ஜப்பான்

mysixer rating 4/5

24

a K.Vijay Anandh review

|வளர்ந்து வரும் நடிகரின் 25 ஆவது படம், இந்தப் படத்தில் எய்ட்ஸ் நோயாளியாகவும் இறுதி காட்சியில் இறந்துவிடுபவராகவும் நடிப்பதற்கு அந்த கதாநாயகனுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். கார்த்திக்கு அசாத்திய துணிச்சல் தான், அதற்காகவே ஒரு சபாஷ் போட்டு விடலாம்.

அதுவரை செய்த தவறுகளுக்கெல்லாம் செய்த திருட்டுக்கெல்லாம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டு, அவ்வளவு ஏன் அந்த சம்பவங்களை திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டு ஒரு மஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கார்த்தி அதாவது ஜப்பான் முனிக்கு, செய்யாத திருட்டிற்கு காவல்துறையிடம் இருந்து அதுவும் தமிழ் கன்னட மலையாள 3 மாநில காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு துர்பாக்கிய நிலை.

இறுதியில் உண்மையாக அந்த திருட்டை செய்தது யார்? கார்த்தி எதற்காக வலுக்கட்டாயமாக ஒரு மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறார் ? அதுதான் கிளைமாக்ஸ்.

அரசியல்வாதி,  நகைக்கடை அதிபர் அவர்களின் சொந்த அரசியலில் சிக்கிக் கொள்ளும் சாமான்யன் என்று சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் எதார்த்த அவலங்களை ஒரு பத்திரிக்கையாளராக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ராஜுமுருகன். கையில் சிக்கிக்கொண்ட பலான வீடியோக்களை ஐ டி விங் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்கிற கார்த்தியின் மிரட்டல், நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் ஐடி விங்குகளின் செயல்பாடுகளை பொதியில் அடித்து கிண்டல் செய்திருக்கிறது.

ஒரு பக்கம் சுனில் இன்னொரு பக்கம் விஜய் மில்டன் இருவரின் புலனாய்வும் வெவ்வேறு வகையில் ரசிகர்களுக்கு தீனி போடுகிறது.

தனக்கு எச் ஐ வி பாசிட்டிவ் என்று சொல்லியும் அனு இமானுவேல் க்கு கார்த்தியின் மீது இருக்கும் காதல் ஆச்சரியப்பட வைக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் ஒரு சர்ச் பாஸ்ட்டராகவும் ஜப்பானின் வலது கரமாகவும் இருந்து நிறைவாக நடித்திருக்கிறார். பல இடங்களில் அவர் சீரியஸாக வசனம் பேசினாலும் சிரிப்பை வரவழைக்கவும் தவறவில்லை.

ஜித்தன் ரமேஷ் நண்பனாக இருந்து வில்லனாக மாறி ஒரு கெத்து காட்டியிருக்கிறார்.

அண்ணன் சூர்யாவுக்கு ஒரு நந்தா, தப்பான மகனே பெற்றுவிட்ட அந்த தாயே அவருக்கு விஷம் வைத்துக் கொல்கிறார். தம்பி கார்த்திக்கு ஜப்பான், ஒரே ஒரு திருட்டு அதிலிருந்து தன் மகனிடம் பேசாமலே இருந்து விடும் தாய் பேசிய ஒரே வார்த்தை உனக்கு நல்ல சாவே வராதுடா….

அந்த தாயின் சாபம் பலித்து விடுகிறது, எப்படியும் எய்ட்ஸ் ஆல் சாகப் போகிறோம் ஒரு அப்பாவியை காப்பாற்றி விட்டு செத்துப் போகலாமே என்று கார்த்தி எடுக்கும் அந்த முடிவு கண்கலங்க வைக்கிறது.

முதலிலேயே சொன்னது போல, செய்த  திருட்டிலெல்லாம் மாட்டிக் கொள்ளாத கார்த்தி செய்யாத திருட்டிற்கு போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடும் இரண்டு நாள் கதை தான் ஜப்பான்.

கார்த்திக்கு தான் முழு கிரடிட்டும்.