அறம் செய்

mysixer rating 3/5

146

a K Vijay Anandh review

ரேட்டிங்கில் 3 ஸ்டார் கொடுத்தது இந்த படத்தில் பேசப்படும் அரசியல் மாற்றம் குறித்தான கருத்துக்களுக்காக தான். மற்றபடி முழு படமும் எப்படி இருந்தது என்று கேட்டால், சமீபத்தில் மிகப்பெரிய இயக்குனர் மிகப்பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியான ஒரு படத்தின் பார்ட் 2 ஐ விட நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமான மற்றும் பிடித்த அம்சமாக கருதும் காட்சிகளும் வசனங்களும் நிறைவே இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதா  பெயரில் வரும் ஒரு கதாபாத்திரம், அவரைப் போலவே நீட் எழுத முயன்று தோற்று தற்கொலைக்கு செல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வலம் வரும் காட்சி அற்புதம்.

மற்றபடி ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் மலிவாகிப்போன இன்றைய அரசியலை மாற்றும் இளைய தலைமுறை அஞ்சனா கீர்த்தி தலைமையிலான அறம் செய் என்கிற அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்படுவதும் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி அவர்கள் தங்களது இலக்கினை அடைய பயணிப்பதுமாக அறம் செய்ய படத்தின் கதை, மேடை நாடக வடிவில் பயணித்தாலும் நல்ல கருத்தை சொல்லும் திரைப்படமாக வெளியாக இருக்கிறது.

அரசியல் மாற்றம் அதிலும் குறிப்பாக ஒரு இளம் பெண் தலைமையிலான அரசியல் மாற்றம் என்கிற யோசனைக்கே , பாலு எஸ் வைத்தியநாதன் பாராட்ட வேண்டும். தேர்தலில் பெண்கள் சக்தியே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது என்றால் அது மிகையல்ல, அப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண்ணை முன்னிறுத்தி அரசியல் மாற்றத்திற்கான ஒரு பயணமாக இந்த படத்தை காட்டிய விதத்தில் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அஞ்சனா கீர்த்தி, பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவருக்கு குறிப்பிட்டு சொல்லும் படியான கதாபாத்திரம். ஒரு இளம் அரசியல் தலைமைக்கு உரித்தான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்புகள் ஆகியவற்றை கச்சிதமாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் இந்த படத்தை எழுதி இயக்கிய பாலு எஸ் வைத்தியநாதனுக்கு மேகாலி மீனாட்சி என்கிற ஒரு ஜோடியும் மற்றும் மூன்று டூயட் பாடல்களும் தேவைப்பட்டாலும், அஞ்சனா கீர்த்திக்கு ஜோடியோ அல்லது பாடல்களோ இல்லாமல் இருந்தாலும் அவரது சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

மருத்துவ கல்லூரி மாணவ பாலு எஸ் வைத்தியநாதனின் நண்பனாக வரும் ஜீவா தன் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரசிகர்கள்  மத்தியில்,பெரிய மாஸ் வரவேற்பு இல்லாத நடிகைகளை வைத்துக்கொண்டு மிகவும் அழுத்தமான கதை களத்தில் பயணித்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார்கள் அறம் செய் குழுவினர்.