a K Vijay Anandh review
டைகர் முத்துவேல் பாண்டியன், தானுண்டு தன் குடும்பமுண்டு என்று கேரள எல்லையோர நகரமொன்றில் சூப்பர் மார்கெட் சூப்பர்வைசராக பணியாற்றி கொண்டிருக்கும் போது, காட்டும் முதல் காட்சியிலெயே ஜெயிலர் 2 க்கான ஒரு பரபரப்பான கதைக்கு அடித்தளம் போடப்பட்டிருப்பது, மிகவும் அட்டகாசமான திரைக்கதை.
நகராட்சி அதிகாரி பகவதிபெருமாளின் மருமகன், சூப்பர்வைசர் ரஜினிகாந்திடம் வம்பு வைத்துக்கொள்ள பஞ்சாயத்து, பழக்கடை மூர்த்தி நமோ நாராயாணாவிடம் போக டைகர் முத்துவேல் பாண்டியன் அங்கே சம்பளமில்லாத டிரைவர் வேலைக்கு சேர … படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆயிரம் கேள்விகள் எழலாம். என்ன நடக்குது..? ஒரு சப்பையான பழக்கடை மூர்த்தியிடம் ஏன் தலைவர் டிரைவர் வேலைக்கு சேர்ந்து, கார் துடைப்பதிலிருந்து, கார் கதவு திறந்துவிடுவது வரை இப்படி தம்பிக்கு எந்த ஊரு ? ரஜினிகாந்த் மாதிரி ஆகிட்டாரே ! என்கிற கவலைகள் எழும்.
எல்லாம், நம்ம யோகிபாபு, சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு ஓட அதை, நமோ நாராயணா பார்ப்பது வரைக்கும் தான். அதன் பிறகு , ஜெயிலர் 2 திரைக்கதை ஒரு ராக்கெட் வேகத்தில் அதன் இலக்கை நோக்கி சீறிப்பாய ஆரம்பித்து விடுகிறது.
நமோவை வைத்து எதிரியை, தன்னைத் தேடி வருமாறு டைகர் முத்துவேல் பாண்டியன் செய்யும் வேலைகள் அட்டகாசம். குறி வைச்சா இரை விழனும் என்பது போல, அவர் விரிக்கும் வலையில் சிலை கடத்தலில் இதுவரை யாருமே கண்டுபிடிக்கமுடியாத எல்லோருக்கும் மேல இருக்கும் போதி கல்பக் எஸ் ஜே சூர்யா வரை வந்து விழுவதும் சிலை கடத்தல் கும்பலை கூண்டோடு அழிப்பதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இரண்டாவது பாதி.
வந்தான் சுட்டான் குண்டு வைச்சான் செத்தான் ரிபீட்டு என்று எஸ் ஜே சூர்யா பேசுவது போல போய்க்கொண்டிருக்கும் இரண்டாம் பாதி திரைக்கதையில் மிகச்சரியான இடத்தில், ஒரு செண்டிமெண்ட் காட்சியை வைத்து அதிலிருந்து கிளைமாக்ஸ் வரை ஒரு எமோஷனலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கடத்தி, டைகரை கூண்டுக்குள் அனுப்பி படத்தை நிறைவு செய்திருக்கிறார் நெல்சன். சில வினாடிகளுக்கு முன் ஆர்ப்பரித்து ஓய்ந்த ரசிகர்கள், பிண்டிராப் சைலன்ஸ் ஆகி, அமைதியாக களைந்து செல்வது, புது அனுபவம்.
இரண்டே காட்சிகளில் வந்து , டைகருக்கு உதவும் குட்டி டைகராக வரும் ரித்திக் ரோஷன் படத்தில் பேசும் அந்த வசனம் , ” 20 வருஷத்திற்கு முன்னாடி எனக்கு செய்த உதவியை எப்படி மறப்பேன்..” அது தான் இந்தப்படத்தின் வெற்றிக்கும், ரஜினிகாந்தின் கதாபாத்திர வடிவமைப்புக்கும் முற்றிலும் பொருந்தும். மனிதர் 20 வருஷத்திற்கு முன்னாடி இல்ல, 50 வருஷத்துக்கு முன்னாடியே நிறைய விஷயங்களை விதைத்துவிட்டார், இனி அவர் ஹாயாக சென்று அறுவடை மட்டும் செய்யலாம். அது தான் ஜெயிலர் 2 விலும் நடக்கப்போகிறது. சூப்பற் ஸ்டாருக்காக, இந்தியாவின் முன்னணி நடிகர்கள் தெற்கிலிருந்து மேற்கிலிருந்து, கிழக்கிலிருந்து, வடக்கிலிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும், ஏன் இந்தியாவிற்கு வெளியே ஜாக்கி சானை அழைத்திருந்தால் கூட வருவார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலையில், சூப்பர் மார்கெட் சூப்பர்வைசர் போல சும்மா வந்தாலே போதும், சூப்பர் ஸ்டாருக்கு எல்லாமே தானாக நடக்கும்.
அதேநேரம், இந்த தலைமுறை இயக்குனரான நெல்சனி பட ஆக்க ஸ்டைலுக்கும் ஈடு கொடுத்து , வெறும் உதட்டசைவு மூலமே சிரிக்க வைப்பது என்கிற ஸ்டைலுக்குள் தன்னை முழுவதுமாக உட்படுத்திக்கொண்டு, யோகிபாபுவையே கலாய்த்திருப்பது எல்லாம் வேற லெவல். ரஜினிகாந்தின் பழைய படங்கள் பார்த்திருப்பவர்களுக்கு தெரியும், நகைச்சுவை காட்சிகளில் அவர் உடல் முழுவதும் ஒரு ஸ்டைலாக அசையும்.
தான் ஒரு டான் என்று உருவக்கப்படுத்தப்பட்டது தெரியாமல், பெரிய பெரிய டான்லாம் ஏதேச்சையாக நமோவிடம் அடங்கிபோவது தெரியாமல் – ஒரு கட்டத்தில் தெரிந்த பிறகு நமோ படும் அவஸ்தைகளில் தியேட்டரில் வெடிச்சிரிப்புகளை வரவழைக்கும் ரகம்.
அடுத்த வினாடியில், ஆயிரம் மங்கையர்களை அழைத்து ஆட வைக்கும் சுராஜ் வெஞ்சரமூடு. ரசிகர்களின் பல்ஸ் பார்த்து இரண்டு பாதிகளிலும் தலா ஒரு பாடல் இப்படி வைத்து அசத்தியிருக்கிறார்கள், அனிருத்தும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாவது பாதியை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டதில் எஸ் ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பிற்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்தார் 2 இல் விட்டதையும் சேர்த்து ஜெயிலர் 2 இல் பிடித்திருக்கிறார். கூடவே மிதுன் சக்ரபோர்த்தி, வித்யா பாலன் என்று கோவாவின் பெரிய குடும்பமாக மாஸ் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் அரண்மனை போன்ற வீடு, பாதாள சொர்க்கம் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும்.
மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் என்று ஜாம்பவான்கள் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எஸ் ஜே சூர்யாவின் தனி பாதுகாப்பு காவலாரக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரும் ராகவ், நமோவின் மருமகனாக கூடவே கோலி என்கிற பாத்திரத்தில் வரும் ஜோம் சரோ முதல் கோவாவில் கலெக்டராக வரும் டாக்டர் தீரஜ் வரை ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே டைகர் முத்துவேல் பாண்டியன் ரெகவர் செய்த சிலைகளை இன்னும் சம்பந்தப்பட்ட ஆலயங்களில் ஒப்படைக்கவில்லையா ? இன்னும் மூன்று கண்டெய்னர்களில் ஏதோ ஒரு குவாரியில் மூழ்கடிக்கப்பட்டு கிடப்பது ஏன் ? சில கடத்தல் மன்னனையும் அழித்தாகிற்று, எஞ்ச்யிருப்பது வித்யா பாலனும் அவருடன் ஆயிரக்கணக்கான புரதான சிலைகளும். அவற்றை என்ன செய்யப்போகிறார்கள். சில நாட்களுக்கு முன்னால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து தன் மகனை கொன்றதாக சரணடையும் ரஜினிகாந்து, போதுமான ஆதாரங்களே இல்லாத நிலையில் கைகள் விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்படும் இந்த கேஸ் கோர்ட்டில் நிற்குமா ?
இந்தக்கேள்விகளுக்கெல்லாம் விடையாக ஜெயிலர் 3 வருமா ? நெல்சன் மற்றும் தயாரிப்பாளர் சன் டிவி பதில் சொல்லுவார்கள் விரைவில் !
சன் டிவி தயாரிப்பில் உச்சக்கட்ட பிளாக்பஸ்டர் ஆக ஜெயிலர் 2 !