a K. Vijay Anandh review
காமராஜருக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில், முதலமைச்சர் அதாவது சட்டமன்ற தலைவராக, தேர்தலில் ஜெயித்த கட்சி எம் எல் ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சி என் அண்ணாதுரை அவருக்குப் பிறகு மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா என்று இப்பொழுது மு.க, ஸ்டாலின் என்று ஐந்தே பேர் தான் கடந்த 60 வருடங்களில். இதில், மு,க.ஸ்டாலினுக்கு, முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சித்தலைவர் மு.கருணாநிதியின் மகன் – வாரிசு என்கிற தகுதியே பிரதானமாக இருந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி வாரிசுகள் அல்லாதவர்கள் என்றால், நான்கே நான்கு பேர் தான்.
முதலமைச்சர்கள் ஆக இருந்த ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பெரும்பான்மை எம் எல் ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர்கள் அல்ல, இருவரும் தனி நபர்களால் நியமிக்கப்பட்டவர்களே. ஆயினும், இருவரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அப்படி ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைக்கலாம் என்கிற அளவிற்கு, அவர் சார்ந்த கட்சியை இன்று முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார், அவை ஒரு பக்கம் இருக்கட்டும்.
பெரும்பான்மை எம் எல் ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது இரண்டு வகையாக நடக்கும். ஒன்று, தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தபிறகு. இன்னொன்று, ஜெயித்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது அக்கட்சியின் முதலமைச்சராக இருப்பவர் இயற்கை எய்த நேர்ந்தால், ஏற்கனவே இருக்கின்ற பெரும்பான்மையான எம் எல் ஏக்களால் ஒருமனதாக அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தலைவராக ஆர். எம். வீரப்பன் தான் இருக்கிறார். அது ஒரு தமிழக அரசியல் வரலாற்று அதிசயம் என்றாலும், துரதிஷ்டவசமாக , தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள் அந்த வாய்ப்பை மறைந்த அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் துணைவியார் வி. என். ஜானகிக்கு விட்டுக்கொடுக்கவும் செய்துவிட்டார். அந்தவகையிலும், 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், ஆர் எம் வீரப்பன் ஒருவரே இடம்பிடித்துவிட்டார்.
தமிழக அரசியல் வரலாற்றில், எம் ஜி ஆரின் மறைவுக்குப்பின் அவர் மறைந்த அன்றைய தின இரவில் நடைபெற்ற மேற்கண்ட சம்பவங்களை, ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் தயாரிப்பில் உருவான ஆர் எம் வி தி கிங் மேக்கர் என்கிற ஆவணப்படத்தின் மூலம் அறிந்து கொண்டதிலிருந்து ஆயிரமாயிரம் சிந்தனைகள், கேள்விகள்!
தான் பெரிதும் நேசித்த புரட்சித்தலைவர் எம் ஜி ஆரின் மனைவியான வி என் ஜானகி ஆசைப்பட்டுவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக, தலைவரின் மறைவினையடுத்து கட்சியில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு அதுவே எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்று கருதி மிகவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து, அடுத்த நாள் பதவியேற்பு விழாவில் காத்திருந்த அன்றைய கவர்னருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஆர். எம். வீரப்பன். ஒரு வகையில், அந்த பேரதிர்ச்சி தமிழக மக்களுக்கும் தான்.
ஒருவேளை, அரசியல் நிலவரங்கள் மற்றும் நிர்வாகச்சுமைகள் ஆகியவற்றை ஒரு அரைமணி நேரம், வி என் ஜானகியிடம் ஆர். எம் வீரப்பன் எடுத்துக்கூறியிருந்தால், அவரும் அதனை புரிந்துகொண்டு, கட்சித்தலைவராக மட்டும் தொடர்ந்திருக்கலாம். அப்படி, வாரிசு அடிப்படையில் இல்லாமல், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒருவர் அதிமுக மூலமாக கிடைத்திருந்தால், தமிழகத்திற்கு அடுத்தடுத்த ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை, புதிய திறமைகள், புதிய சிந்தனைகளுடன் குறைந்தது 5 புதிய முகங்களை தமிழ் நாடு, முதலமைச்சர்களாக பெற்றிருக்கக்கூடும். அந்த அடிப்படையில், ஜெ.ஜெயலலிதா, ஒருவேளை அந்த ஐந்தில் ஒரு முதலமைச்சராக இருந்திருப்பார். வாரிசு அரசியல் அல்லாத ஜனநாயக ரீதியில் மட்டுமே முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற ஒரு நெறிமுறை தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் தேசிய அளவில் கூட ஏற்பட்டிருக்கலாம்.
ஆர். எம். வீரப்பனுக்கு தனது சொந்த வாரிசுகளை அரசியலில் தனக்குப்பிறகு முன்னிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததாகத்தெரியவில்லை. அவர், ஜெ.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு எம் ஜி ஆர் கழக்ம் என்கிற தனிக்கட்சி ஆரம்பித்த நிலையில் கூட தனது வாரிசாக, எஸ் ஜெகத்ரட்சகனைத்தான் முன்னிறுத்தி, திமுக வுடன் கூட்டணி வைத்து அரக்கோணத்தில் எம் பி ஆக்கி அழகு பார்த்திருக்கிறார்.
மறைந்த ஜெ.ஜெயலலிதா மீது, தனிப்பட்ட முறையில் நமக்கு காழ்ப்புணர்ச்சிகள் இல்லை, அதே நேரம், ஆர். எம். வீரப்பனை ஒப்பிடும் போது வி என் ஜானகி ஒரு பலவீனமான மாற்று அல்லது பலவீனமான தலைமை என்பதை புரிந்துகொண்டு தான், இன்னொரு தரப்பு ஜெ.ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி காய்கள் நகர்த்தியிருக்கக்கூடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
எம் ஜி ஆர் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் எம் எல் ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர் எம் வீரப்பன் முதலமைச்சர் ஆகியிருந்தால் தமிழக வரலாற்றில் அந்த இன்னொரு தரப்புக்கு இடமில்லாமல் போயிருக்கலாம், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆகியிருக்கலாம், ஏன் குஜராத்தில் இருந்து நரேந்திர மோடி வருவதற்கு முன்பாக தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வந்திருக்கலாம்.
இவையாவும், கற்பனையோ மிதமிஞ்சிய நப்பாசைகளோ அல்ல!
ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கையையும், பொதுவாழ்க்கையில் அவரது அர்ப்பணிப்பையும் உற்று நோக்கியவர்களுக்கு அது சாத்தியம் தான் என்பது புலப்படும்.
திமுகவில் இருந்து எம் ஜி ஆர் வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவரை திரும்ப சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுத்து அது முடியாத நிலையில், அண்ணா திமுக என்கிற கட்சியை ஆரம்பிக்க வைத்து அதற்கு கொடி முதல் கொள்கை வரை அனைத்தையும் உருவாக்கி, எம் ஜி ஆரை முதலமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார் ஆர். எம் வீரப்பன். அதுமட்டுமல்ல, எம் ஜி ஆரின் அமைச்சரவையில் தனக்கு கிடைத்த அறநிலையத்துறை அமைச்சர் பதவியை திறம்பட கையாண்டு, ஸ்ரீரங்கம் ஆலய ராஜகோபுரம் முதல் எண்ணிலடங்கா ஆலயப்பணிகளை நிறைவேற்றியிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில், ஒரு சிவாலய தெப்பக்குளம் சீர் செய்யப்படாமல் கிடக்க, ஒரு போராளியாக அந்தக்குளத்தில் தானே இறங்கி நீராடப்போவதாக காஞ்சி மகா பெரியவர் அறிவித்த நிலையில், அவருக்கு அந்த தர்மசங்கடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று மின்னல்வேகத்தில் அக்குளத்தை சீர்செய்து நன்னீர் நிரப்பியதுடன், மகா பெரியவருடனேயே புனித நீராடி மகிழ்ந்த மாமனிதன் ஆர். எம்.வீரப்பன். அதாவது அவரது சிறு வயதிலிருந்தே அவரை திராவிட சிந்தனைகள் தொற்றிக்கொண்டாலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தேசியமும் தெய்வீகமும் என்று வாழ்ந்து காட்டிய அரசியல்வாதி ஆர் எம் வீரப்பன் என்று அவரது ஆவணப் படம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது மறைவுக்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருப்பதும், சங்கம் தவிர்த்து பிற தலைவர்களுக்கு இல்லாத மரியாதையாக, இந்திய தேசத்தின் இரண்டாவது இரானுவம் என்று அழைக்கப்படும் ஆர் எஸ் எஸ் இயக்கம் தங்களது கூட்டத்தில் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுமே சாட்சிகள்!
ஆலயங்களில் தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படவேண்டும் என்று ஒரு சிலர் குழப்பம் விளைவித்த நிலையில், அனைத்து ஆதினங்கள் மடாதிபதிகளை ஒன்று திரட்டி அவர்களுடன் கலந்து ஆலோசித்து, ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களில் வழக்கமான சமஸ்கிரத அர்ச்சனைகளே தொடரும், தனியார் ஆலாயங்களில் அவரவர் விருப்பப்படி தமிழில் அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்கிற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமூக தீர்வு கண்டிருகிறார் ஆர். எம். வீரப்பன்.
அதன்பிறகு, ஜெ.ஜெயலலிதாவுக்கும் பக்கபலமாக இருந்து கட்சியை வழி நடத்தியிருக்கிறார், எந்த மேடையிலும் வெளிப்படையாக பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆர் எம் வீரப்பன் அமர்ந்திருக்கும் மேடையிலேயே இந்த ஆட்சியில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்று பேச, ஆத்திரம் அடைந்த ஜெ.ஜெயலலிதா , ஆர் எம் வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க, ஐயயோ என்னாலே தானே இப்படி ஆச்சு… நான் வேணா முதலமைச்சரிடம் பேசவா என்று ரஜினிகாந்த் கேட்டதையும் மறுத்து, அப்படி மன்னிப்பு கேட்டு நான் அமைச்சராக தொடரவேண்டும் என்கிற அவசியமில்லை என்று சுயமரியாதையோடு மறுத்தவர் ஆர். எம். விரப்பன்.
திமுக வில் இருந்து எம் ஜி ஆர் நீக்கப்பட்ட நேரத்தில், மு.கருணாநிதிக்கு எதிகான போராட்டங்களை முன்னெடுத்தவர்களுள் முதன்மையானவர் சைதை துரைசாமி, அன்றைய தினமே எம் ஜி ஆரின் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்புகளாக்கி ராஜதந்திரியாக செயல்பட்டு எம் ஜி ஆரை முதலமைச்சர் ஆக்கிய கிங் மேக்கர் ஆர் எம் வி என்று புகழாரம் சூட்டுகிறார்.
எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர் சரத்குமார் என்று 30 க்கும் மேற்பட்டவர்கள் ஆர். எம் வியுடனான தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது விஞ்ஞானி நம்பி நாராயணன் மற்றும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் ஆர் கண்ணன். ஆர் கண்ணன், ஒரு வரலாற்று ஆய்வாளராகவும் இருப்பதால், ஆர். எம் வீரப்பன் பற்றிய குறிப்புகளை மிகவும் கோர்வையாக நினைவு படுத்தி இந்த ஆவணப்படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.
செருப்பு தொழிற்சாலையே தொடங்க முடியும் என்கிற அளவிற்கு செல்வ செழிப்புடன் இருந்த ஆர் எம் வீ, நல்லி குப்புசாமி செட்டியார் புது செருப்பு வாங்கிய வரும் வரை எவ்வளவு தேய்ந்தாலும் ஏற்கனவே அணிந்திருக்கும் பழைய செருப்பை மாற்றுவது இல்லை என்று குழந்தைகளுக்கே உரிய பிடிவாதத்துடன் இருந்திருக்கிறார். நல்லி குப்புசாமி செட்டியாரும், ஆர் எம் வீரப்பனை சந்திக்கும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் புது செருப்பு ஒன்றை வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். ஆர் எம் வீரப்பன், அவரது வாழ்நாளில் தனக்காக ஆசைப்பட்டது, 100 எம் எல் ஏக்கள் கையெழுத்துப்போட்டு கொடுத்த முதலமைச்சர் பதவி அல்ல, நல்லிகுப்புசாமி செட்டியார் வாங்கிக்கொடுக்கும் புதுச்செருப்பு ஒன்றுதான் போலும்!
ஆர். எம். வீரப்பனின் சுயசரிதைகளை படிப்பவர்களுக்கு ஒன்று தோன்றலாம், “ நமக்கு அப்படி வாய்ப்பு கிடைத்தால் , அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்கக்கூடாது..” என்று. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு ஒருவரை தேடிவர, அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். தேடல், வாய்ப்புகளைச் சரியாகப்பயன்படுத்திக்கொள்ள தேவையான அறிவு, கடின உழைப்பு, விசுவாசம் எல்லாவற்றிற்கும் மேலாக தியாகம் இவையனைத்தும் இருந்தாலே அப்படிப்பட்ட உயரங்களை அடைய முடியும் என்பது, ஆர் எம் வி, தி கிங் மேக்கர் சொல்லும் பாடம்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியே, “நீ முதலமைச்சராக வருவாய்,,,” என்று சொல்லியிருப்பாரா என்று தெரியாத நிலையில், அன்று உள்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் , “நீங்கள் ஒரு நாள் முதலமைச்சராக வருவீர்கள் ..” என்று ஆருடம் கூறிய பெருமை ஆர்.எம் வீரப்பனுக்கே சொந்தமானது. அதனால் தானோ என்னவோ, இன்று தமிழக முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலினும் அவர் மீது இன்றளவும் பெரிய மரியாதை கொண்டிருப்பதுடன், ஆர். எம் வீ தி கிங் மேக்கர் ஆவணப்படத்தின் மூலம் அவரைப்பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சத்யா மூவீஸ் மூலம் பல வெற்றிப்படங்களை தயாரித்தது, பல கலைஞர்களை அறிமுகப்படுத்தியது என்று ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கை சாதனைகள் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது.
தமிழக அரசியலைப்பற்றி தெர்ந்துகொள்ள விழைபவர்களுக்கும், அரசியல் ஆர்வம் கொண்டவர்களுக்கும் ஆகச்சிறந்த பாடமாக ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஓடும் இந்த ஆவணப்படத்தை இடைவேளை எதுவுமின்றி கண் சிமிட்டாமல் பார்த்து மகிழும் வண்ணம் விறுவிறுப்பாக உருவாக்கியிருக்கியிருக்கிறார் இயக்குநர் பினு சுப்பிரமணியம்.
