பொதுவாக, ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தயாரிப்பாளர் வேண்டும். அந்த தயாரிப்பாளரை சந்திப்பதற்கு நேரம் வாங்க வேண்டும், முதலில் ஒரு வரி கதை சொல்ல வேண்டும், அது பிடித்திருந்தால் இன்னொரு நாள் நேரம் வாங்கி முழு கதையையும் சொல்ல வேண்டும், அதன் பிறகு படப்பிடிப்பிற்கு தேவையான ஸ்கிரிப்ட்டை சமர்ப்பிக்க வேண்டும், அதனை அந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் குழுவினர் முழுமையாக படித்துப் பார்த்து ஓகே இந்த கதையை நாம் தயாரிக்கலாம் என்கிற முடிவுக்கு வர வேண்டும். இந்த சம்பிரதாயங்கள் நடந்து முடிய ஏறக்குறைய ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்களும் அதற்கு மேலும் கூட ஆகலாம். இந்த கால நிர்ணயம் அறிமுக இயக்குனர்களுக்கு மட்டுமல்லாது ஒன்று இரண்டு படம் கொடுத்த இயக்குனர்களுக்கும் பொருந்தும். பெரிய நடிகர்களை வைத்து படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் இதில் விதிவிலக்கு.
ஆனால், நாளை மறுநாள் மே 10 அன்று வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் இயக்குனர் இளனோ , அப்படத்தின் தயாரிப்பாளர் சாகரிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்து விட்டு அடுத்த 48 மணி நேரத்திற்குள் , முடிவெடுக்குமாறு கெடு விதித்து விட்டு வந்திருக்கிறார்.
இதனை ஸ்டார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே இயக்குனர் இளன் குறிப்பிட்டு பேசினார்.
அதனை ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் சாகர் ,”ஆம் இளன் கூறியது உண்மைதான். அதற்கு அவருக்கு இருந்த நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த கதையை ஏற்கனவே என்னிடம் விவாதித்து இருக்கிறார். இளனின் கதை சொல்லும் விதமும் அவரது தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், அப்பொழுது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த டாடா பட நாயகன் கவின் இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிற விஷயத்தை கேள்விப்பட்டவுடன், 48 மணி நேரம் எடுத்துக் கொள்ளவில்லை 24 மணி நேரத்திலேயே இந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என்கிற எனது முடிவை சொல்லி விட்டேன். படப்பிடிப்பு முடிந்து மே 10 படம் வெளியாக இருக்கிறது. நான் படத்தை பார்த்து விட்டேன். மிகவும் திருப்தியாக இருக்கிறேன் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்கள் குழுவிற்கு இருக்கிறது …” என்றார்.
இயக்குனர் இளன் தயாரிப்பாளருக்கு கெடு விதித்தது அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்றால், மறுபுறம் அந்த கெடு முடியும் முன்னரே தயாரிப்பாளர் சாகர் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது இளம் திறமைசாலியான இளன் மீதும் அவரது ஸ்கிரிப்டின் மீதும் செலுத்திய மரியாதை எனலாம்.
இந்த சம்பவம், திறமையும் அத்துடன் கொஞ்சம் புதுமையும் இருந்து தயாரிப்பாளர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் நம்மை நோக்கி ஓடோடி வருவார்கள் என்கிற தன்னம்பிக்கையை பல புதிய இயக்குனர்களுக்கு விதைத்திருக்கிறது என்றால் மிக ஆகாது.