அங்கீகாரம்

Rating 4/5

40

a K Vijay Anandh review

ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவை கோர்ட் டிராமாவாகவும் கொடுக்க முடியுமா என்று கேட்கும் அளவிற்கு,  ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்!

கதாநாயகனின் ஓட்டம் கிட்டத்தட்ட வாக்குவாதம் பெரும்பாலும் நீதிமன்றத்திலேயே நடக்கிறது. இருந்தாலும், இந்த படத்தில் பேசப்படும் விளையாட்டு வீரர்கள் குறித்தான பிரச்சனை, குறிப்பாக கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் குறித்தான பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

2014 க்கு பிறகு நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு இந்தியாவில் கேலோ இந்தியா ஆரம்பிக்கப்பட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை கொடுத்து ஆண்டுதோறும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஆரம்பித்த பிறகு, இந்தப் படத்தில் அலசப்படும் விஷயங்கள் பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பதை அறிந்து கொண்ட இயக்குனர் தேன்பத்தியன், கதையை மிகவும் சாமர்த்தியமாக 2010 காலகட்டத்தில் நடந்ததாக காட்சிப்படுத்தி இருப்பது அவரது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

எந்த ஒரு சாதனைக்கு பின்னும் நாம் தாண்டி வந்த சோதனைகளை நினைவுபடுத்துவதும் அவசியம் தானே என்கிற அளவில் இந்தப் படமும் ரசிகர்களிடம் அங்கீகாரம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிரம்மாண்ட இயக்குனராக மனம் வந்து கொண்டிருந்த கொட்டபடி ஜே ராஜேஷ், தனது கம்போர்ட் சோன் லிருந்து வெளியே வந்து கடினமான பயிற்சிகள் எடுத்து ஒரு தடகள வீரருக்கு உரிய உடற்கட்டுடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எப்பொழுது வேண்டுமானாலும் இடித்து தரைமட்டமாக்கப்படலாம் என்கிற நிலையில் வாழும் குறிப்பாக, சாக்கடையாகிப்போல பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் வாழும், கழிவறை வசதிகள் கூட இல்லாத மக்களிலிருந்து ஒருவனாக காமன் வெல்த் கேமுக்கு தயாராகும் விளையாட்டு வீரனாக, அந்த உரிமை மறுக்கப்படும் பொழுது, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆக வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடும் போராளியாக நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் ராஜேஷ்

அதே பகுதியில் அவர் வீட்டிலேயே வசிக்கும் இன்னொரு விளையாட்டு வீராங்கனை ஆக விஜி வெங்கடேஷ் அவரும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

விளையாட்டு வீரர்களை கண்டறிந்து ஊக்குவித்து முறையான பயிற்சிகள் கொடுத்து அவர்களை மாநிலங்கள் சார்பாக தேசிய அளவிலும்,  தேசியம் சார்பாக சர்வதேச அளவிலும் அனுப்ப வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கூட விளையாட்டு வீரர்கள் பற்றிய புரிதல் இல்லாமலும் ஏன் சில நேரங்களில் விளையாட்டுகளைப் பற்றிய அறிவுகளே இல்லாமலும் இருப்பது சாபக்கேடு.

கிரிக்கெட் தேசிய விளையாட்டு என்று கூறும் அளவிற்கு அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூர் அலிகான் இருப்பது நகைப்பை வரவழைக்கிறது.

ஜிப்ரனின் இசை,  திரைக்கதை போன்று பயணிப்பது புதிதாக இருக்கின்றது.

ரங்கராஜ் பாண்டே முதல் மோகன்ராமன் வரை  அத்தனை பேரும் நீதிபதிகளாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள், இதற்கு முன் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த கோர்ட் டிராமா படங்களில் இடம் பெற்ற காட்சிகள் போன்று மிகவும் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அட்வகேட் ஜெனரலாக வருபவரின் நடிப்பு பிரமாதமாக இருக்கின்றது. அவர்களது நோக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைத்தாண்டி, தங்களுக்கு பெரிய அளவில் கட்டணம் கொடுக்கும் துறைகள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்திருந்தாலும் அவற்றிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காகவே இருக்கின்றது என்பதை அறியும் பொழுது, சாதாரண மக்களுக்கான நீதி என்றுமே கிடைக்காதோ என்கிற பயம் தொற்றிக் கொள்கிறது.

மைதானத்திலும்,  நீதிமன்றத்திலும் ஜெயிக்கும் விளையாட்டு வீரனின் கதை இந்த அங்கீகாரம்!