நாற்காலி பிடிக்காத நாயகன்

49

டி என் 2026 தங்க நட்சத்திரம், தமிழகத்தில் 2026 சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு கட்சிகள் தங்களுக்கு வசதியான கொள்கை மற்றும் கொள்ளை ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்க களமிறங்கியிருக்கும் நிலையில், கண்ணன் ரவி – உமாபதி ராமையா – நட்டி நடராஜ் கூட்டணி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி அதாவது தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்னரே திரையரங்குகளில் ஒரு தேர்தல் திருவிழாவை நடத்திக்காட்ட தயாராகிவிட்டது.

இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள ஏ ஆர் எஸ் ஸ்டுடியோ வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  படத்தில் காட்டப்படுவது போன்ற கட்சிக்கொடிகள், தோரணங்கள், பிரச்சார வேன், வரவேற்பு அலங்காரங்கள், பேனர்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரு பிரதான கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகம் போல காட்சியளித்தது. போதாக்குறைக்கு, பிக் பாஸ் வெற்றி நாயகன் முத்துக்குமார், அழகிய தமிழில் வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பு கிட்டத்தட்ட இது ஒரு அரசியல் மேடை  போன்றே அமைய வழி செய்தது .

குல்கந்து குமார் என்கிற நடிகன் அரசியலுக்கு வருகிறார் என்பதை மையப்படுத்தி, குல்கந்து குமாராக நட்டி நட்ராஜ் நடிக்க, தேசிய விருது பெற்ற ஜாம்பவான்கள் எம் எஸ் பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா ஆகியோருடன், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஆதித்யா கதிர், விஜி சந்திரசேகர்,  இந்திரஜா , ஷ்ரிதா ராவ் , முத்துக்குமார் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.

தர்புகா சிவா இசையில் மோகன் ராஜனும், கார்த்திக் நேத்தாவும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய லீடர் சண்டை பயிற்சியாளர் மகேஷ் மாத்யூ சண்டைப்பயிற்சியையும் சாண்டி மாஸ்டர் நடன பயிற்சியையும் வழங்கியிருக்கிறார்கள்.

“ இது எந்த நடிகர்களை பற்றியும் கிண்டல் செய்யும் படமல்ல, ஜாலியான ஒரு அரசியல் டிராமா ..” என்று உமாபதியும், “ அப்படி யாராவது தங்களைத்தான் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று தவறாகப்புரிந்து கொண்டால், அவர்களுக்கு விளக்கம் சொல்ல காத்திருக்கிறேன்..”  என்று நட்டி நட்ராஜும், “ ஆஹா தப்பா புரிஞ்சுக்கிட்டோமே என்று ஆதவ் அர்ஜுனா வருத்தப்படுவார் ..” என்று தம்பி ராமையாவும் அதிரடியாக  தன்னிலை விளக்கம் அளித்தனர்.

“ இந்த மேடை ஒரு குடும்ப அரசியல் மேடையாக இருக்கிறது..” என்று இந்திரஜா சொல்ல, “ இந்த குடும்ப அரசியல் மேடையில், மாமா அர்ஜுனுக்கு இடமில்லையா ..? “ என்று கேட்டதற்கு, “ இல்லை… இந்த சிறிய கதையில் அவருக்கு கதாபாத்திரமில்லை..” என்று உமாபதி தெரிவித்தார்.

நட்டி நட்ராஜுக்கு, மற்றவர்களை விட சிறப்பான இருக்கை போடப்பட நிகழ்ச்சி முழுவதும் அவர் மிகவும் சங்கோஜப்பட்டுக்கொண்டே அதில் அமர்ந்திருந்தார். “ நல்லா உட்காருங்க.. அது உங்க நாற்காலிதான் ..” என்று இளவரசு சொன்ன பிறகும், நாற்காலியின் நுனியிலேயே அமர்ந்திருந்த நட்டி நட்ராஜை பார்த்து, “ எந்த அரசியல்வாதியாவது இப்படி இருப்பானா..? நாற்காலிக்கு அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், நாற்காலி பிடிக்காத நாயகனா..?” என்று அங்கலாய்த்தனர்.

மகன் இயக்குனராகும் பட விழா அரங்கிற்குள் நுழையும் போதே , அரசியல்வாதி போல குத்தாட்டம் போட்டுக்கொண்டே தம்பி ராமையா வந்ததும், இதோ இந்த நிகழ்ச்சி முடிந்து நேரா ஒரு அரசியல் கட்சியில் சேரப்போறேன் என்று விஜி சந்திரசேகர் பேசியதும் குறிப்பிடத்தக்க அமசங்கள் என்றால், “ ஓம் சக்தி..பராசக்தி… “ என்று எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் பேச ஆரம்பித்தவுடன் திரையரங்கில் என்ன ஆகப்போகுதோ என்று ஒரு தரப்பு ஏற்கனவே கிலிபிடித்துக்கிடப்பதாகக்கேள்வி!