a K Vijay Anandh review
சினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களை வெளியிடும் மைசிக்ஸர் .காம் ஆரம்பித்து கடந்த 16 வருடங்களாக தோராயமாக 3200 படங்களுக்கு மேல் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
அடிப்படையில் இயக்குனராகும் முயற்சியில் இருப்பதால், படத்தின் பட்ஜெட் அல்லது பெரிய நடிகர்களாக சிறிய நடிகர்களாக என்று பார்க்காமல், நான் பார்த்த படங்களில் அந்த இயக்குனர்களும், பிற தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் கொஞ்சம் நேர்மையாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விட்டாலும் அதனை சிறிது மிகைப்படுத்தியே எழுதியும் வந்திருக்கிறேன்.
ஆனால், இந்த மை லார்ட் திரைப்படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. வாழ்நாள் முழுவதும் பிறரை வஞ்சித்தும் பொது சொத்துக்களை திருடியும் வாழ்ந்து கொண்டு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று சொல்லிவிட்டால் மற்றதை வள்ளலார் பார்த்துக் கொள்வார் என்கிற ஆகச் சிறந்த மூடநம்பிக்கை இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
அதைப்போல படம் முழுவதும், தனக்கு பிடிக்காதவர்கள் மீது வீண் பழி சுமத்தும் விஷயங்களை பேசிக்கொண்டும் காட்சிப்படுத்திக் கொண்டும், இறுதிக் காட்சியில் வள்ளலார் வள்ளலார் என்று சொல்லிவிட்டால் இந்த படம் மனிதநேயத்தை போதிக்கும் படமாக, வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் புகழை பரப்பும் படமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற மூடநம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது.
வள்ளலார், பசிப்பிணி போக்கிய மகான் மட்டுமல்ல ஆரோக்கியமாக வாழ்வதற்கு சித்த மருத்துவத்தை போற்றியவர், மூலிகைகள் கொண்டு எதையும் குணப்படுத்தலாம் என்று ஆழமாக நம்பியவர். குறிப்பாக, அவரது கரிசலாங்கண்ணி மருத்துவம் , அவரை பின்பற்றபவர்கள் மத்தியில் பிரசித்தம். படத்தில் நோய்வாய் பட்ட தம்பதியினர், அதுபோன்ற ஒரு மருத்துவத்தை நாடியதாக தெரியவில்லை.
ராஜுமுருகன் பணியாற்றிய பத்திரிகை போடும் மார்க் என்பது திரைப்படங்களுக்கு கிடைக்கும் உயரிய அங்கீகாரம் போன்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அந்த மதிப்பெண்களும் சமீபத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றன.
ஆனாலும், ராஜுமுருகன் இயக்கிய இந்த படத்திற்கு, ஐந்திற்கு ஒரு மதிப்பெண் கொடுக்கலாம்.
இந்தப் படத்திலும் ஒரு புத்திசாலித்தனம் ஒளிந்திருப்பதாக கருதுவதால், இந்த ஒரு மார்க் வழங்கப்படுகிறது.
பொதுவாக, மை லார்ட் என்பது நீதிமன்றத்தில் புழங்கப்படும் ஒரு வார்த்தை, நீதிபதிகளை குறிப்பட்டு வழக்குரைஞர்கள் பேசும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
இந்த படத்தின் போஸ்டர்களை பார்க்கும் பொழுதும் இது நீதிமன்ற தொடர்புடைய தலைப்பு என்றுதான் நாமும் புரிந்து கொள்வோம்.
ஆனால், மத்திய அமைச்சர் அதாவது வடக்கு அவர்கள் வழிபடும் தெய்வம் வேறு, தென்னகத்தைச் சேர்ந்த நாயகன் குறிப்பாக தமிழ் நாட்டு நாயகன், வழிபடும் தெய்வம் வேறு என்பதை சொல்வதாக அமைந்த தலைப்பே My Lord என்று நான் புரிந்து கொள்கிறேன்.
ஏனென்றால், நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டு கொண்டிருக்கும் மத்திய அமைச்சருடன் ஒரு பெண் எப்பொழுதும் பஜன் பாடிக்கொண்டே இருப்பார் அல்லது சமஸ்கிருத மந்திர உச்சாடனம் செய்து கொண்டே இருப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியில், மை லார்ட் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய, பசிப்பிணி போற்றிய வள்ளலார் ராமலிங்க அடிகளார், எங்கள் கடவுள்,( எனது கடவுள் My Lord ) மனிதநேயத்தை சொல்லிக் கொடுத்துள்ளார் என்று சசிகுமார் பேசும் வசனத்துடன் படம் நிறைவடைகிறது.
அதாவது ராமன் உனது கடவுள் வள்ளலார் எனது கடவுள் my lord vallalar, என்று சொல்லாமல் சொல்வதாக…
அந்த ஒரு மடைமாற்றும் டைட்டில் விளையாட்டுக்கு ஒரு மார்க்
மற்றபடி, விரிவான விமர்சனத்தை மூத்த பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகர் ஆர் எஸ் கார்த்திக் சேனலில் பார்த்து மகிழுங்கள்.