a K Vijay Anandh review
கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் – களேபரம் – முன்னாள் மாணவர் தலைவர் வருகை – காதல் – ஒரு பிணம் அதை மறைக்க போராடும் இரண்டாம் பாதி என்று
கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால் , மிகவும் அருமையான உத்திரவாத வெற்றித்தரக்கூடிய பார்முலா மட்டுமல்ல எவர்கிரீன் பார்முலாவும் கூட.
அதற்கேற்றமாதிரியே , காதலும் – மாணவர் மோதலும் என முதல்பாதி கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது.
மாணவர் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் , டெரரான அரசியல்வாதியாக ஆர் வி உதயகுமார் அறிமுகம், அதன் பிறகு தான் நாயகன் அறிமுகமாகிறார். லெனினின் , வயதுக்கேற்றவாறு அவரை முன்னாள் மாணவராக்கி , கல்லூரிக்குள் அழைத்து வந்திருப்பது திரைக்கதையின் புத்திசாலித்தனம்.
நம்மவர் பட கமல்ஹாசன் மாதிரி , லெனின் கல்லூரிக்குள் நுழைந்து நல்ல மாணவர்களின் பக்கம் நிற்கிறார், தேர்தல் சூடுபிடிக்கிறது. நாயகி அஸ்மின் , 2019 ல் கல்லூரி மாணவர் தலைவனாக இருந்த , லெனின் 2024 இல் மறுபடியும் கல்லூரிக்கு வரும் வரை அங்கேயே படித்து கொண்டிருக்கிறார்.
விளம்பர பேனர்கள் தயாரிக்கும் வேலை செய்துகொண்டிருப்பதாக நாயகனை காட்டியிருப்பதும் , திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
லெனின், அவர் தான் தயாரிப்பாளர் ஆகவே , அவருக்கு மிகவும் பொருத்தமான கதையை தேர்ந்தடுத்திருக்கிறார். அவரை யார் கட்டிப்பிடிக்க வந்தாலும் , ஸ்டைலாக ஒரு கையால் தடுத்து தள்ளுவது சுவாரஸ்யமான மேனரிசம்.., ஆனால் , ஒருவர் மட்டும் விதிவிலக்கு, யார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . அஸ்மின் , அழகும் திறமையும் மிக்க கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்.
பிணத்தை மறைக்க போராடும் இரண்டாம் பாதி , மகளிர் மட்டும் , பஞ்ச தந்திரம் வரிசையில் ரெட் லேபிள் , இதுவும் ரசிகர்கள் விரும்பும் கதைக்களம் தான் . கிரேசி மோகன் எழுத்தில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கும் . இதில் , பொன் பார்த்திபன் அதனை , கொஞ்சம் சீரியசாக்கிவிட்டார், ஆனாலும், ஆள் மாறாட்டம் செய்யும் நாயகி , புதையல் தேடிச்செல்லும் மாணவர்கள் என்று ஆங்காங்கே சிரிப்பும் பதட்டமும் ரசிகர்களை தொற்றிக்கொள்கிறது.
நம்ம ரசிகர்கள் ஹேப்பி எண்டிங்குக்கு பழக்கமானவர்கள், நாயகனை விட்டுவிட்டு நாயகி ஜெயிலுக்கு அதுவும் கொலை கேசில் செல்வதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
உங்களுக்கு என்ன பெண்ணின் கைரேகை தானே வேண்டும் ? அதான் , வில்லனால் கணவனை இழந்த ஒரு பெண் , உயரதிகாரியிடம் கம்ப்ளெயிண்ட் செய்து தானே போலீஸ் வில்லனை தேடி கல்லூரிக்கு வருகிறது ? எம் எல் ஏ மருமகன் எப்படியும் கைது செய்ய மாட்டார்கள் என்று முடிவு செய்து , அவள் மூலம் ஒரு பிளான் பி வைத்திருக்கலாமே இயக்குநர் கே ஆர் வினோத் ?
ஆர் வி உதயகுமார் , வில்லத்தனத்தில் ஜொலிக்கிறார் , அவரது உதவியாளராக வரும் அனுமோகன் அவரது கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப , சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார், ஆனாலும் காமெடி குறையவில்லை.
எழுத்தாளர் , பொன் பார்த்திபனும் , இந்தப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார், நன்றாகவும் நடித்திருக்கிறார்.
நாயகன் கழுத்தில் வில்லன் கத்தி வைக்கும் போது , ஊரே திரண்டு வந்து நிற்பது எல்லாம் மாஸான காட்சி அமைப்புகள்.
மற்றபடி , நமது வெற்றிக்கொண்டாட்டம் யாரை தோற்கடித்தோமோ அவர்களை பெரிய ஆள் ஆக்கிவிடும் அளவிற்கு இருக்கக்கூடாது என்பன போன்ற வசனங்கள் அற்புதம். அதை லெனின் சொல்லும் போது , கெத்தாகவே இருக்கிறது.
கைலாஷ் மேனனின் இசை , மிகவும் அருமை , பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
ரெட் லேபிள் , ஒரு முறை அருந்தலாம் !