a K. Vijay Anandh review – வார்த்தைகளில்லாதவனின் வார்த்தைகள், அம்புடுதேன் !
மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு அழுத்தமான பகுதிதான் வாழை. ஒரு விபத்து , அது குறித்தான பத்திரிக்கை செய்தி, படித்து விட்டு கடந்து போய்விடுவோம். அதுவே அவரவர் வாழ்க்கையில் நடந்திருந்தால் , வாழ் நாள் முழுவதும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டு கொண்டிருப்போம், சராசரி மனிதர்களாயிருந்தால்.
ஒரு படைப்பாளி என்ன செய்வான் ? அதை கச்சிதமாக செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
– முன்னதாக, வாழை படத்தின் விமர்சனத்தை மாரி செல்வராஜின் அக்காவிற்கும் அவருடன் அந்த விபத்தில் இறந்து போனவர்களுக்கும் சமர்ப்பணம் செய்துவிடுவோம்-
வயிற்றுப்பிழைப்புக்காக காலம் பூராம் காய்பறித்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். என்னதான் நன்றாகப்படித்தாலும், விடுமுறை நாட்களில் கூட மாணவப்பருவத்தை அனுபவிக்க முடியாத சிவனணைந்தான், என்ன பெயர்டா யப்பா… என்று வியப்பு மேலிடுகிறது, அவனது பெயரில் ஆரம்பித்த வியப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் , ஒவ்வொரு பிரேமிலும் தொற்றிக்கொள்கிறது.
சொந்தமாக வாழ்வாதாரத்தை அமைத்து கொள்ள முடியாத , வியாபாரி தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை வெட்டி சுமந்து ஏற்றி அனுப்புவதை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, மிகவும் யதார்த்தமாக உண்மையாக நேர்மையாக காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த குட்டி கிராமத்திற்குள், வாழைக்கடலுக்குள் அமைந்த ஒரு குட்டி தீவைப்போல இருக்கும் நாயகன் சிவனணைந்தானின் வீடு தனி அழகு என்றால், அந்த குட்டி தீவின் மகாராணியாக அவனது அம்மா ஜானகி, இளவரசியாக அக்கா திவ்யா துரைசாமி என்று அந்த குடும்பமே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, உன் அப்பா தான் ஆத்தோடு போயிடடாரு… என்கிற ஒற்றை வார்த்தையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் விழுந்து செத்துப்போன – அன்றைய தமிழக அரசால் அப்பாவி மக்கள் மீது ஏவப்படட அடக்குமுறையை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறார் ஒரு பொறுப்புள்ள சமூக அக்கறை கொண்ட படைப்பாளியின் கடமையாக, மாரி செல்வராஜ்.
வீடடை விட்டு வெளியே வந்தால் ,சிவனனைந்தானுக்கும் சேகருக்கும் இடையிலான அழகான நடப்பு, அப்படியே பள்ளிக்கு சென்றால் சிவனனைந்தான் பூங்கொடி டீச்சர் மீது வைத்திருக்கும் ஒரு அழகான காதல் என்று கிராமியப்பாடலாக படம் விருந்து படைக்கிறது. சிவனனைந்தான் , புத்தக பையையும் காயையும் மட்டும் சுமக்கவில்லை , இந்தப்படம் முழுவதையும் அவனே சுமக்கிறான், அக்காவின் காதலையும் சேர்த்து, அவளை ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கடமையையும் சேர்த்து.
சிவனனைந்தான் ஆக நடித்திருக்கும் தம்பி பொன்வேலு, உனக்கு தேசிய விருது உறுதி டா… சனிக்கிழமை காலைல வெறும் வயிற்றில் கிளம்பும் நீ , பசியோடு மாலை வீடு திரும்புவதிலிருந்து, அம்மாவிடம் அடிவாங்காமல் தப்பித்து ஓடி எவனோ ஒரு தோட்டத்து காரனிடம் வாழைப்பழத்தை பறித்ததற்காக அடி வாங்கி , அடுத்த நாள் அத்தனை பிணக்குவியல் மத்தியிலும் , அடுக்களையை தேடிப்போய் அன்னத்தில் கை வைத்து அதையும் சாப்பிட முடியாமல் ஓடிப்போவது வரை அனைவரையும் அழ வைத்து விடுகிறாய், உன்னுடைய அந்த 24 மணி நேர பட்டினி எங்களையும் தொற்றிக்கொள்கிறது. யாரையாச்சும் பார்க்கசென்றால் ” சாப்பிடியானு கேட்க மாட்டியாடா ..” என்று கத்தவும் தோன்றுகிறது, யாராச்சும் பார்க்க வந்தால் மொதல்ல சாப்பிடச்சொல்லனும் என்கிற நல்ல சிந்தனையை விதைக்கவும் செய்திருக்கிறது. நேற்று வரைக்கும் அக்கா மாதிரி அழகா இருந்தீங்க இன்றைக்கு அம்மா மாதிரி அழகா இருக்கீங்க என்று பூங்கொடி டீச்சர் மீதான உன் காதலுக்கு ஒரு தீர்க்கமான பதிலை சொல்லும் போது வாரி அணைத்துக்கொள்ள தோன்றியது. உன்னை குளிப்பாட்டும் , உன் தாகம் தீர்க்கும் , உன் பசியாற்றும் அவ்வளவு ஏன், இரவு முழுவதும் நீ தூங்க உனக்கு மடி தரும் தாமிரபரணியைக் கூட அவ்வளவு பிடித்து போகிறது.
சேகர் மாதிரி ஒரு நண்பன் கிடைத்தால் காயை மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தையே தூக்கி சுமக்கலாம் போல, ராகுல் தம்பி உனக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஜானகி அம்மாவைலாம் எதுவுமே சொல்ல முடியாது, அவரால் நடிக்கவெல்லாம் தெரியாது. அம்மா வேண்டுமா அவரை அழைத்து கொள்ளுங்கள். அக்கா வேம்புவாக வரும் திவ்யா துரைசாமி, அவர் பேசுவது அம்மாவிற்கும் அவர் தம்பிக்கும் மட்டுந்தான் கேட்கிறது, அவ்வளவு மென்மை , நடிப்பில் மேன்மை.
ஒரு போராளி இளைஞன் கனியாக வரும் கலையரசன், அற்புதமான நடிகனாக படத்திற்கு படம் நிரூபிக்கிறார்.
வியாபாரியாக வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார், மனசாட்சியற்ற வியாபாரியாக அறிமுகமானாலும் இறுதிக்காட்சியில் மனித நேயத்துடன் சக மனிதர்கள் குறிப்பாக தனக்காக வேலை பார்த்தவர்களின் பிணக்குவியலை பார்த்து உடைந்து போகும் இடத்தில் கவனிக்க வைத்திருக்கிறார்.
நிகிலா விமல், கச்சிதமான தேர்வு , பூங்கொடி டீச்சராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
யுகபாரதி , விவேக், மாரி செல்வராஜ் ஆகியோரின் பாடல்கள் கதாபாத்திரங்களின் மூன்று விதமான உணர்வுகளை ரசிகர்களிடமும் கடத்தியிருக்கிறது. சந்தோஷ் நாரயாணனின் இசை அற்புதம். தேநி ஈஸ்வர் இன் ஒளிப்பதிவில் கருங்குளம் கிராமும் , தாமிரபரணியும் , வாய்க்கால் , வரப்பு , வாழைத்தோடடம் முதல் அங்கே வாழ்ந்திருக்கும் மனிதர்கள் வரை அத்தனையும் அழகு.
வாழை, ஆகசிறந்த படைப்பு, ரசிகர்களுக்கு ஒரு நீண்ட காத்திருப்புக்கான தீனி, படைப்பாளிகளுக்கு பெரிய உத்வேகம்.
மாரி செல்வராஜ் , நீர், படைப்பாளி !! நெல்லை தமிழில் சொல்வதாக இருந்தால், நீர்தாம்யா படைப்பாளி !!