ஸ்டார்

mysixer rating 4/5

50

a K. Vijay Anandh review

ஆமா… இவன் எதுக்கு நடிகனாகனும்..? இவன் நடிகனாகிறத நாம எதுக்கு பாக்கனும்..? என்கிற கேள்விகளுக்கான விடையை இலை மறை காயாய் இல்லாமல் குன்றிலிட்ட விளக்கு போல வைத்துவிட்டார் இயக்குநர் இளன். அதனால், இவன் ஸ்டார் ஆகிய ஆகனும்டா என்கிற கலையரசனின் அப்பாவான பாண்டியனின் ஆவல், படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் தொற்றிக்கொள்கிறது.

“ நீ நடந்தால் உன்னை பிடித்து தள்ளவும் அமுக்கவும் ஆயிரம் பேர் வருவான், சிறகை விரி… பற… உயர உயர பறந்து போய்கிட்டே இரு..” சாதாரணமாக ஒரு காலேஜ் கல்ச்சுரல் மேடையில் ஆடும் போதே இவ்வளவு தன்னிம்பிக்கை விதைக்கின்றானே, இவனெல்லாம் ஸ்டார் ஆனால், எத்தனை லட்சம் பேருக்கு எத்தனையெத்தனை தன்னம்பிக்கைகளை விதைப்பான் என்கிற நம்பிக்கை, அவன் ஸ்டார் ஆகியே ஆகவேண்டும் என்று, அவனால் தன்னம்பிக்கை பெற்று தற்கொலை முயற்சியை கைவிட்டு பறக்கத்துவங்கிய சுரபி -அதிதி போஹன்கர் மாதிரியே படம் பார்க்கும் ரசிகர்களும் நினைக்கத்தொடங்குவார்கள்.

அந்த சுரபியோ ஒரு படி மேலே சென்று, அதே தன்னம்பிக்கையை இழந்து நிற்கும் கலையரசனையும் தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பிக்கின்றாள்,  எங்களை பறக்கச்சொல்லிட்டு நீ மட்டும் சிறகை வெட்டிக்கொள்வது நியாயமா என்று அவனை தட்டியெழுப்புகிறாள்.

மீரா மலர்க்கொடி மட்டும் என்ன ..? கலையரசனுக்குள் முதல்  தன்னம்பிக்கை ஊற்று அவள் தான், அவள் விலகிச்செல்வதற்கான காரணமும் கலையரசன் தான் என்கிற வகையில் மீரா மலர்க்கொடியான பிரீத்தி முகுந்தன் மீது வெறுப்புகள் ஏதும் எழவில்லை.

இவர்கள் பிள்ளைக்கு உயிர்கொடுக்கின்றார்களா ? அல்லது தோற்றுப்போன தனது கனவுகளுக்கு உயிர்கொடுக்கிறார்களா..? என்று நினைக்கத்தோன்றும் அப்பாக்கள் மாதிரியே ஒரு அப்பா பாண்டியன் – லால். தனது கனவுகள் தனது மகன் மூலம் நனவாகும் போது இவர்களும் ஜெயிக்கின்றார்கள்.

முதல் முயற்சியிலேயே கலையரசனுக்கு நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்து, அன்று அவனது காதலியின் துணிகளை துவைக்கும் காட்சி எடுக்கப்போகிறோம் என்று சொல்லி  லைட் கேமரா ஆக்‌ஷன் சொன்னால், நிஜமாகவே இந்த கலையரசன் தோற்று ஓடியே போயிருப்பார். மும்பையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட அடுத்த ஆறுமாதங்களில் தான் அவர் துணி துவைப்பதையே கற்றுக்கொள்கிறார். அதுமட்டுமல்லாமல், நடிக்க தாம் வெறும் ஆசை தான் பட்டிருக்கின்றோம், அதற்கான பயிற்சிகள் எவ்வளவோ இருக்கிறது என்கிற பணிவையும் கற்றுக்கொள்கிறார்.

அப்புறம் அவர் நடிகரானாரா இல்லையா என்பதே… உணர்ச்சிப்பூர்வமான இரண்டாம் பகுதி.

இதுவரை எத்தனையோ பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்து கொண்டாடியிருக்கின்றோம். ஆனாலும், படம் முடிந்து வெளியே வரும் போது, அந்த ஹீரோக்களின் மானரிசங்கள் நம்மை தொற்றிக்கொள்வதில்லை. இவ்வளவு ஏன்..” புஷ்பா பார்த்துவிட்டு வெளியே வரும் போது கூட இடது கையை சாய்த்துக்கொண்டு செருப்பை இழுத்து இழுத்து  நடைபயிலவில்லை. ஆனால்,  ஸ்டார் படத்தில் முற்பாதியில் வரும் துள்ளலான கலையரசனான கவினை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, மாட்டியிருந்த சட்டையின் மேல் பட்டனையும் கழட்டிவிட்டு காலரை விரித்து பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டு கெத்தாக வரச்சொல்கிறது மனசு. அப்படி ஒரு கியூட்டான ஸ்போர்டிவான கெத்தான கவின்,  நிச்சயம் நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.

தங்களது பொறியியல் கல்லூரி விளம்பரங்களில் பிரீத்தி முகுந்தனை  அக்கல்லூரியின் அடையாள அட்டை போட்டு நடக்கவைத்தாலே,  அட்மிஷன் நிறைந்துவிடும். செம்மயா கல்லா கட்டிவிடலாம், அவ்வளவு சக்திவாய்ந்த காந்தம் அவரது கண்களில்.

அதிதி, அட  நல்லாவே நடிக்கிறாங்கடா… ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நடிகை கிடைச்சுருக்காங்கடா என்கிற அளவிற்கு  நன்றாக நடித்திருக்கிறார்.

லால், கீதா கைலாசம், பாண்டியன் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

RCB  இல் ஒரு கெயில் போல, குலாபியாக வரும் தீப்ஸ் – சார்லி, சின்னிஜெயந்த் மாதிரி ஒரு நீண்ட இன்னிங்ஸ் ஆடுவார், அவருக்கும் அந்த ஆர்வம் இருக்கும் பட்சத்தில்.

நாம் எதார்த்தமாக நம் வாழ்க்கையில் பேசும் வார்த்தைகளை திரும்ப ஒரு முறை அப்படியே பேச ஒரு நேரம் வரும். “ நான் தப்பு பண்ணிட்டேன்… உன்னை விட்டு போயிருக்கக்கூடாது..” இதை சில வருட இடைவெளியில் இரண்டு முறை பேசுகிறார் கவின். எது நிஜம்..? எது நிழல்..? என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

எடிட்டர், பிரதீப் ஈ ராகவ், சரியான இடங்களில் கத்திரி போட்டிருக்கிறார் என்பதை ரோலிங் டைட்டிலுக்கு முன் வரும் ஒரு கட்டில் Cut இல் தெரிந்து கொள்ளலாம்.

கே எழில் அரசுவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

யுவனை கெட்டியாக பிடித்துக்கொண்டார் இளன், அந்த நம்பிக்கையை  இந்தப்படத்திலும் காப்பாற்றிவிடுகிறார் யுவன்.

இவர் வயதொத்தவர்கள் இயக்கும் படங்களில் இரண்டு மணி நேரத்தில் எத்தனை கொலை..? எத்தனை பேரல் ரத்தம்..? என்கிற  நிலையில், இவ்வளவு இளம் வயதில் இரண்டரை மணி நேர உணர்ச்சிப்பூர்வமான படமாக ஸ்டாரை இயக்கியிருக்கிறார் இளன்.

ஸ்டார்,  வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் ஜெயிக்கும் நாமும் தான் என்று நினைக்கவைக்கும் படம் !