பிரேமலு

mysixer rating 4.5/5

206

a K.Vijay Anandh review

வழக்கமான சினிமாக்களுக்கு உரிய எந்தவிதமான சிறப்பு பட ஆக்கங்களோ , ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களோ , நான் லீனியர் என்று சொல்லப்படும் எடிட்டிங் மாயாஜாலங்களோ இல்லாமல், அம்மாவின் மடியில் நாம் படுத்துக்கொண்டு மணிக்கணக்கில் கதை கேட்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது இந்த பிரேமலு.

அழகாக கதாநாயகன் கதாநாயகிகள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள் மலையாள சினிமாவில் . இந்த நஸ்லின் மமீதா பைஜூ ஜோடி சல்மான் கான் பாக்கியலட்சுமி ஜோடியை நினைவுபடுத்துகிறது.

இந்த படத்தில் யாருமே நடிப்பதற்காக மெனக்கடவில்லை. அவரவர் கல்லூரி பருவத்தையும் அதற்கு அடுத்ததான வேலைக்கு முயற்சி செய்யும் படத்தையும் அப்பட்டமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல, ஆனால் சூப்பராக நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

மமிதா பைஜூவின் அலுவலக டீம் லீடர் உள்ளிட்ட நண்பர்களாகட்டும், நஸ்லீனின் உயிர் தோழன் மற்றும் அவரது சகாக்களாகட்டும் அத்தனை பேரும் இந்த படத்தின் ஆத்மாக்களாக வந்து போகிறார்கள்.

ஒருவர் மீது நமக்கு காதல் வரும் தருணங்களில் முக்கியமானது ஏதோ ஒரு இடத்தில் நம்மை அறியாமல் அவரது மனதை காயப்படுத்தி விடுவது போல பேசி விடுவது. அப்படி ஒரு மன உளைச்சலை மமீதா பைஜூ கொடுத்த அடுத்த அடுத்த நொடியில் இருந்து, நஸ்லின் மீது அவருக்கு காதல் பிறந்துவிடுகிறது அல்லது ஏற்கனவே இனம் புரியாது அவருள் பரவியிருந்த காதல் அடையாளம் பெற்று விடுகிறது.

வெறுமனே காதல் கதையாக இந்த படத்தை எடுத்து விடாமல் உறவுகளுக்குள் ஏற்படும் சச்சரவுகள், படித்து முடித்து பொறுப்பாக வேலை தேடும் காட்சிகள், உள்ளூரிலேயே இருந்து விடாமல் வெளியிடங்களுக்குச் சென்று தங்களது அறிவை விசாலாமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற காட்சி அமைப்புகள்  என்று இயக்குனர் கிரிஷ் AD மிகவும் பொறுப்பான ஒரு படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் தமிழ் பேசி இருந்தாலும் உண்மையில் இதன் மூலம் மலையாளம். ஏன் தமிழ் படைப்பாளிகள்  இவ்வளவு இளமையாக நேர்த்தியாக புத்திசாலித்தனமாக சிந்திப்பதில்லை என்கிற குறை இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது எழுத்தான் செய்கிறது.

பிரேமலு மீது  காதல் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது !!!