Bastar – The Naxal Story / Hindi

mysixer rating 5/5

140

a K.Vijay Anandh review

பஸ்தர், நக்சலைட் ஒழிப்பு பாதுகாப்பு படை வீரர்கள் ஆண்களும் பெண்களுமாக  70 க்கும் மேற்பட்டவர்கள், நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது  நக்சலைட்டுகளால் சுற்றி வளைக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை வசதிகள் இல்லாத பாழடைந்த தங்கும் இடம் தீக்கிரையாக்கப்படுகிறது, தீக்கு பயந்து வெளியே ஓடி வந்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், குற்றுயிரும் குலையுயிருமாக கிடப்பவர்கள் கண்டம் துண்டமாக வெட்டி எறியப்படுகிறார்கள்.

70-க்கும் மேற்பட்ட இந்த வீரர்கள் உயிரிழந்ததற்கு யார் காரணம் 7 என்று வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை மேலே ஒரு சால்வை சகிதமாக நம்மூர் பா சிதம்பரம் போன்று தோற்றமளிக்கும் அன்றைய உள்துறை அமைச்சர் , நக்சலைட் ஒழிப்பு தலைமை அதிகாரியான அடா ஷர்மாவிடம் கேள்வி கேட்க, ஒற்றை வார்த்தையில் பொட்டில் அறைந்தது போல பதில் சொல்கிறார்,  “நீங்கள் ”  என்று.

அந்த தேச விரோத உள்துறை அமைச்சர் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் அடா ஷர்மா. பாதுகாப்பு படை வீரர்களுக்கு உரிய உறைவிடங்களோ அடிப்படை வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்காதது மற்றும் நவீன ஆயுதங்கள் வழங்கப்படாதது அத்தோடு இந்த தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்தியும் போதுமான பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பாதது என்று வெடிக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் துப்பாக்கியை எங்கே நமது பொட்டில் வைத்து விடுவாரோ இன்று பயந்து ஓடிப் போகிறார் அந்த உள்துறை அமைச்சர்.

அட உண்மை சம்பவம் என்று சொன்னார்களே, என்று யோசித்துப் பார்க்கும் பொழுது ஆமாம், இது உண்மை சம்பவம் தான்.  ஆனால் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை அசால்டாக நீக்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவம் அல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்து உண்மைச் சம்பவம்.

ஆனால், நக்சலைட்களால் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுவது இன்று முற்றிலுமாக தடுக்கப்பட்டு, கம்யூனிஸ கொடி பறந்த பஸ்தர் பகுதிகளில் இன்று இந்திய தேசிய கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கின்றன.

மேற்கண்ட காட்சி படத்தின் இறுதி காட்சியாக   வருகிறது.

பஸ்தர் மலை கிராமம் ஒன்றில் தேசியக்கொடி ஏற்றும் அப்பாவி கிராமத்தினர் நக்சலைட்டுகளால் அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். கம்யூனிஸ கொடி பறக்கும் நக்சலைட் பகுதிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்களுள்,  பாரத தேசிய கொடியை ஏற்றியவர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் படுகொலை செய்யப்படுகிறார் , அவரது மனைவி மற்றும் குழந்தை மற்றும் ஊரார் முன்னிலையில் .

இந்தக் காட்சி நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்ப முடியாத காட்சியாக தான் இருக்கும். ஏனென்றால், திராவிட சித்தாந்தத்தில் ஊறிப்போன இன்றைய தமிழக படைப்பாளிகள் எடுக்கும் படங்களில் மலை வாழ் மக்களை கொடூரமாக துன்புறுத்திக் கொல்வது, அரசு இயந்திரங்களாக தான் இருக்கும், குறிப்பாக காவல்துறையினராக காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த துன்புறுத்தலில் இருந்து ஒருவன் போராளி ஆவது போல காட்டி அவனை கதாநாயகனாக கொண்டாடுவார்கள் நம்மூர் படைப்பாளிகள். ஏனென்றால் நேஷனலிசம் தவிர கம்யூனிசம், செக்குவாரிசம் உள்ளிட்ட இசங்களை பின்பற்றுபவர்கள் மட்டுமே  அவர்களது பார்வைக்கு போராளிகள் , அட அட போராளிகள் கூட இல்லை குறைந்தபட்சம் மனிதர்களாக மதிப்பதற்கு அந்த இசங்களை பின்பற்ற வேண்டும் என்பது அவர்களது கட்டமைப்பு.

நக்சலைட்டுகள் எவ்வளவு கொடூரமாக அவர்களுக்கு ஆதரவாக நிற்காதவர்களை அதாவது எல்லை தாண்டி அவர்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்கு எதிராக நிற்பவர்களை எவ்வளவு கொடூரமாக வேட்டையாடுகிறார்கள் என்பதை இந்த படம் தெள்ளத் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

அந்தப் பகுதியில் நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக அடா சர்மா தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், பொதுமக்களும்  ஒன்றிணைகிறார்கள். அவர்கள் போராட்டம் வென்றதா என்பதை இந்த படம் என்றாலும் உண்மையில் தேசவிரோத தீவிரவாதத்திற்கு எதிரான அவர்கள் போராட்டம் வெற்றி பெற்று இன்று பஸ்தர் பள்ளத்தாக்கு சுற்றுலாத்தலமாக கொடிகட்டி பறக்கிறது.

ஒருபுறம் நக்சலைட்டுகளுக்கு எதிரான காவல் துறையினரின் துணிச்சலான நடவடிக்கைகள் மறுபுறம் சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் பெரும் பணம் செலவழித்து நீதிமன்றத்தில் வாதாடி சிறைபிடிக்கப்பட்ட நக்சலைட்களை விடுதலை செய்வதற்கு போராடும் அர்பன் நக்சல் என்று அழைக்கப்படும் மேல் தட்டு தீவிரவாதம்.  சட்டமும் நீதிமன்றங்களுமே நமது நாட்டின் உச்சபட்சம் என்றாலும் இதுபோன்ற குற்றவாளிகள் வக்கீல்களின் வாதாடும் திறமையால் மட்டுமே தண்டனைகளில் இருந்து தப்புவதும் திரும்பவும் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன. அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வாதாடுவது என்பது இயலாத காரியங்களாக இருப்பது  விரும்பத்தக்கதும் அல்ல. சுதந்திர இந்தியா இன்னும் வலிமையோடு எழுந்து நிற்க நமக்கான சட்டங்கள் இன்னும் வலிமையாக உருவாக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நீதிமன்றத்தில் அரசு தரப்பு வக்கீலாக வாதாடும் யஷ்பால் சர்மா மிகச் வாதங்களை எடுத்து வைப்பதிலும் தோற்றுப் போகும்போது உடைவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக ஆர்வலர் , புரட்சிகர மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் மத்தியில் பிரபலமான எழுத்தாளர்கள்,  நடிகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி உள்ளிட்ட   ஊடகங்கள் என்கிற மிகப்பெரிய வலைப்பின்னல் எல்லை தாண்டி வரும் பணத்திற்காக விலை  போவது மட்டுமல்லாமல் தேசத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை இந்த படம் வாயிலாக புரிந்து கொள்ளும்போது, போராளி என்கிற வார்த்தையே குறிப்பிட்ட அத்தனை பேரும் கெட்ட வார்த்தை ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அவர் மட்டுமல்ல, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தனது கணவனை கண் முன்னே பறிகொடுத்த மலைவாழ் பழங்குடி இள பெண்ணாக நடித்திருக்கும்  இந்திரா திவாரி, காவல்துறையில் சேர்ந்து கடுமையான பயிற்சிகள் எடுத்து நக்சலைட் ஒழிப்பில் தன்னை இணைத்துக் கொள்வதும் தனது கணவனை கொன்றவனை அதே பாணியில் பழி வாங்குவதும் உணர்ச்சி மிகுந்த காட்சி அமைப்புகள்.

ஏற்கனவே லவ் ஜிகாத் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய கேரளா ஸ்டோரியில் சிறப்பாக நடித்த அடா சர்மா இந்தப் படத்திலும் நக்சலைட் ஒழிப்பு அதிகாரியாக மையக் கதாபாத்திரத்தில் அடடே போடும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கர்ப்பிணியாக அவர் நக்சலைட் ஒழிப்பு ஆபரேஷனில் இறங்கி பணியாற்றும் கதாபாத்திரம் இந்த தேசத்திற்காக உயிரை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மரியாதை செலுத்துவது போல அமைந்திருக்கிறது.

முன்பே குறிப்பிட்டது போல நமக்கு தேவையானது Nationalism மட்டுமே, மற்ற ism கள் 140 கோடி மக்கள் தொகை கொண்ட  பாரத நாட்டிற்கு தேவை இல்லாதது என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுதிப்டோ சென்,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பஸ்தர் த நக்சல ஸ்டோரி மூலம்.