a K Vijay Anandh review
கௌரி ஆக வரும் அபிநயா தான் படத்தின் மைய கதாபாத்திரம். இவர் நிஜமாகவே பேரழகி தான். வாய் பேச முடிந்தவர்கள் வாய் பேச முடியாதவர்களாக நடித்து ஒரு விருது வாங்கிவிடும் நிலையில், நிஜத்தில் வாய் பேச முடியாதவராக இருந்தாலும் , தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அற்புதமான வசனங்களை அதற்குரிய முக பாவனைகளோடு பேசி அசத்தும் இவருக்கு, ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் மிகை ஆகாது.
ஜோஜூ ஜார்ஜ், சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர், இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார். படம் முழுவதும் வேட்டியும் சட்டையுமாக கலாச்சார உடையில் வந்தாலும் கதாபாத்திரமாக மிரட்டி இருக்கிறார். தனது மனைவி, அம்மா, சகோதரி, அவரது கணவர், நண்பர், நண்பரின் மனைவி, உறவினர் குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் அவர் காட்டும் அன்பும் நேசமும் அழகு. அப்படி ஒரு அளவிட முடியாத அன்பை தனது மனைவியின் மீது வைத்திருந்த காரணத்தால் இரண்டாவது பாகத்தில் இவர் எடுக்கும் விஸ்வரூபம் ரசிக்க முடிகிறது எதிரிகளை பயமுறுத்தி விடுகிறது.
ஜோஜு ஜார்ஜின் கூட்டாளிகளாக வரும், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன் மூவரும் மிகச் சிறப்பாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். தங்களது கூட்டாளிக்கு ஒன்று என்றால் அதனை தங்களது பிரச்சினையாக பாவித்து அவரோடு சேர்ந்து பயணித்து அவருடன் தோளோடு தோளாக நிற்பது அழகு.
இந்தப் படத்தில் ஒரு இயக்குனராக பெண்களின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக அவரது அம்மாவாக நடித்திருக்கும் சீமா சசி ஒரு கம்பீரமான மகாராணி கதாபாத்திரம் போல அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனை லிப்டில் அவருக்கு ஒரு சண்டைக்காட்சி கூட கொடுத்து அசத்தி இருக்கிறார்.
இன்னொரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம், பாபி குரியனின் மனைவியாக வரும் அபயா ஹிரன்மயி. தனது கணவனை இழந்த நிலையிலும், தனது நண்பனுக்கு ஆறுதலாக இருந்து அவரது இடத்தை நிரப்பும் இடம் அழகு. தான் பிறந்து வளர்ந்த திருச்சூருக்கே ஐபிஎஸ் பணி வாங்கி வரும் சாந்தினி ஸ்ரீதரன் இன்னொரு குறிப்பிடத்தக்க பெண் கதாபாத்திரம்.
இவர்களது அத்தனை பேரின், அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையை புரட்டிப் போடும் இரண்டு மிரட்டும் வில்லன்களாக, சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ், இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார்கள்.
முத்தாய்ப்பாக ஜோஜு ஜார்ஜ் இவர்களை போட்டு தள்ளும் இடம் ரசிகர்களையும் ஒரு நிமிடம் பயமுறுத்தி விடும் என்றால் மிகை அல்ல.
மொத்தத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இயக்கியிருக்கும் பணி, ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றால் மிகை அல்ல.
ஜோஜு ஜார்ஜின் இந்தப் பணி சிறக்கவும் தொடரவும் வாழ்த்துக்கள்!