Scene

Rating 4/5

42

a K Vijay Anandh review

ஏதாவது வித்தியாசமாக செய்பவரை பார்த்து, சீன் போடுறான் டா … என்று சொல்வோம். இன்பராஜாக சூர்யா நெஜமாகவே சீன் போட்டிருக்கிறார், அதுவும் சீனுக்கு சீன். டொமினோ தாமஸ் , சூர்யாவை ஜெயிலுக்கு வரவழைத்து இது எத்தனை என்று இரண்டு விரல்களை காட்டுவது வரை மனிதர், பார்வையை இழந்துவிட்டார் என்பதை ஊகிக்க கூட முடியவில்லை. கருப்பு, விஸ்வநாதன் &  சன்ஸ் என்று வசூல் ரீதியிலான ஹிட்டுகள் கொடுத்திருக்கலாம், சூர்யா. ஆனால், ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இன்னும் சொல்லப்போனால், காக்க காக்க, கஜினி போன்ற படங்களுக்கு பிறகு ஒரு அட்டகாசமான படமாக நடித்திருக்கிறார் என்றால் அது சீன் தான்.

கண் தெரியாமல் எப்படி காவல்துறையில் பணியாற்றுகிறார் என்று கிண்டல் செய்வார்கள், உண்மையில் கண் பார்வை குறைய ஆரம்பிக்கும் போதே அவர் அதைக்குறிப்பிடாமல் ராஜினாமா செய்ய மெயில் அனுப்ப, அவர் மீது கொண்ட  அக்கறையாலும் அவரது அசாத்தியமான துப்பறிவு திறனாலும் அவரது மேலதிகாரி லால், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் சூர்யாவுக்கு முழுமையாக பார்வைத்திறன் போயிருக்கிறது.

சூர்யாவிற்கு இந்த அற்புதமான கதாபாத்திரத்தை படைத்த இயக்குனர் ஜித்து மாதவனுக்கு ஒரு சபாஷ்.  149  நிமிடங்கள் ஓடும், சீன் படம், சீன்கள் நகர்வதே தெரியாமல் படமாக்கியிருப்பது வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், திரைக்கதையாக நிறைய கிளைக்கதைகள் எதுவும் இல்லை, ஏற்கனவே ஒரு தொடர் கொலையாளி ஜெயிலில் இருக்கிறான், அவனை மாதிரியே வெளியில் இருந்து ஒருவன் தொடர் கொலைகள் செய்து கொண்டிருக்கிறான். உண்மையான குற்றவாளி சூர்யாவால் அரெஸ்ட் செய்யப்பட்ட விக்டரா அல்லது வேறு ஒருவனா என்று கண்டறிவது தான் ஒட்டுமொத்த திரைக்கதையும்.

நடுவில் நஸ்ரியா வந்து இணைவதிலிருந்து மேலும் சுவராஸ்யம் தொற்றிக்கொள்கிறது.  நஸ்ரியாவின் அப்பாவாக, கஜராஜ், தனது நடுத்தர மற்றும் வயதான தோற்றத்தில், சூர்யாவையே கலாய்ப்பவராக மாஸ் காட்டியிருக்கிறார். அவனுக்கு கண்ணு தெரியாது, அம்மா ஒரு குடிகாரி, அப்பா ஒரு மெண்டல் நம்ம குடும்பத்திற்கு சரிப்பட்டு வராதும்மா என்று பவுடரை உறிஞ்சும் போது தியேட்டர் அதிரும்.

சூர்யாவின் அப்பா ஆனந்த்ராஜும், அம்மாவுமே   திறமையான காவல்துறை அதிகாரிகள் தான். ஆனால், அப்பாவுக்கு மெமரி லாஸ், அம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமை இந்தக்காரணங்கள் ரசிகர்களுக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தலாம், அவர்களோடு சேர்ந்து திறமையான துப்பறிவு போலீஸான சூர்யாவும்  ஏன் பார்வையை இழக்கிறார் என்பதற்கான ஒரு சரியான காரணத்தை இரண்டாம் பாகத்தில் வைத்துவிட்டால், சீன் சூப்பர் டூப்பர் சீன் ஆகிவிடும். ஆமாம், டொவினோ தாமஸ் தப்பிக்கிறார், நஸ்ரியா கண்ணாக நுழைந்து சூர்யாவின் இதயமாக ஆகிப்போகிறார், சூர்யா தனது குறையை ஏற்றுக்கொள்கிறார், ஏற்கனவே அந்த  கூலிக்கு கொலை செய்யும் ஈஸ்வரனும் கூண்டோடு அழிக்கப்படுகிறான் அத்தோடு முதல் பாகம் முடிவடைகிறது. இரண்டாம் பாகத்திற்கான ஒரு எதிர்பார்ப்பும் எகிறிவிடுகிறது.

ஒரு பெண் டெய்லர், ஒரு ஆண் ஆட்டோக்காரன் ஆகியோர் துணையுடன் கூலிக்கு கொலை செய்யும் ஈஸ்வரனாக நடித்திருக்கும் நஸ்லன் மிரட்டியிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக சீன் படத்தில், கோயிலில் மூலவர் சன்னதியின் இரண்டு பக்கமும் இருக்கும் துவாரபாலகர்களாக சூர்யாவை மதிக்கும் இன்ஸ்பெக்டர் சிபி மற்றும் சூர்யாவை பிடிக்காத இன்ஸ்பெக்டர் வினோத் ஆக நடித்திருக்கும் ராஜ்பிரியனும் சுரேஷ் மதியழகனும் செம்ம சீன் போட்டிருக்கிறார்கள்.  இருவரது யதார்த்தமான மற்றும் துடிப்பான ஒரு மாதிரி அப்பாவித்தனமான நடிப்பும் சீன் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இது தான் டா போலீஸ் மாதிரி, இது தான் டா சீனு!