மேகங்களுக்கு பல ஆயிரம் அடி கீழே வசிக்கும் நமக்காக, மேகக்கூட்டங்களுக்கு பல நூறு அடிகளுக்கு மேலே வசிக்கும் அற்புதமான மனிதர்களைப்பற்றிய படம் அல்லது ஆவணம், அருள்வான்.
தகராறுக்கு அப்புறம், அருள்நிதி, கணேஷ் விநாயகம் கூட்டணில் வந்திருக்கும் அற்புதமான இன்னொரு படம் அருள்வான். அருள்நிதி நடித்த படங்களிலேயே வம்சம் படத்திற்கு பிறகு மிகவும் பொருத்தமான தலைப்பு. தலைப்புக்கு ஏற்றார்ப்போலவே, கல்வியை அருளும் மாமனிதனாக இந்தப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் அருள் நிதி. ஒரு ஜோடி இல்லை, அதனால் டூயட் இல்லை, எந்தவிதமான கதாநாயக முறுக்கு இல்லை, அவ்வளவு ஏன் மலையேறும் போது, நாம கதா நாயகன் மூச்சு வாங்க்கூடாது என்று கெத்து காட்டியிருக்கலாம், ஆனால், கைகளை முழங்காலில் ஊன்றி குனிந்து, யப்பா முடியல… என்று டயர்ட் ஆவதெல்லாம் வேற லெவல், மிகவும் யதார்த்தம்.
ஒரு பொறுப்புள்ள இளம் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆட்சியர் பதவியை உதறிவிட்டு, ஆசிரியப்பணிக்கு அதுவும் சாலைவசதிகள் இல்லாத மலைகிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கில் ஆசிரியராக செல்வது எல்லாம், பெரிய இன்ஸ்பிரேஷனல் கதாபாத்திரம். முதல்முறையாக முதிர்ச்சியடைந்த மனிதராக ஒப்பனையெல்லாம் போட்டு அசத்தியிருக்கிறார். அருள்நிதியின் ரசிகர்களுக்கு புதிய விருந்து. முத்தாய்ப்பாக , படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல்., சொந்த கொள்ளுத்தாத்தாவின் பெயர்.
முதல்பாதியை ஆக்ரமிப்பது, குறிஞ்சி கதாபாத்தில் நடித்திருக்கும் கிரித்திகாவும் , அவரது தந்தை கந்தனாக நடித்திருக்கும் ஆரவ், தாய் அமரவள்ளியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் மற்றும் தாத்தாவாக உறவினர்களாக வருபவர்கள் அனைவரும்.
அதிலும் ஆரவ், ரம்யா பாண்டியன் , கிரித்திகா உள்ளிட்ட அனைவரும் காடர் மொழி பேசி நடித்திருப்பது அருமையாக இருக்கிறது. இன்றைய மலையாளம் மற்றும் சிங்களம் கலந்த ஒரு தொணியில் அந்த மொழியின் ஒலிவடிவம் இருக்கிறது. வானைத்தொடும் மலைகள், அடர்த்தியான காடுகள், வானிலிருந்து கொட்டுவது போன்ற அருவிகள், அங்கே , எந்த விதமான வெளித்தொடர்பும் இல்லாமல் வெள்ளந்தியாக வாழும் இனக்கூட்டங்கள் என்று ஒரு ஹாலிவுட் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். குறிஞ்சி நில மக்களின் முருக வழிபாடு, பூஜைகள் எல்லாம் காந்தாராவை விட சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எழுதப்படிக்கத்தெரியாத, அதாவது அவர்களைப் பொருத்தவரை நாம் பேசும் தமிழும் அந்நிய மொழி தான், அந்த அந்நிய மொழி தெரியாத தாத்தா , தவறாக கை நாட்டு போட்டு, குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்துகொள்கிறார். சாகும் முன், தன் பேத்தியிடம் , நீ படிக்காம இருந்துடாதம்மா என்று சத்தியமும் வாங்கிவிடுகிறார். இன வழக்கங்கள் கட்டுப்பாடுகளை மீறு ஆரவ் தன் மகளை படிக்க வைக்க உதவ முன்வருகிறார். ஊர் மக்களாக கலெக்டரை சென்று பார்க்கவிருந்த நிலையில், நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று நினைக்கும் கிரித்திகா, தானே கலெக்டரை பார்க்க கீழே இறங்குகிறாள்.
காட்டு விலங்குகள் மத்தியில் கூட பாதுகாப்பாக வாழ்ந்த அவள், தரையில் வாழும் மனித மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடுபடுகிறாள். அவளை அருள் நிதி மீட்கும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
விலங்குகளை விட மோசமான என்று சொன்னால் அது விலங்குகளை அசிங்கப்படுது போல ஆகிவிடும். மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக சீருடை அணிந்த வனக்காவலர்கள், வெளி நாட்டுக்காரன் போடும் எலும்புத்துண்டுகாக , சொந்த மக்களையே நசுக்கும் கொடூர வில்லனாக ஜான் விஜய் உள்ளிட்ட ஓரிருவர். நேர்மையான அதிகாரியாக ஒரே ஒரு காட்சியில் சரவணன் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தேயிலை மற்றும் காப்பி என்கிற விஷங்கள் கொண்டுவரப்பட்டு நமது மலைகள் மொட்டையடிக்கப்பட்டுது போதாது என்று போதை தரும் காளான் சாகுபடி வேறு!
மலைவாழ் பழங்குடிகள் நமது மூத்த சமூகத்தினர், நமக்காக சம்பளம் வாங்காத காவலர்களாக காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து வருபவர்களுக்கு, அவர்கள் பாதுகாக்கும் காடுகளிலேஎயே அவர்களால் ஒரு சுள்ளி கூட அரசு அனுமதியில்லாமல் பொறுக்க முடியாத அவலம்.
இந்தப்படம் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசித்து பார்த்தால், வாக்குவங்கி அரசியல் எப்படி இந்த மண்ணில் வாழும் பழங்குடி, மூத்த சமூகங்களை புறக்கணிக்கிறது என்பது விளங்கும். பல லட்சம் ஓட்டுகள் இருப்பதால், மாநிலம் முழுவதும் பல நூறு உருதுபள்ளிகள். ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள அந்த பழங்குடிகள் பேசும் காடர் மொழியில் பள்ளிக்கூடம் இல்லை, ஏன் அவர்கள் மொழியில் அவர்களுக்கு கல்வி கொடுக்காமல், பெரும்பாலானோர் பேசும் தமிழ் மொழியை அவர்கள் மீது திணித்து அவர்களுக்கு தமிழில் கல்வி கற்றுக்கொடுக்கிறோம். நமது மூத்த குடிகளான அவர்களை ஒரு ஐநூற்றுச்சொச்சம் பேரை பாதுகாத்து, அவர்களது மொழியையும் பாதுகாத்து, அவர்களின் தாய்மொழியிலேயே அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க இயலாதா ? சுதந்திர இந்தியாவில், இன்னும் நமக்கான நம் மக்களுக்கான திட்டமிடல்கள் செய்யப்படாததே இதற்கெல்லாம் காரணம். ஒரு பக்கம் இந்தி திணிப்பு என்று பேசிக்கொண்டே, நமது சொந்த மக்களின் மொழியை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். அல்லது பாதுகாக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்…. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்… என்கிற பாரதியின் வரிகளோடு அனைவருக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்கிற இப்படத்தின் மூலக்கரு போற்றத்தக்கது. அதையும் தாண்டி தமிழகதில் வழக்கில் இருக்கும் , நமது மூத்த குடிகளான மலைவாழ் பழங்குடிகளின் அழிவின் விளிம்பில் இருக்கும் காடர் உள்ளிட்ட மொழிகளை பாதுகாத்து, முடிந்தால் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கும் அவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுத்து , வழக்குத்தமிழில் அவற்றிற்கு அர்த்தங்கள் எழுதி அகராதிகளாக ஆவணப்படுத்த வேண்டியது நமது கடமை. இல்லாத ஒரு மொழியை, பாகுபலி படத்திற்காக புதிதாக உருவாக்கி அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க முடிந்த மதன்கார்க்கி போன்றோர் , பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் நமது மலைவாழ் பழங்குடி மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்க முன்வரவேண்டும்.
ஜீவி பிரகாஷ்குமாரின் இசை, எம் சுகுமாரின் ஒளிப்பதிவு லால்குடி இளையராஜாவின் கலை வண்ணம் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அற்புதமாக அருளியிருக்கிறார்கள்.
அருள்வான், மனதை தொடுவான் !!