்கள் கூட மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றியை கொடுக்காத ஆண்டாகவே 2025 கடந்து சென்றது.

சனி விலகும் நேரம் நன்மை பயப்பார் என்று சாதகத்தில் சொல்வதுண்டு . அதைப்போல டிசம்பர் 25, 2025 இல் வெளியான நேரடி தமிழ்ப்படமான சிறை வெற்றியை ருசிக்க ஆரம்பித்தது. 2026 பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் , சென்சார் பிரச்சினையால் தள்ளிப்போக , திடீர் வரவாக வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 2026 ஜனவரியை வெற்றிகரமாக தொடங்கி வைத்தது.

பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கும் வித் லவ் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

படங்கள் வெற்றிபெறுவது என்பதை தாண்டி , தமிழ்த்திரைப்படத்துறைக்கு சாதகமான பல அறிவிப்புகள் ஜனவரி மாத இறுதியில் வெளியாகின.

குறிப்பாக ஜனவரி 30 மற்றும் 31 ஆகி இரண்டு நாட்கள் 2026 இல் தமிழ் சினிமா சிறப்பாக இருக்க போகிறது என்பதற்கான அச்சாரமாக விளங்கின என்றால் அது மிகையாகாது.

ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றி விழா சந்திப்பில் , அதன் தயாரிப்பாளர் கண்ணன் ரவி , ” இந்த வருடம் 20 படங்கள் தயாரிக்கவிருக்கிறேன் . ஒவ்வொரு படமும் உலக அளவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும். தமிழ்ப்படங்கள் குறிப்பாக தமிழர்கள்ங்கெல்லாம் இருக்கிறார்களோ அந்தந்த நாடுகளில் வெளியாகும் ..” என்று இனிமையான அறிவிப்பை வெளியிட்டார்.

ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற வித் லவ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் , தயாரிப்பாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் , ” 16 ஆண்டுகளுக்கு பிறகு படம் தயாரிக்கின்றேன் . இனிமேலே இடைவெளி இருக்காது. தம்பி மகேஷ் ராஜுடன் இணைந்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க போகிறேன் ..” என்றார்.

சூப்பரு என்று நினைத்து கொண்டிருந்த போதே , பிப் 2 ஆம் தேதி நடைபெற்ற ரெட் லேபிள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் ஜோதிட ஆர்வலருமான அனுமோகன், ” இந்த வருடம் எல்லா ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகுதோ இல்லையோ . ஒட்டுமொத்தமாக கலைக்கு குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு நல்ல வருடமாக அமையப்போகிறது ..” என்று தெரிவித்தார்.

மொத்தத்தில் , 2025 லேயே படம் ஆரம்பித்தது இப்பொழுது வெளியீட்டுக்காக காத்திருப்பவர்களும் , நல்ல கதையம்சத்துடன் பொருளாதார வசதியும் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் படங்களை ஆரம்பித்து, திட்டமிட்டு தயாரித்து வெளியிடவும் செய்யலாம்.

இவை நீங்களாக, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் லீடர், பெரிய எதிர்பார்ப்புடன் போஸ்ட் ப்ரொடக்ஷன் இல் இருக்கும், அறிமுக இயக்குனர் சூரிய பிரதாப் இயக்கி கௌதம் ராம் கார்த்திக் நடித்திருக்கும் ROOT படம், நெல்சன் இயக்கத்தில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம், தயாரிப்பில் இருக்கும் தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் தாய்க்கிழவி இயக்குனருடன் இணையப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் படம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் அஜித் படம், ஒளிப்பதிவாளர் செழியனின் முயற்சியால் ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்ட 34 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் 34 புதிய திரைப்படங்கள் என்று தமிழ் சினிமா  மிகவும் முழுவீச்சுடன் தனது பயணத்தை 2026 இல் தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது.

குறைந்தபட்சம் வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்கள் புழங்கும் , பல லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கும் தமிழ் சினிமா நன்றாக இருந்தால் , நமக்கு பெருமை தானே !