அம்மா இயக்க, மகன் இசைமக்க The Proof

198

’Golden studios’  சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள   தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப்  உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் பேசிய…

நடிகர், இயக்குநர் யூகி சேது, “நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு.  ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே  இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா.  டான்ஸ் மாஸ்டர் சாந்தி,  ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி,  என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ..” என்றார்.

இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார், “படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா.  மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என  எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை  மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். .” என்றார்.

நடிகர் மைம் கோபி, “ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன்…”என்றார்.

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி, “ மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெறும்..” என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா, “இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே  கிளம்புவதைப் பார்த்துள்ளேன்,  இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.  தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ” என்றார்.

நாயகன் ருத்விக், “சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம்,  நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப்  பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது..” என்றார்.

இயக்குநர் ராதிகா, “இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில்  அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர்.  படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை…” என்றார்.