வேட்டி கட்டிய விருமாண்டி பேண்ட் சர்ட் போட்டு சண்டியராக!

படப்பிடிப்பு ஆரம்பம்

10

கமல்ஹாசன்-ன் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சிறப்புமிக்க நாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, நேற்று (நவம்பர் 6) தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ என்பதை வெளியிட்டனர். இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்துக்கான கமல்ஹாசனின் Look Test புகைப்படங்கள் பெரியளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 7)படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ‘சண்டியர்’ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

தனித்துவமான கதைசொல்லல் முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், தலைமுறைகளைக் கடந்து சினிமாத் துறையில் தனது பன்முகத்தன்மை, கலைத் திறன் மற்றும் புதுமைகளுக்காகக் கொண்டாடப்படும்  கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார். இந்த இரு படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சண்டியர்’ திரைப்படத்தில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியாக, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், அன்பரிவ் சண்டை பயிற்சி இயக்குநர்களாகவும், கே. எஸ். சுனில் ஒளிப்பதிவாளராகவும், சி. எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் மற்றும் அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பாளராகவும் இந்தப் படத்தில் பணியாற்றுகின்றனர்.

‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில்  கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

நவம்பர் 6-இல் தலைப்பு வெளியீடு மற்றும் நவம்பர் 7-இல் படப்பிடிப்புத் தொடக்கம் ஆகியவற்றுடன், இத்திரைப்படம் கமல்ஹாசன் -ன் பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு மைல்கல்லாகவும், அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டணிக்கு ஒரு சிறந்த தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

2004 இல் விருமாண்டி படம் வெளியானது, அதற்கு, அந்தப்படம் ஆரம்பித்த போது கமல்ஹாசன் வைத்த பெயர் சண்டியர் என்று பெயர் சூட்டியபோது,  சாதிக்கலவரத்தை உண்டுபண்ணும் டைட்டில் ஆகவே தடை செய்யவேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் போராட்டம் அது இது என்று அறிவிக்க, சண்டியர் , விருமாண்டி ஆகி படமும் பெரிய வெற்றி பெற்றது.  அதே காலகட்டத்தில் சண்டியர் என்று வேறு ஒருவரின் படமும் வந்தது. ஆனால், ஒரிஜினலாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பதிவு செய்த தலைப்பு சண்டியர், 2004 க்கு பிறகு 22 வருட காத்திருப்புக்கு பிறகு அதற்கு இப்பொழுது தான் காலம் கனிந்திருக்கிறது போலும்.

தொடைக்கு மேலா தூக்கிகட்டிய வேட்டியோடு அதகளம் செய்த விருமாண்டி, இன்று பேண்ட் ஷர்ட்டுடன் கைகளில் குறுவாள்  சகிதம் அட்டகாசமான தோரணையில் சண்டியர் படத்தின் முதல்பார்வையிலேயே ரசிகர்களை கிறங்க அடித்திருக்கிறார்.