லவ் இன்ஷுரன்ஸ் கொம்பனி படத்தில் , பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடிக்க சீமானை அழைத்து வந்ததில் முக்கியப்பங்காற்றியிருக்கிறார் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான ஜெகன்.
அது தவிர , இப்பட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கும் ஜெகன் , இந்தப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, ” இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா? என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள். படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.