- a K. Vijay Anandh review
இந்த மே 17 முதல் திரையரங்கில் தேர்தல் அரசியலை மையமாகக்கொண்டு வெளிவந்திருக்கும் படம் எலக்ஷன் என்றால், மத்திய மாநில அரசுகளுக்கிடையே நடக்கும் ஒரு விதபோர்க்களத்தை கதைக்களமாக கொண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் இணைய தொடராக வெளிவந்திருக்கிறது தலைமைச்செயலகம்.
குடும்ப அரசியல், குண்டாஸ் அரசியல், நக்சல் அரசியில், ஹெலிக்காப்டர் விபத்து என்று இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அவற்றை மிகவும் நேர்த்தியாக கோர்த்து இந்த தொடரை சிறப்பாக இயக்கியிருக்கிறார், வசந்த பாலன்.
இவர், இந்தக்கதையை இப்படி சிறப்பாக இயக்குவதற்கான துணிச்சலை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனமும் தேசிய அளவில் பெரிய ஓடிடி ஆகவிளங்கிக்கொண்டிருக்கும் ஜீ5 ம் தான் கொடுத்திருக்க முடியும் என்றால் அது மிகையல்ல.
அருணா அருணா என்று அழைக்கப்படும், முதலமைச்சர் அருணாச்சலமாக கிஷோர், அவர் வீட்டில் அவரது மைத்துனர் கவிதாபாரதியும் அமைச்சர், அவரது மூத்தமகள் ரம்யா நம்பீசனும் அமைச்சர், இளைய மகளின் கணவர் நிரூப்பும் அமைச்சர் என்று அட்டகாசமான ஒரு குடும்ப அரசியல் அவலத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கட்சியின் உயர்மட்டக்கமிட்டியில் ஓட்டுப்போட்டால் அவர்கள் என்ன தீர்மானம் போட்டாலும் வெல்லும் அளவிற்கு அவர்களது குடும்ப பிரதிநிதிகள். அந்த கமிட்டியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு பத்திரிகையாளராக – அருணாவிற்கு தக்க சமயத்தில் நல்ல ஆலோசனைகள் கூறும் ஸ்ரேயா ரெட்டியும் இருக்கிறார். அவருக்கும் முதலமைச்சர் அருணாவிற்கும் இருக்கும் தொடர்பு மிகவும் கண்ணியமாக காட்டப்பட்டுள்ளது.
ஒரு முதலமைச்சர் மீது தொடரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, தீர்ப்பு நாள், அடுத்த வாரிசு நியமனத்திற்கான போட்டிகள் – இன்னொரு பக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட பார்லிமெண்ட் குழுவில் உள்ள ஒரு சிலர் படுகொலை செய்யப்படுவதை புலனாய்வு செய்யும் சி பி ஐ – முக்கிய குற்றவாளியான துர்காவை தேடிய பயணம் என்று இரு கிளைகளாக படம் ஆரம்பித்து ஒரு புள்ளியில் முடிவதாக அமைக்கப்பட்ட திரைக்கதை செம்ம விறுவிறு. திரைக்கதை இந்தியா முழுவதும் பயணித்திருபதற்காக காரணகாரியங்கள் இயற்கையாக அமைந்திருப்பது இந்த தொடருக்கு ஒரு பான் இந்தியா அங்கீகாரம் அளித்திருக்கிறது.
மாநில காவல்துறை அதிகாரியாக பரத், மிகசிறப்பான கதாபாத்திரம். அருணாவின் தோழர் மற்றும் நிரந்தர நம்பர்2 ஆக சந்தானபாரதி, சிபி ஐ அதிகாரியாக ஆதித்ய மேனன் என்று அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கினறன. அத்துனை நடிகர்களும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். கனி, ஒய் ஜி மகேந்திரா ஆகியோரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.
மாநிலத்தை ஆளுபவர்கள் ஊழல் செய்தால், அதைத்தண்டிக்க முயன்றாலே அது மாநில சுயாட்சியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிற கருத்தை நிலை நிறுத்த முயல்கிறார். மக்கள் நலனுக்காக செய்யப்படும் ஊழலில் தவறில்லை என்கிற கருத்தையும் விதைக்க முயல்கிறார். தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொண்டே ஒரு ஆணிற்கோ பெண்ணிற்கோ கல்வி உதவி செய்வதை நியாயப்படுத்த முடியுமா..? வசந்தபாலன்..? அதனால என்ன, அவர்கள் கல்வி பெறுகிறார்களே என்று சொல்லமுடியுமா..? ஊழல், அது எதற்காக செய்யப்பட்டாலும் தவறு தான் என்பதையல்லவா ஆணித்தரமாக அடித்து சொல்லவேண்டும், சொல்லியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் கூலி உயர்வுக்காக ஏரித்துக்கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்து தப்பிச்சென்ற ஒரு பெண்குழந்தை டெல்லியில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து நக்சல் இயக்கத்தில் சேர்ந்து தமிழகத்திற்கு பத்திரிகையாளராக வந்து முதலமைச்சரின் முழு நம்பிக்கையையும் பெற்று அவருக்கு பிறகு குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிறார். தமிழகத்தில்யே வளர்ந்து பெரிய ஆளாகி, மக்கள் மதிப்பை பெற்று தேர்தலில் ஜெயித்து எந்த ஒரு தனி நபராலும் இங்கு நடந்துகொண்டிருக்கும் ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு ஆட்சியை கொடுத்துவிடமுடியாது என்கிற இன்றைய தமிழக அரசியலின் இழி நிலையை மிகவும் துணிச்சலாக காட்ச்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் வசந்தபாலனை பாராட்டி கொண்டாடி மகிழ்லாம்.
தலைமைச்செயலகம், கிட்டத்தட்ட 60 ஆண்டுகால தமிழக அரசியலின் ஆவணப்பதிவு! ஜீ5 இல் இந்த தொடரை பார்க்கத்தவறாதீர்கள் !