a K Vijay Anandh review
ஒரு ஃபேக் என்கவுண்டர், அதனை கண்டுபிடிக்க வரும் மற்றொரு காவல்துறை அதிகாரி, அதாவது ஹீரோ. இப்படி அமைக்கப்பட்டிருந்தால் இது ஒரு சராசரியான திரைக்கதை ஆகியிருக்கும். மாறாக ஒரு நேர்மையான துணிச்சலான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஹீரோவே சூழ்நிலை கைதியாக மாறி ஒரு தவறான என்கவுண்டர் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த தவறை உணர்ந்து உண்மையான குற்றவாளியை வேட்டையாடுவதும் தவறான என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்ட இளைஞனை நிரபராதி என்று நிரூபிப்பதும்தான் வேட்டையனின் அட்டகாசமான திரைக்கதை. பி கிருத்திகாவின் இந்த திரைக்கதை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது ரசிகர்களை .
மற்றபடி படம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மேஜிக் மேனரிஸம் தான். சமீபத்தில் கிளிக்கான ஜெயிலர் பட கெட்டப்பில் தான் படம் முழுவதும் வருகிறார். ஆங்காங்கே காட்டப்பட்டிருக்கும் காக்கி சட்டையுடன் கூடிய காட்சிகளை தவிர்த்து கிரைம் பிராஞ்ச் உயரதிகாரி என்கிற அளவிலேயே கொண்டு போய் இருக்கலாம். இரண்டு நூற்றாண்டுகளின் ஆகச் சிறந்த முன்னுதாரண நடிகராக சொல்வதற்கு தகுதியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனென்றால் சென்ற நூற்றாண்டில் கோலோச்சியவர்கள் இந்த நூற்றாண்டில் இல்லை, இந்த நூற்றாண்டில் இவரை விட அதிகமாக கோலோச்சியவர்கள் இல்லை. அந்த வகையில் திரையுலகில் நூலையும் ஒவ்வொரு நடிகனுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே ஆகச் சிறந்த முழு உதாரணம்.
அமிதாப் பச்சனை வெறும் கௌரவ வேடத்தில் நடிக்க வைக்காமல் அவரது கதாபாத்திரத்திற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து அவர் மூலம் கதையின் நாயகன் தன் நிலை உணர்வதாக காட்டியிருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது.
பகத் பாசில், படத்தில் நகைச்சுவைக்கு என்று தனி ட்ராக் இல்லை என்றாலும், படத்தின் கதை ஓட்டத்தின் ஊடாகவே இவரை பயன்படுத்தி ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைத்திருப்பது சிறந்த திரைக்கதை உத்தி.
மஞ்சு வாரியர், நடிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வீட்டில் இருந்து எமோஷனலாக அனைவரையும் இயக்குபவராக முத்திரை பதித்திருக்கிறார்.
துஷாரா விஜயன், ஒரு போராளி ஆசிரியராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் குத்துச்சண்டை வீரராக வலம் வரும் ரித்திகா சிங் இந்த படத்தில் சிறந்த காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்த், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரோகினி, ரித்திகா சிங் ஆகிய R வரிசை நடிகர்களுடன் ரக்ஷனும் இணைந்திருப்பது சுவாரசியமாக அமைந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்துக் கொண்டு என்கவுண்டர் தீர்வு அல்ல, நீதியே தீர்வு என்பதாக அருமையான ஒருவரி கதையையும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு தளத்தில் கதையை கொண்டு போய் இருக்கலாம். அதை விட்டுவிட்டு நீட் எதிர்ப்பு என்பதை மீண்டும் மீண்டும் விதைத்துக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது அல்ல. அதுமட்டுமல்லாமல், மெக்கலே வந்த பிறகுதான், இங்கே அனைவருக்கும் கல்வி கிடைத்தது போன்ற பொய்யான பிரச்சாரங்களும் தேவையில்லாதது. இதன் மூலம் இயக்குனர் டிஜே ஞானவேல் தனது தனிப்பட்ட ஏதோ ஒரு சித்தாந்தத்தை, பொழுதுபோக்கிற்காக திரையரங்கிற்குள் வரும் ரசிகர்களிடம் திணிக்கிறாரோ என்கிற அச்சம் எழுவதை தவிர்ப்பதற்கு இல்லை.