வீர தீர சூரன் – 2

mysixer rating 4/5

149

a K Vijay Anandh review

முன்குறிப்பு:

படம் இன்று ( மார்ச் 27 ) வெளியாகுமா இல்லையா என்கிற சூழ்நிலையில் மூன்று மணிக்கு பிறகு பட வெளியீடு உறுதியாகிறது.  படம் வெளியாகும் நாள் அன்றே பத்திரிகையாளர் காட்சி வைத்து விடலாம் என்று முடிவு செய்தால் இரவு 10 மணிக்கு தான் அது சாத்தியமாகிறது. படத்தின் நாயகன் விக்ரம் மற்றும் குழுவினர் படம் ஆரம்பிக்கும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால், எப்பொழுதும் போல படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் சொல்லும் கருத்துக்காக நள்ளிரவு 1 ஒரு மணிக்கு ஒரு அறிமுக கதாநாயகனைப் போல, காத்திருந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்ட நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பு மகத்தானது.

இப்பொழுது படத்தின் விமர்சனத்திற்கு வருவோம் ….

உண்மையாகவே இந்த படத்தில் இரண்டு வீர தீர சூரன்கள் என்றால் மிகையாகாது. ஆம் இந்த படத்தின் லைவான கதையை எழுதி அதை தயாரிப்பாளருக்கும் நாயகன் விக்ரமிற்கும் புரிய வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்ய வைத்த இயக்குனர் எஸ் யு அருண்குமார், முதல் வீர தீர சூரன். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வரை  அவர்தான் வீர தீர சூரன்.

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்து படம் வெளியாகி இருக்கும் நிலையில், விக்ரம் இரண்டாவது மற்றும் நிரந்தர வீர தீர சூரன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்கு பிறகு தான் ஒரு சாமானிய மனிதராக திரையில் அறிமுகம் ஆகிறார் விக்ரம்.  அதன் பிறகு இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்கிற அளவிற்கு, ரசிகர்களை ஏங்க வைத்து விடுகிறார். அவர் சம்பந்தப்படாத காட்சிகள் வரும் பொழுதும் கூட சியான் விக்ரம் எங்கேப்பா என்று எதிர்பார்க்க வைத்து விடுகிறார்.

இது வீர தீர சூரன் பார்ட் 2 வா ? அல்லது விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட் 2 வா  ? இன்று என்ன தோன்றும் அளவிற்கு, தன்னைவிட மூத்த கதாநாயகியுடன் நடித்துக் கொண்டிருக்கிறாரோ என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். படம் முழுவதும் டேய் வாடா போடா என்று துஷாரா விஜயன் விக்ரமை அழைக்க அழைக்க அது மேலும் உறுதியாகிறது. அந்த அளவிற்கு, உடலையும் உடல் மொழியையும் நடிப்பையும் இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார் விக்ரம்.

நாலு முழ வேட்டி, ஒரு உள் பனியன், கட்டம் போட்ட ஒரு அரைக்கை சட்டை இதுதான் படம் முழுவதும் விக்ரமிற்கான காஸ்ட்யூம். ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சியில், திருமண உடையுடன் வருகிறார். திருமண உடையில் சென்று பரீட்சை எழுதும் மாணவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம், ரத்ததானம் செய்தவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த படத்தில் திருமண உடையில் சென்று காவல் நிலையத்திலேயே வைத்து ஒரு சண்டியரை போட்டுத் தள்ளுகிறார் விக்ரம். உடை கலைந்து விடக்கூடாது என்பதற்காக, அதனை அழகாக மடித்து வைத்து விட்டு வெறும் ஜட்டியுடன் சென்று சம்பவம் செய்வது ரசிகர்களுக்கு புது விருந்து.

வீர தீர சூரன் படம் முழுவதும் ஆக்சன் அதகளந்தான் என்றாலும்,  விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ரொமான்ஸ், கிடைக்கும் நேரத்தில் துஷாரா விஜயனுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அழகு. அதிலும் அந்த டிவிஎஸ் 50 மேட்டர், இனி பட்டித் தொட்டிகளிலும் பற்றிக்கொள்ளும் ரகம். இயக்குனர் எஸ் யு அருண்குமார் எந்த அளவிற்கு தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து காட்சிப்படுத்துகிறார் என்பதற்கு இந்த காட்சி ஒரு மிகப்பெரிய உதாரணம்.

இப்படி விக்ரமை பற்றி, சொல்லிக்கொண்டே எழுதிக் கொண்டே போகலாம்,  அந்த அளவிற்கு ஒரு பிறவி கலைஞனாய் ஜொலிக்கிறார்.

ஏற்கனவே கணவனை இழந்து கை குழந்தையுடன் விக்ரமை மறுமணம் செய்து கொள்ளும், துஷாரா விஜயன், எங்கே மீண்டும் நாம் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து விக்ரமை எந்த ஒரு அசம்பாவித செயலுக்கும் சென்று விட வேண்டாம் என்று தடுக்கும் துடிக்கும் காட்சிகள், மிகவும் யதார்த்தம்.

தாங்கள் மட்டும் குடும்பம் குட்டிகள் என்று சந்தோஷமாய் வாழ வேண்டும், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் இன்னொரு அழகான குடும்பத்தை காவு வாங்க வேண்டும் என்று நினைக்கின்ற வில்லன்கள் இந்த படத்தில் பயமுறுத்தி இருக்கிறார்கள். மாருதி பிரகாஷ் ராஜ்,  சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோருடன் இணைந்து வெங்கட் கதாபாத்திரத்தில் வரும் பாலாஜியும் கவனிக்க வைத்திருக்கிறார்.

அவர்களை, வேட்டையாட கிடைக்கும் ஒரு சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்கவுண்டர் செய்துவிடும் அளவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரி எஸ் ஜே சூர்யா. வழக்கத்திற்கு மாறாக, மேலும் வசீகரிக்கத்தக்க வகையில் நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இந்த படத்தின் கதை பொழுது சாய்ந்த ஒரு ஏழு ஏழரை மணியளவில் ஆரம்பித்து அந்த ஊரில் திருவிழா நடக்கும் நேரத்தில் நள்ளிரவில் முடிகிறது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் லைவான காட்சிகளாக கதை நகர்ந்து நள்ளிரவுக்கு மேல் முடிகிறது. முன் குறிப்பில் குறிப்பிட்டது போல இந்த படத்தை 10 மணிக்கு பார்க்க உட்கார்ந்து ஒரு மணி அளவில் படம் முடிந்து வெளியே வரும்போது, நம்மையும் கதை நடக்கும் திருவாதவூருக்கு, அந்த நள்ளிரவில் அழைத்து சென்று விட்டாரோ என்கிற பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஜிவி பிரகாஷ் குமார், வழக்கமாக சிறப்பான இசையை கொடுப்பவர் தான் என்றாலும் சமீப காலங்களில் இவரது பின்னணி இசை ஆகட்டும் பாடல்களுக்கான இசையாகட்டும் வேறு ஒரு பரிணாமத்தில் மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

படம் முழுவதுமே ஒரு நாள் இரவில் நடக்கும் கதை தான் தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு, மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

முதலிலேயே குறிப்பிட்டது போல இந்த படத்தை,  இந்த கதையை இவ்வளவு பொறுமையாக இவ்வளவு டீடைலாக எப்படி எழுதினார் இயக்குனர் எஸ் யு அருண்குமார் என்று ஒரு பக்கம் ஆச்சரியப்படும் வேளையில் இந்தக் கதையை இயக்குனரின் அலை வரிசையில் நின்று எப்படி பொறுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் காட்சிகளை கோர்த்து இருக்கிறார் எடிட்டர் பிரசன்னா ஜிகே என்று மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் நிரந்தர வீர தீர சூரன் , விக்ரம் !