சேரனுக்கு செவிமடுக்குமா அரசு ?

4th Floor பட விழாவில் பரபரப்பு

80

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில்,  ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக,  கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்,  இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  இயக்குனர்  – நடிகர், சேரன் பேசும் பொழுது, “திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.
“திருப்பூர் புரொடியூசர்ஸ்” என்று ஒரு படம் பண்ணலாம் என்கிற அளவிற்கு எனக்கு அனுபவம் இருக்கிறது. திருப்பூரில் இருந்து நிறைய பேர் வருவார்கள் ஆனால் யாரும் படம் செய்ய மாட்டார்கள், நான் பார்த்தவரை. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா படத்தை எடுத்து முடித்ததோடு அல்லாமல் வெளியீட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறார்.

இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். வேறு யாருக்கும் அல்ல, நீங்கள் பெற்ற இரண்டு மகள்களுக்கும் விசுவாசமாக இருந்து விட்டாலே போதும்,  வெற்றி தானாக தேடி வரும்.

4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார் டிசைனர் அவருக்கு வாழ்த்துக்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது.

படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள் இதுபோன்ற சிறிய படங்களுக்கு திரையரங்குகளில் ஒதுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் திரையரங்குகளுக்கு தேவையான வாடகையை கொடுத்து விடுவார்கள். மாதம் 24 படங்கள் என்றாலும் மூன்று மாதங்களுக்கு 72 படங்களுக்கு வெளியாவதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. தயாரிப்பாளர்களும் பிழைத்துக் கொள்வார்கள், திரையரங்குகளுக்கும் நஷ்டம் இல்லை.

அரசாங்கத்திடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் ,  வேறு துறைகளில் சம்பாதித்து அதற்கு வருமான வரி கட்டி, திரைப்படமும் எடுக்க வருகிறார்கள். ஒரு படம் எடுக்கப்படும் பொழுது, சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் வரி கட்டுகிறார்கள்.

ஆக, எப்படி பார்த்தாலும் அரசுக்கு வரிகள் மூலம்  வருமானம் வருகிறது. வரிகட்டும் ஒவ்வொருவருக்கும் அவர்களது அடிப்படை தேவையை செய்து கொடுப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை. அந்த வகையில், திரைப்படத்துறைக்கு என்று தனிக் கவனம் செலுத்தி இது போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளியாவதற்கு உகந்த சூழலையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

நான் மட்டும் குரல் கொடுத்தால் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவதாக எடுத்துக் கொள்ளப்படும். நாம் சேர்ந்து பேசினால் கோரிக்கையாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சாதகமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

இது குறித்து அரசாங்கம் தயாரிப்பாளர்களை அழைத்து பேசுவதாக இருந்தால் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்…” என்றார்.

பிரஜின், இயக்குனர் சேரனின் குரலுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறிக்கொண்டார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, ” சினிமா துறைக்கு பொற்காலம் ஏற்படும் பொருட்டு தவமாய் தவமிருந்து யோசனைகளை சொல்லி இருக்கிறார் சேரன். அவரது ஆலோசனைகள் செயல்பாட்டிற்கு வந்தால் திரைப்படத்துறை வெற்றிக்கொடி கட்டும் ” என்று சேரனின் படத் தலைப்புகளை வைத்தே அருமையாக பேச ஆரம்பித்தவர், ” ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, காலம் கடந்து தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்துவிட்டார். அவர் மறுத்தது ஒரு செய்தி, காலங்கடந்தும் பெற்றுக் கொண்டவர்கள் நோபல் பரிசு பெற்றுக்கொள்ள அவரை வற்புறுத்தியதும் ஒரு செய்தி, பெர்னாட் ஷா ஏற்றுக் கொண்டது ஒரு செய்தி, அதன் பின் நோபல் பரிசை வாங்கியதும் ஒரு செய்தி ஆக ஒரே சம்பவத்திற்கு தொடர்ந்து நான்கு செய்திகள் என்று அந்த சூழ்நிலையை பரபரப்பாக அமைந்தது. காலம் கடந்து இது போன்ற அங்கீகாரங்கள் கொடுக்கப்படக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்தேன் என்பதாக பெர்னாட்ஷா அறிவித்தார்.

அதைப் போலவே, கலைஞர்களுக்கு அவர்களது முழு திறமையும் இருக்கும் பொழுது வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்…

எம்ஜிஆர் கூட மர்மயோகி என்கிற படத்தில் நடித்த பிறகு 9 ஆண்டுகள் கழித்து தான் திரும்பவும் நடிக்க ஆரம்பித்து வெற்றி கொடி நாட்டினார் ….

ஆரிக்கும் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது..” என்று பேசினார்.

விழாவில் கலந்துகொண்ட விஜய் மில்டன், பரத், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் 4th ஃப்ளோர் படம் மூலம், ஆரியின் மார்க்கெட் டாப் ப்ளோருக்கு செல்லும் என்று வாழ்த்தினார்கள்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் கதிர் பேச வரும்போது, தன்னுடன் நடித்த அதிகம் பிரபலம் இல்லாத நடிகர்களை மேடைக்கு அழைத்து, ” இவர்கள் எங்கள் படத்தின் ஆடியோ லான்ச் நடக்கிறது என்று வீட்டில் சொல்லி விட்டு வந்திருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்வின் வீடியோக்களை பார்க்கும் பொழுது அவர்கள் எங்கே என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தேடக்கூடும் … ஆகவே அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்..”  என்று கூறி அனைவரையும் மேடை ஏற்றியது நிகழ்வின் நெகிழ்வான தருணமாக அமைந்தது.