a K Vijay Anandh review
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அக்மார்க் ஆக்ஷன் கமர்ஷியல் மசாலா கதைக்களம். நாயகன் லியோ சிவக்குமார் மற்றும் பல நடிகர்களுடன் இணைந்து டெலிவரி பாய்ஸ் ஆக, அற்புதமான ஒரு பொழுதுபோக்கு படத்தை டெலிவரி செய்திருக்கிறார்கள்.
இடைவேளை வரை ஊகிக்க முடியாத கதைதான்.
உணவு டெலிவரி பாயாக வேலை பார்த்துக்கொண்டே காவல்துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் நாயாகன் ஒரு பக்கம். கூலிக்கு கொலை செய்யும் கொடூர வில்லன் கோவிந்தராஜனாக சிட்டிங் MP மாதேஸ்வரன் இன்னொரு பக்கம். நடுவே, நாயகன் மட்டும் கெளதம் என்கிற நபரை தேடி அடிக்கடி சென்னைக்கு வந்து போகிறார்.
என்னடா நடக்குது என்று படம் பார்க்கும் ரசிகர்கள் யோசிக்க ஆரம்பிக்கும் அந்த நொ டியை சரியாக கணீத்த இயக்குனர் நானி படத்தில் வரும் இன்னொரு கதாபாத்திரமான காளிவெங்கட் மூலம் , பிளாஷ் பேக்கை சொல்ல வைத்து விடுகிறார்.
அம்மா செண்டிமெண்ட், நண்பர்கள் செண்டிமெண்ட் என்று அடுத்த பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. உச்சக்கட்டமாக லியோ சிவக்குமார், கிளைமாக்ஸில் ரெளடிகளை வேட்டையாடி தனக்கு எதிராபாராமல் உதவிய கெளதமாக நடிக்கும் துஷ்யந்தை காப்பாற்றுகிறார்.
விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை, ஒரு பெரிய மாஸ் நடிகருக்கு உண்டான கதைக்களம். இரண்டாவது படத்திலேயே லியோ சிவக்குமாருக்கு கிடைத்திருக்கிறது. அவரும் , ஏமாற்றம் அளிக்காத வகையில் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார். படம் முழுவதும் ஒரு வெள்ளந்தியான இளைஞனாகவே வந்தாலும், கிளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் ஜொலித்திருக்கிறார்.
அம்மா தான் படத்தின் ஆரம்பப்புள்ளி என்பதால், அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி ராதிகா சரத்குமாரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இட்லி சுட்டு விற்கும் அம்மாவாக அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயீன் கொஞ்ச நேரமே வருவதால், பிரிகடாவை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.
டேவிட் என்கிற சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது படங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான கதாபாத்திர அமைப்பு.
Bottle Friends என்கிர அடைமொழியுடன் ஏழு நண்பர்களை அடையாளப்படுத்திய விதமும், அவர்கள் அனைவருமே மிகவும் ஒற்றுமையாக வேலை செய்வதும், அட கொலையையே வேலையாக செய்வதும் புதுமையான காட்சியமைப்புகள். நிச்சயம் ரசிகர்கள் இதனை ரசிப்பார்கள்.
அப்படிப்பட்ட கொடூரமான ஏழு பேரை மேய்ப்பவர் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருக்கவேண்டும்..? மிகவும் சாதாரணமாக வேட்டி, சட்டை , நெற்றியில் பொட்டு சகிதம் டாஸ்மாக் பார் நடத்தும் கோவிந்தராஜனாக , எச்சிலில் விழுந்து கிடக்கும் 10 ரூபாய் நோட்டை கழுவி எடுக்கும் அந்த நொ டியே … சரி… இவருக்கு இன்னும் ஸ்பெஷலான ஐட்டம் இருக்கு என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து விடுகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாமக்கல் MP மாதேஸ்வரன் மற்றும் அந்த பாட்டில் நண்பர்கள் ஏழு பேர் மோதும் சண்டைக்காட்சி அட்டகாசம். மனிதர், தொடர்ந்து நடிக்கலாம்.
நானியின் இயக்கத்தில் டெலிவரி பாய், சீசன் 2,3… என்று தொடர்ந்து எடுக்கமளவிற்கு அட்டகாசமான கதைக்களம், அட்டகாசமான கிளைமாக்ஸ் லீட்.
நல்ல பொழுதுபோக்கை டெலிவரி செய்திருக்கிறது இந்தப்படம்!