a K.Vijay Anandh review
பள்ளி மாணவர்களையும், தான் கார்டியன் ஆக இருந்து பார்த்துக் கொள்ளும் குழந்தைகளையும், வில்லன்கள் இடமிருந்து காப்பாற்ற, ராகவா லாரன்ஸ் அறிமுகமாகவும் அந்த சண்டை காட்சி பிரம்மாண்டம். கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவிவர்மா மற்றும் ஓம் பிரகாஷ் என்று நான்கு சண்டை பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அந்த பிரம்மாண்டமான சண்டை காட்சி மயிர்க்கூச்செரிய செய்கிறது. ராணுவ பயிற்சிகளில் வழக்கமான பயிற்சிகளுடன் நமது திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளையும் கூடுதலாக ஒரு துணைப்பாடமாக கற்றுக் கொடுக்கலாம் என்கிற அளவிற்கு இந்திய திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் சண்டை காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன என்றால் மிகை ஆகாது.
ராதிகா சரத்குமார், சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், சிருஷ்டி, சுபிக்ஷா மற்றும் பேபி மானஸ்வி உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்கள் ஒருபுறம், குலதெய்வ கோயில் குருக்களாக வரும் ஒய் ஜி மகேந்திரா, குருஜியாக வரும் ராவ் ரமேஷ், கதாநாயகிகளாக லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் மற்றும் சந்திரமுகியாக கங்கனா ரனவத் இன்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து பிரம்மாண்டமான படைப்பாக சந்திரமுகி 2 வை இயக்கி இருக்கிறார் பி வாசு.
பொதுவாகவே ராகவா லாரன்ஸ் படங்களில், அம்மா அண்ணன் அண்ணி குழந்தைகள் என்று ஒரு குடும்பப் பாங்கான சூழ்நிலைகள் இருக்கும். இந்தப் படத்தில் அவர் உறவினர்கள் அற்றவராக வந்தாலும் மேலே குறிப்பிட்ட ராதிகா சரத்குமாரின் உறவுகள் அத்தனை பேரும் அவருக்கும் உறவாகி போகும் இடம் அருமை. கலப்புத் திருமணம் செய்து குடும்பத்தை விட்டு பிரிந்த ராதிகாவின் மகளின் வாரிசுகள் குடும்பத்தோடு இணையும் காட்சியும் மிகவும் எமோஷனலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு நடக்க இயலாமல் சக்கர நாற்காலியில் வலம் வரும் லட்சுமி மேனன் உடம்பிற்குள் சந்திரமுகியின் ஆத்மா புகுந்து அவர் ஆக்ரோஷமாக எழுந்து அனைவரையும் மிரட்டுவது மற்றும் நடனம் ஆடுவது உள்ளிட்ட விஷயங்கள் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன.
ஜோதிகா மற்றும் நயன்தாரா இடங்களில் பொருந்தி போவது என்பது ஆகச் சிறந்த சவால் தான் எனினும் லட்சுமிமேனனும் மகிமா நம்பியாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு வசீகரித்து இருக்கிறார்கள்.
சந்திரமுகியாக வரும் கங்கனா ரனவத் , மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஒரு 50% மட்டுமே ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.
வடிவேலு ஒரு காமெடி லெஜன்ட் தான், அதில் சந்தேகம் இல்லை ஆனால் சந்திரமுகி 2வை பொருத்தவரை முருகேசனுக்கு ஒரு போட்டோவை மாட்டிவிட்டு, அவரது மகனாகவோ அல்லது மைத்துனனாகவோ இன்று காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி அல்லது யோகி பாபு ஆகியோரை வைத்து இன்னொரு தளத்திற்கு காமெடி காட்சிகளை எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
மற்றபடி சிருஷ்டி மூலமாக சந்திரமுகி பரிமாணம் எடுப்பது மற்றும் இரண்டாவது பாதியில் சந்திரமுகியை அழிப்பதற்காக பிரத்யேக வியூகங்கள் வகுக்காமல் ஒரு சண்டைக் காட்சியிலேயே சந்திரமுகியின் பழிவாங்கும் எண்ணத்திற்கு புத்திசாலித்தனமாக காட்சிகள் அமைத்திருப்பதும் அதனைத் தொடர்ந்து படம் நிறைவடைவதும் இரண்டாவது பாதியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல உதவி இருக்கிறது.
அதே இயக்குனர் தான் அவரது படைப்புதான் முந்தைய சந்திரமுகியும் ஆனாலும் அந்த படைப்புடன் ஒப்பிடுகையில் சந்திரமுகி 2 பி வாசுவுக்கு பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்குமா என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
mysixer rating 3.5/5