Leader

Rating 4/5

46

a K Vijay Anandh review

12th man, என்றால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் சப்ஸ்டிடியூட் ஆக இருக்கும்  விளையாட்டு வீரர் என்று தான்  நமக்கு தெரியும். 12 மேன் ஸ்குவாட் என்று இந்திய இராணுவத்தில் ஒரு சக்தி வாய்ந்த ,  சிறப்பு பயிற்சி பெற்ற திறமைசாலிகளை உள்ளடக்கிய ஒரு சிறு படைப்பிரிவு இருக்கிறது என்பதும். இந்திய பாதுகாப்பு துறையின் பிற பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து வீர தீர சாகசங்களைச் செய்கிறது என்பதும், ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கி,  லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் லீடர் படம் பார்த்த பிறகு தான் பலருக்கும் தெரியவரும் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில், லீடர் படத்தை தூத்துக்குடியில் ஒரு துரந்தர் என்றும் சொல்லலாம். ஆம், உளவாளிகள் வெளி நாடுகளில் ஊடுருவிதான் பணி செய்யவேண்டமென்பதில்லை. உள் நாட்டில் கூட தனது அடையாளங்களை மறைத்து , அங்கு  நடைபெறும் தேச துரோக செயல்களைத் தடுத்து நிறுத்தலாம்.

தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சிபெற்றால், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு வயிறு எரிகிறது, ஆகவே அந்த நாடு அவர்களின் இந்திய அடிமைகளை வைத்து, அந்த துறைமுகத்தையே சின்னாபின்னமாக்க முயல்கிறது. அது எப்படி, லிஜெண்ட் சரவணனின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்படுகிறது என்பதே லீடர் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

சொகுசு கார்களை சர்வீஸ் செய்யும் சக்திவேல் என்கிற மெக்கானிக்காக அறிமுகமாகிறார் லெஜெண்ட் சரவணன்.  தானுண்டு தனது வளர்ப்பு குழந்தை உண்டு என்று மற்றவர் பார்வையில் தெரிந்தாலும், நேர்மையான காவல்துறை அதிகாரி ஆண்ட்ரியா மூலம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இந்த சிக்கலில், காவல்துறை உயரதிகாரி பக்தவத்சலம் ஆக வரும் ஷாமும் சிக்கிக்கொள்கிறார், தனது சீருடையை கழட்ட வேண்டிய சூழல் அவருக்கு.

அந்த சூழ் நிலையில் தான், ஆண்ட்ரியா அப்பா லால் மூலம், உண்மையில் சக்திவேல் என்கிற பெயரில் இருக்கும் பொன்மாறன் தான் லிஜெண்ட் சரவணன், அவர் சமீபத்தில் ஒரு வெளி நாட்டில் உள் நாட்டு கலவரத்தில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்கள் 42 பேரை அதிரடியாக மீட்டவர் என்பது தெரியவருகிறது.

வெறும் 12 பேரோடு சென்று வெளி நாட்டில் வீரசாகசம் நிகழ்த்தியவர் உள் நாட்டில், துக்கடா வில்லன்களை விட்டுவிடுவாரா என்ன..?

துறைமுகம், கண்டெய்னர்கள், வெளிநாடு, சேசிங், விமானப்பயணம் என்று பெரும்பாலான காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கின்றன, எந்த விதமான சமரசங்களும் இல்லாமல்.

தனது இரண்டாவது படத்திலேயே திரைமொழிக்கான உடல்மொழியை கச்சிதமாக பிடித்துக்கொண்டு, ஒரு தொழில்முறை நடிகராக மாறியுள்ளார் லெஜண்ட் சரவணன்.  உள்ளூராக இருந்தால் என்ன ? வெளி நாடாக இருந்தால் என்ன..? எனது தாய்மொழியான தூத்துக்குடி தமிழில் தான் , அதே ஸ்லாங்கில் தான் பேசுவேன், என்று மண்ணின் மொழியை உலகிற்கு எடுத்துச் செல்வதும், இவரின் தனித்துவமான ஒன்று. முகம், அந்த  டிரிம் செய்யப்பட்ட தாடி, இவருக்கு ஒரு வசீகரமான தோற்றத்தை கொடுக்கிறது, அடுத்தடுத்த படங்களில்,  முழு நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்துவார்.

முதல்பாதி முழுவதும் லெஜண்ட் சரவணன் ஆக்மிரத்துவிடுகிறார் என்றால், இரண்டாவது பாதியில் சந்தோஷ் பிரதாப்பிற்கு,  மிரட்டலான வில்லத்தனம் செய்யும் வாய்ப்பு, மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

ஏ சி பக்தவதசலமாக , ஒரு பாரம்பரிய காவல்பணி குடும்பத்தில் இருந்து வருபவராக, ஷாம் , மிக மிக கண்ணியமான வேடம்.  “ உங்க குடும்பத்தை நீங்க சரியா பயன்படுத்தல..” என்கிற லெஜண்ட் சரவணனின் ஒற்றை வரியில், அவரது குடும்பத்து காவல்துறை அதிகாரிகள் ஓ ஏ கே சுந்தர் உள்ளிட்ட பலரும் தூத்துக்குடி துறைமுகத்தில் குவிந்து வில்லன்களின் சதியை கண்டுபிடிக்கும் காட்சி , அதகளம்.

ஆண்ட்ரியா, லால் ஆகியோர் சிறப்பாக தங்களது கதாபாத்திரங்களில் பொருந்திப்போகிறார்கள்.

12 மேன் ஸ்குவாடில் துடிப்பான சக அதிகாரியாக வந்து, லெஜண்ட் சரவணன் மனதில் இடம் பிடிக்கிறார் பாயல் ராஜ்புத், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு.

இயல் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

தங்கப்பழமாக விடிவி கணேஷ், ஃபெராரியாக ஆதித்யா கதிர் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

சால்ட் , அட பெயரே செமயா இருக்கு, பாகுபலி பிரபாகரன் அற்புதமாக  நடித்திருக்கிறார்.

தொழில்நுட்பரீதியாக, வெங்கடேஷின் ஒளிப்பதிவு, பிரதீப் இ ராகவின் எடிட்டிங் அனைத்தும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கின்றன.

விவேகா, மோகன் ராஜன்,  கபிலன் ஆகியோர் எழுதிய பாடல்களுடன் அருணகிரி நாதரின் முத்தைத்தரு பத்தி திரு நகை… பாடலை மிகவும் பொருத்தமான இடத்தில்  வைத்து, ரசிகர்களின் மயிர்க்கூச்செரிய செய்திருக்கிறார் இசையமைப்பார் ஜிப்ரன்.   ஆக்‌ஷன் இயக்குனர் மகேஷ் மாத்யூவும் அதிரடியாக சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கிறார், இந்திய சினிமா வரலாற்றிலேயே , முதன்முறையாக  இந்திய ரயில்வேயின் பெருமையான வந்தே பாரத் டிரெயினில் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய விருந்து படைக்கும். சந்தோஷ் பிரதாப் மணிக்கட்டில் கட்டப்பட்ட  வெடிகுண்டு டிரெயினுக்குள் வெடித்தால் அதுவும் , பைலட் அறையில் வெடித்தால் நன்றாக இருக்காது என்று, லெஜண்ட் சரவணன் அவரை அதி நவீன துப்பாக்கியால் சுட, அது சந்தோஷ் பிராதப்பை வந்தே பாரத்தின் வேகத்தை முந்திக்கொண்டு டிரெயினுக்கு வெளியே செல்ல வைத்து, வெடிகுண்டு வெடிப்பது என்பதெல்லாம் வேற லெவல், சண்டை காட்சி அமைப்புகள். உண்மையில் இந்திய திரையுலகின் பல ஆக்‌ஷன் ஸ்டார்களுக்கும் வாய்க்காத, சண்டை காட்சிகள்.

வழக்கமாக சுந்தர் சி படங்களில் தான் இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளம் இருக்கும், ஆர் எஸ் துரை செந்தில் குமார் படங்களில் முதன் முறையாக அதைவிட அதிகமான  எண்ணிக்கையில் நடிகர்கள், பத்மன், யோகி, அம்ரிதா ஐயர், ஜார்ஜ் மரியன் என்று பிரபலமான நடிகர்கள் உள்ளிட்ட அவ்வளவு நடிகர்களையும் திரையில் பார்ப்பதே அழகாக இருக்கிறது.

லெஜண்ட் சரவணனுடன் வளரும் குழந்தை டெக்ஸ்டோகார்டியா எனப்படும், அவரது அம்மாவைப்போல  இதயம் வலப்புறம் அமையப்பெற்ற குழந்தையாக இருப்பதும்,  அதனைச் சரியாக ஒரு காட்சியில் பயன்படுத்தியிருப்பதும், மிகச்சிறந்த திரைக்கதைக்கான உழைப்பை காட்டுகிறது.

ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் விஜயகாந்த் படங்களை பார்ப்பது போன்ற ஒரு பிரமையை , அதைவிட அதிகமான திருப்தியை இயக்குநர் ஆர் எஸ் துரை செந்தில்குமாரும் லெஜண்ட் சரவணனும் ஏற்படுத்திவிடுகிறார்கள்.

லெஜண்ட் சரவணன், உண்மையிலே லீடர் தான்!