a K Vijay Anandh review
மறுபடியும் பொறக்கவா போறோம்… என்று ராம்சரண், அவர் விரும்பியதை செய்யும் ஒவ்வொரு முறையும் கேட்டுவிட்டு செய்வது படத்தின் முக்கியமான காட்சிகள்..
ஒரு மிகப்பெரிய தத்துவத்தை எவ்வளவு அசால்டாக சொல்லிவிடுகிறார். மனிதாய் பிறந்த இந்த பிறவியை மிகவும் பயனுள்ள வகையில் வாழ்ந்து காட்டவேண்டும் என்பது தான் அதன் உட்கருத்து.
மறுபடியும் பொறக்கவா போறோம் என்று கேட்டுக்கொண்டு எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து கொண்டிருக்காமல், அவர் எவ்வளவு பிரயோஜனமாக வாழ்கிறார், சுதந்திர இந்தியாவிலும் முகவரியே இல்லாமல் இருக்கும் 18 ஆயிரம் கிராமங்கள் போல இருக்கும் அவரது கிராமத்திற்கு எப்படி ஒரு அஞ்சல் குறியீடு வாங்கி கொடுக்கிறார், மலைக்கிராமமான அவரது ஊருக்கு எப்படி ஒரு ரயில் நிலையம் பெற்றுத்தருகிறார் என்பதே மீதிக்கதை.
ஒரு கூலி மலைக்கிராமவாசியாக இருந்து உலகமே போற்றும் விளையாட்டு வீரனாக தனது கடினமான உழைப்பால் முன்னேறும் பெத்தி என்கிற ராம்சரண் கதாபாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரேமிலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் ராம் சரண்.
மல்யுத்த வாத்தியாராக வரும் சிவராஜ்குமாரும் சிறப்பாக நடித்திருக்கிறார். இருக்கியா..? போறியா..? என்கிற இரண்டு கேள்விகளுக்குள் தனது மாணவனுக்கு சிறப்பான பயிற்சிகள் கொடுக்கும் அழகே அழகு!
ஜான்வி கபூர், அதிரடியான கவர்ச்சியான கிராமத்து அரசியல்வாதியாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஒரு பாடலில் பஞ்சதந்திரம் படத்தில் சிம்ரனும் ரம்யா கிருஷ்ணனும் போடும் சக்களத்தி சண்டையை ஒத்த ஒரு பாடல் காட்சியில் , கமல்ஹாசன் மகளான ஸ்ருதிஹாசனும் ஶ்ரீதேவி மகளான ஜான்வி கபூரும் மோதிக்கொள்வது , ராம் சரணுடன் சேர்ந்து ஆடுவது, பிரபஞ்ச விதி!
நல்ல பல விஷயங்களை சுகுமார் எழுத, அதனை ஆந்திர காரப்பொடி தோசை போன்று காரசாரமாக இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.
Motivational Films ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்!