ரெய்டு

mysixer rating 3.5/5

61

a K.Vijay Anandh review

பொதுவாக வீட்டை விட்டு கிளம்பும் போது நமது பெற்றோர்களோ அல்லது நம்மை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களோ சொல்லும் வார்த்தை  “பத்திரமா போயிட்டு வா”

அந்த ஒரு வார்த்தையை  எடுத்துக்கொண்டு கேங்ஸ்டர் வெர்சஸ் போலீஸ் என்பதாக ஒரு அட்டகாசமான ஆக்சன் படமாக ரெய்டை  கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்தி.

நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்ச நேரம் ஆனாலும் ஸ்ரீதிவ்யாவை பார்ப்பதில் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள். இந்த படத்தில் அவருக்கு அப்படியே நேர்மாறான குணாதிசயங்களோடு அவரது தங்கையாக அனந்திகா, தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு துறுதுறுப்பான நடிகை என்றால் மிகையாகாது.

சமீப காலங்களில் படத்திற்கு படம் வில்லன் கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ரிஷி ரித்விக். இந்தப் படத்திலும் ஆஜானும் பாகுவான கேங்ஸ்டர்  ஆக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கவிஞனாக இருந்து வில்லனாக மாறும் அதுவும் கொடூர வில்லனாக மாறும் கதாபாத்திரத்தில் சௌந்தரராஜா இந்த படம் இவருக்கு நிச்சயம் அடுத்த கட்டம் செல்ல உதவும்.

ரிஷி ரித்விக், சௌந்தர் ராஜா ஆகியோருக்கு டைட்டில் தனி கார்டு போட்டு அங்கீகரிக்க வேண்டும். மற்றும் மொழிகளில் இருந்து வில்லன் நடிகர்கள் அல்லது குணச்சித்திர நடிகர்கள் தமிழில் வந்து நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்களும் பிறமொழிகளில் சென்று படங்கள்நடிக்க வேண்டும். அதற்கு முதலில் நமது தயாரிப்பாளர்கள் அவர்களுக்கான உரிய அங்கீகாரங்களை கொடுக்க வேண்டும்.

காக்ரோச் ஆக பொதுமக்களுக்கும் போலீசுக்கும் குடைச்சல் கொடுத்துக் கொடுக்கும், டேனியல் அன்னி போப்பிற்கு, ஒரு இடைவேளைக்கு பிறகு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் பாத்திரம்.

வேலு பிரபாகரன், வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்து கொண்டிருக்கும் கேங்ஸ்டர் தலைவனாக வந்து ஆச்சரியப்பட வைக்கிறார். இந்த இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஒரு சின்ன கேள்வி, அவ்வளவு புத்தகங்கள் படிப்பவன் காலையில் எழுந்து தியானம் எல்லாம் செய்பவன் எப்படி இப்படி ஒரு கேங்ஸ்டர் லீடராக ஒரு எதிரிமறையான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடியும்? படம் பார்ப்பவர்களுக்கு நல்லவற்றை விதைக்க வேண்டிய பொறுப்பு உங்களது பேனாக்களுக்கு இருக்கிறது என்பதை இதுபோன்ற கதாபாத்திரங்களை வடிவமைக்கும் பொழுது அல்லது அந்த கதாபாத்திரங்களை காட்சிப்படுத்தப்படும் பொழுது நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் அதிகம் மெனக்கெட்டு செய்யும் செயல்கள் பெரிய அளவில் கவனிக்கப்படுவதில்லை. அதே நேரம் அசால்டாக இயல்பாக எந்தவிதமான சலன்களும் இன்றி வாயால் பேசாமல் துப்பாக்கியால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விடுவார்கள். இந்தப் படம் அப்படி ஒரு வாய்ப்பை விக்ரம் பிரபுவிற்கு வழங்கி இருக்கிறது, அவர் கொண்டாடப்பட வேண்டிய கலை உலக வாரிசே !

கதாநாயகி ஆலயத்திற்குள் வேறொரு சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் கும்பிட்டுக் கொண்டிருக்கும் இந்த கணேசனே எனக்கு போதும் என்று சொல்லும் அந்த ஒரு காட்சி, நடிகர் திலகத்திற்கும் அவரது தாத்தாவிற்கும் அவர் செய்திருக்கும் மரியாதை என்றால் பத்திரமாக போயிட்டு வாருங்கள் என்று வீட்டை விட்டு கிளம்பும்போது நம் அம்மாவோ அப்பாவோ கணவனோ சொல்லும் வார்த்தை காவல் துறையை நம்பித்தான் என்பதாக முத்தையா எழுதியிருந்தாலும் அது இந்த சமூகத்தையும் நம்பித்தான் என்பதையும் மறைமுகமாக சொல்லிவிடுகிறது.

Raid, a Right Movie in Right Time