சிறகன்

mysixer rating 3.5

102

a K.Vijay Anandh review

பாதிக்கப்பட்ட கஜராஜ் பாதிப்பிற்கு காரணமான மகனை பெற்ற ஜீவா ரவி ஆகிய இருவரையும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எதிர்மறை கதாபாத்திரங்கள் போல காட்டிவிட்டு கதைப்போக்கில் அவர்களுக்குள் இருக்கும் நியாயங்களை காட்டிய விதம் அருமை.

அதைப்போல காணாமல் போகும் எம்எல்ஏ மகன்,   தற்கொலை செய்து கொள்ளும், காவல்துறை அதிகாரி ஜி டி வினோத் இன் தங்கை பௌசி ஹிதயா , ஆங்காங்கே நடக்கும் கொலைகள் என்று விறுவிறுப்பான துப்பு துலக்கும் திரைக்கதையில் அருமையான பொறுப்பான தந்தை –  அவரை விட பொறுப்பான மகள் ஆகியோருக்கிடையே நடக்கும் சென்டிமென்ட், கண்டிப்பான தந்தை – ஊதாரியான மகன்  இடையே நடக்கும் போராட்டம், இரண்டு நண்பர்களுக்கு இடையே புரிதல் இல்லாமல் விடை கிடைக்காமல் நீளும் புதிர் – யூகிக்க முடியாத இறுதிக்காட்சி என்று வித்தியாசமான திரைக்கதை அமைத்து சிறகனை உயரே பறக்க வைத்திருக்கிறார், இயக்குனர் வெங்கடேஸ்வர ராஜ்.

மாணவர்கள் அவர்கள் வயதிற்கு மீறிய தொழில்நுட்பங்களில் விற்பன்னர்களானால் விபரீதங்கள் ஏற்படத்தான் செய்யும் என்பதை எம்எல்ஏ மகன் மற்றும் நண்பர்களை வைத்து அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பாலியல் தொந்தரவு என்கிற வழக்கமான திரைக்கதைக்குள் தடம் மாறி விடுவாரோ என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது, கண்ணியமாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று களமாடி விடுகிறார் இயக்குனர் வெங்கடேஸ்வர ராஜ், அதற்கே முதலில் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

கஜராஜ், ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் வந்தாலும் அவரைச் சுற்றியே கதைகள் நடப்பதும் அதனை அவர் தோளில் சுமந்து அசால்டாக நடித்து விடுவதுமாக இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். ஜீவா ரவி வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிகவும் இயல்பான காவல்துறை கதாபாத்திரங்களில் வரும் வினோத் ஜி டி மற்றும் மாலிக் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

முதலிலேயே குறிப்பிட்டது போல ஊகிக்க முடியாத திரைக்கதை,  திரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து,  சிறகன்.