Gandhi Talks

mysixer rating 4/5

68

a K Vijay Anandh review

தென்மேற்கு பருவக்காற்றில் Kollywood ஆரம்பித்து இன்று வடமேற்கு பருவக்காற்றுடன் Bollywood கலந்துவிட்ட விஜய் சேதுபதி வளர்ச்சி உண்மையாகவே பாராட்டத்தக்கது. நல்ல கதைகளில் தன்னுடைய இயல்பான நடிப்பால் அட்டகாசமாக பொருந்தி போய் விடுகிறார், அது மட்டுமல்லாமல் அந்த கதைக்கு அதிகபட்சமாக அவரது பங்களிப்பையும் வழங்கி விடுகிறார்.

வயது முதிர்ந்த உடல் நலம் குன்றிய தாயை வைத்துக்கொண்டு மும்பை பெருநகரத்தில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழும் வறுமை சூழ் இளைஞன், குடும்ப வறுமையை போக்கவும் எதிர் வீட்டு காதலியை கரம் பிடிக்கவும் திருடலாம் என்று முடிவு செய்து களம் இறங்குகிறார்.

திருடுவதற்கு அவர் டார்கெட் செய்து இருப்பதோ, மிகப்பெரிய தொழிலதிபர் அரவிந்தசாமி. திட்டமிட்டபடி அரவிந்த்சாமி வீட்டிற்குள் நுழைந்த விஜய சேதுபதி, அவரது திட்டத்தில் வெற்றி பெறுகிறாரா ? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

நாயகி அதிதி ராவ் ஹைதாரியும் சிறப்பாக நடித்திருக்கிறார், கண்களாலேயே பேசுகிறார்.

அகிம்சை என்கிற அறவழிப் போராட்டத்தை இந்த உலகிற்கு கொடுத்த மகாத்மா காந்தியை போற்றும் விதமாக வெளிவந்திருக்கும் இந்த படம், அவரைப் போலவே ஒரு மௌன படமாக வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

படத்தில் வசனங்கள் கட்டாயமாக இடம் பெற்றே ஆக வேண்டும் என்கிற இடங்களில் கூட வசனங்கள் இல்லாமல் காட்சிகளாலேயே சுவராசியப்படுத்தி விடுகிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்.

மாடியிலிருந்து வாய் கொப்பளிக்கும் முதியவர், அவரது எச்சியை குடித்த மீன் அவர் வீட்டிற்கே சமையல் அறைக்கு வருவது, கீழே விழுந்த அரவிந்தசாமியின் பர்சை எடுக்கலாம் என்று குனியும் விஜய் சேதுபதி, ரிவர்சில் வந்து கதவைத் திறந்து பர்சை எடுக்கும் அரவிந்த்சாமி, எதிர்க்கட்சி வக்கீலை விலைக்கு வாங்க மூன்று கோடி வரை பேரம் பேசும் அரவிந்த்சாமியின் வக்கீல், அட நமக்குள்ள என்னடா பேரம் என்று நீதிபதியையே விலைக்கு வாங்கும் எதிர்க்கட்சி வக்கீல் என்று ஆரம்பக் காட்சிகள் முதல், வீடு முழுவதும் தீ விபத்தை ஏற்படுத்த மது பாட்டில்களை வெடிக்க வைக்கும் அரவிந்த்சாமி என்று காட்சிப்படுத்துவது வரை மிகவும் வித்தியாசமான பொழுதுபோக்கை வழங்கி இருக்கிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங்.

மகாத்மா காந்தி மீது சர்ச்சைகள் பல இருந்தாலும், அவர் காட்டிய அகிம்சை, நேர்மை, பொய் சொல்லாமை ஆகியவை, அன்றைய காலகட்டத்திற்கு மட்டுமல்ல,  இன்றைய காலத்திற்கு மட்டுமல்ல என்றைக்கும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக வெளியாகி இருக்கும் காந்தி டாக்ஸ் , நின்று பேசும்!