a K Vijay Anandh review
சுதந்திர இந்தியாவில் நமது மாணவர்கள் யாரைப் பற்றி படிக்க வேண்டும் ? யாரைப் பற்றி படிக்க தேவையில்லை ? என்பது குறித்தான சரியான நெறிமுறைகள் ஏற்படுத்தாததன் விளைவு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த பின்னரும் ஒரு முழுமையான வளர்ந்த நாடாகவோ அல்லது ஒரு முழுமையான தற்சார்பு நாடாகவோ மாற முடியவில்லை.
பல சீர்திருத்தங்கள் முக்கியமான சீர்திருத்தம் கல்வி , சரியான பாடத்திட்டங்களை அமைத்தல் என்கிற கருத்தின் அடிப்படையில் இந்த படம் ஆரம்பிக்கின்றது.
அந்தத் திரைக்கதை அமைப்பிலேயே இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.
கதை, மறைக்கப்பட்ட நாயகரான ஜி டி நாயுடுவை பற்றி விரிகிறது.
யார்யா இந்தப்பையன் அப்படியே ஜி டி நாயுடுவின் இளமைப்பருவத்தை நினைவுபடுத்துகிறான் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு திஜேந்தன் அருணாசலம். துறு துறு என்று வலம் வந்து ஆரம்பக்காட்சிகளிலேயே ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார்.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும், ஷீலா ராம்குமார் நல்ல தேர்வு, அப்படியே பிரியாமணியாக மாறும் போது அச்சு அசலாக பொருந்துகிற முக சாயல்.
பருத்தி கம்பெனிக்கு வேலை கேட்டு ஜி டி நாயுடு செல்லும் போது அதாவது பிற்காலத்தில் ஈ வெ ராமசாமி அவருக்கு நண்பராக வந்து பெண்ணியம் பேசுவதற்கு முன்னரே, அந்த பருத்தி கம்பெனியை நிர்வகிக்கிறார் நெற்றியில் திருநீறு அணிந்த ஒரு விதவை கொங்கு நாட்டு தமிழச்சி.
ஈறுகளை வெளியே தள்ளும் தலைக்கு சிக்கெடுக்கும் சீப்பை உதாரணமாக கொண்டு, பருத்தியையும் விதைகளையும் பிரித்தெடுக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பதிலிருந்து ஜி டி நாயுடு மக்களுக்கு அன்றாட தேவைகளை எளிதாக்கும் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார்.
அப்படியே ஒரு புகைப்படத்தில் நடுவயது ஜி டி நாயுடுவாக மாதவன், மாதவன் ஆரம்பிக்கும் மோட்டார் கம்பெனிஇல் பேருந்துகளின் எண்ணிக்கை பல்கிப்பெருக்குவது என்று காட்சிகள் மாறும் விதம் அற்புதமாக இருக்கிறது.
முகச்சவரம் செய்யும், ஆட்டோமேட்டிக் ரேசர் , மின்மோட்டார், கார் , பாலிடெக்னிக், விவசாயம் என்று ஜி டி நாயுடு கைவைக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு அவரது அறிவுத்தேடல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஜி டி நாயுடுவாக மாதவன் சிறப்பாக நடித்திருக்கிறார். சமீப காலங்களில் பயோ பிக் ஆ கூப்பிடு மாதவனை என்கிற அளவிற்கு அற்புதமான மனிதர்களை பற்றிய படங்களில் நடித்து அசத்துகிறார். அதுவும் நேரு குடும்ப காங்கிரசால் வஞ்சிக்கப்பட்ட நாயகர்களின் கதாபாத்திரங்கள் என்றால் மாதவனுக்கு அல்வா சாப்பிடுவது போல..
சத்யராஜ், ராமையா பிள்ளையாக அறிமுகமாவதில் இருந்து காட்சிகளை தான் வசமாக்கி கொள்கிறார்.
மைண்ட் பவர் மாதவனுக்கு மாஸ் சத்யராஜுக்கு என்கிற அளவிற்கு , ஜெர்மனியில் மாதவனை காப்பாற்றுவதில் இருந்து உள்ளூர் இன்கம்டாக்ஸ் ஆபிசரிடம் மோதுவது வரை சத்யராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். ” குழந்தை குண்டி மாதிரி …” என்று ஒரு டைமிங் வசனம் பேசும் இடத்தில் கை தட்டல் திரையரங்கை அதிரச்செய்கிறது.
பிரியாமணி, தனது உடல்நிலை தன் கணவரின் கனவுகளுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளும் இடம் மிகவும் உணர்ச்சி பூர்வமானது.
அடுத்து வரும் துஷாரா விஜயனும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
ஜி டி நாயுடுவுக்கும் பல்வேறு துறை ஜாம்பவான்களுக்கும் இடையில் இருக்கும் நட்பு மெச்சத்தக்கது.
NSK மற்றும் MR ராதா ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஜீப்பில் ஜி டி நாயுடு ஸ்டன்ட் செய்யும் காட்சிகள் அற்புதம்.
1947 க்கு முன் வெள்ளைக்காரன் மூலமும் அதன் பின் சுய சிந்தனை துளியும் இன்றி பதவிக்கு வந்தால் போதும் என்று வந்து அமர்ந்த நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு முகமாகவும் ஜி டி நாயுடு வஞ்சிக்கப்படும் தருணங்களை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
Benz கார் கம்பெனியுடன் ஆன ஒப்பந்தம் அரசியல் சூழ்ச்சியால் ஜி டி நாயுடுவிடம் இருந்து பிடுங்கப்படும் போது நமக்கே ரத்தம் கொதிக்கிறது.
ஜி டி நாயுடு அந்த வாய்ப்பை டாடா நிறுவனத்திற்கு சிபாரிசு செய்யும் போது, அவரது பெரிய. மனதை எண்ணி மெய்சிலிர்க்கிறோம்.
அம்பலம் கிருஷ்ணன் என்கிற கதாபாத்திரத்தில் வரும் ஜெயராம், ஜி டி நாயுடுவை உண்டு இல்லாமல் பண்ண கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வதும் அவருக்கு இணையாக கருணாகரனும் துடிப்பதும் நமக்கு கோபத்தை வரவழைக்கும் ரகம்.
மற்றொரு அதிகாரியாக நடித்திருக்கும் முரளியும் இயல்பாக வருகிறார்.
கடைசியாக, ” வெள்ளைக்காரன் உங்கள் கணக்கை தப்பாக எழுதும் போது, ஒத்துக்கொண்டு சில லட்சங்கள் கட்டியிருந்தால், இன்று இவ்வளவு கஷ்டப்பட வேண்டாமே..” என்று ஜெயராம் கேட்கும் போது, ” அப்புறம் வரலாறு என்னை ஒரு தவறான முன்னுதாரணமாக காட்டிவிடும்..” என்று நேர்மையாக இருந்துவிடும் ஜி டி நாயுடு , நமக்கு பல விஷயங்களை கற்றுத்தருகிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசை, அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு என்று எல்லாமுமாக சேர்ந்து இந்தப்படத்தை உலகத்தரமான பயோ பிக் ஆக காட்டியிருக்கின்றன.
தமிழனாகவோ, ஒரு தெலுங்கு நாயுடுவாகவோ, ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ எந்த இடத்திலும் தன்னை சுருக்கி கொள்ளாமல், இந்த பிரபஞ்ச மனிதர்களுக்கான ஒரு இந்திய கண்டுபிடிப்பாளன் என்று வாழ்ந்த ஜி டி நாயுடு என்ற மாமனிதனை கொண்டாடுவோம்.