எலக்‌ஷன்

Rating 4/5

102

a K. Vijay Anandh review

1000 வருடங்களுக்கு முன்பு, பராந்தக சோழன் காலத்தில் நிலம்  வைத்திருப்பவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி குடத்தில் போட்டு, ஒரு ஓலையை ஒரு சிறுமியைக் கொண்டு எடுக்கவைத்து யார் பெயர் வருகிறதோ அவர்களை ஊர்த்தலைவர்களாக தேர்ந்தெடுப்பார்களாம்.

தற்பொழுது குறிப்பாக ஈவெராமசாமி காலத்திற்கு பிறகு நிலம் இல்லாதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக ஜன நாயக ரீதியாக தேர்தல் என்று கொண்டு வந்தார்களாம்.

அந்த தேர்தல் தான் கதைக்களம், குறிப்பாக ஊராட்சி ஒன்றிய தேர்தல்.

படைப்பாளிகளின் நேர்மைக்கு முதலில் பெரிய பாராட்டுகள். ஈவெராமசாமி காலத்திற்கு பிறகான இன்றைய தேர்தல் களத்தில், எப்படி ஒரு வேட்பாளர் தனிப்பட்ட பகைக்காகவும், சமூக அடிப்படையிலும், பணபல மற்றும் குண்டாஸ் அடிப்படையிலும் சின்னாபின்னமாக்கப்படுகிறான் என்பதை மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், திருச்சபை மற்றும் ஜமாத் எப்படி தனி நபர் வாக்கு சுதந்திரத்தை பறித்து கைகாட்டுபவர்களுக்கு தான் ஓட்டுப்போடவேண்டும் என்கிற மத ரீதியான நிர்பந்திப்பதை சேவியர் மற்றும் பாய் ஆகியோரின் காட்சிகள் வாயிலாக மிக தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கல்தோன்றி மண் தோன்றா மூத்தகுடி என்கிற தமிழ்க்குடிகளின் இரு குடும்பப்பிரச்சினைக்கு சில நூற ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணை கொள்ளையடிக்க வந்தவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவர் பஞ்சாயத்து செய்கிறார், அவரே இங்கே தேர்ததில் நிற்கும் மூத்த குடி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார். இன்னொரு பக்கம் அதே போன்று,  இந்த தேசத்தை கொள்ளையடிக்க வந்த இன்னொருத்தன் விட்டுச்சென்ற கலாச்சாரத்தை பின்பற்றும் ஆட்களும், இந்த தேசத்தின் பூர்வகுடிகளின் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறார்கள். இது செக்குலாரிசமா, வெட்கக்கேடா..? என்று அறிவார்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அருள் சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், யார் ஜெயிக்கவேண்டும்..?  என்பதை விட யார் ஜெயிக்கக்கூடாது என்று திரைமறைவு வேலைபார்க்கும் இன்றைய தமிழக தேர்தல் நிலவரங்களை கண்முன் கொண்டு வருகிறார்கள்.

கதாபாத்திரங்கள் எடுத்துக்கொண்டால், அனைத்தையும் விட  முந்தி நிற்பது,   நாயகனின் மாமா கதாபாத்திரமான கனி தான்.  நண்பன் சுதாகர், கூட இருக்கிறான் என்கிற தைரியத்தில் மாவட்டச்செயலாளரிடம் எகிறுவதில் இருந்து, எப்படியாச்சும் மருமகனை தேர்தலில் நிற்கவைத்து அவரை ஊராட்சி ஒன்றிய தலைவராக்கிவிடவேண்டும் என்று உழைப்பது முதல், தோல்விகளைக் கண்டு  கூட துவண்டுவிடாமல்  கூடவே இருப்பான் என்று நம்பிய நண்பனின் துரோகத்தால் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாகிப்போவது வரையிலான அந்தக்கதாபாத்திரம் மிக மிக அற்புதமாக வடிவமைப்பட்டிருக்கிறது. அதில், பாவல் நவ நீதனை விட இன்றைய காலகட்டத்தில் வேறு யாரும் சிறப்பாக பொருந்திப்போகமுடியுமா என்கிற அளவிற்கு அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அடுத்தது, சந்தேகமே இல்லாமல் பிரீத்தி அஸ்ரானி, அரசு ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டே கணவனின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதும், ஒரு கட்டத்தில் தானே அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கணவனின் கெளரவத்தினை காப்பாற்ற களமிறங்கி தோற்றுப்போவதும், இடைப்பட்ட காலத்தில் புகுந்த வீட்டில் தான் செய்யவேண்டிய கடமைகளை கச்சிதமாக செய்வதுமாக அட்டகாசப்படுத்தியிருக்கிறார். மயங்கி விழுந்த மாமனாரை கட்டிலில் படுக்க வைக்கும் போது, அந்த போர்வையை எடுத்து போர்த்திவிடும் காட்சி முதல், திலீபன் வீட்டிற்கு வந்து அவனது துரோகத்தை சுட்டிக்காட்டி ஆவேசமடைவது வரை மிகசிறப்பாக நடித்திருக்கிறார். நம்ம திராவிட படைப்பாளிகளுக்கு குஜராத்தை சேர்ந்த மோடி மட்டும் தான் கசப்பு மருந்து, மற்றபடி அதே குஜராத்தை சேர்ந்த பிரீத்தி அஸ்ராணி இனிப்பு.

இன்னொரு நாயகியான செல்வி கதாபாத்திரத்தில் ரிச்சா ஜோஷி நிறைவாக வந்துபோகிறார், அக்கதாபாத்திரம் இரு குடும்பங்களிடையே ஏற்படப்போகும் பகைக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டிருக்கிறது.

தீலீபன், ஒரு இடைவெளிக்கு பிறகு அவருக்கு மிகச்சிறப்பான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட கைகால் இழுத்துக்கொண்டு சக்கர நாற்காலியில் முடங்கிப்போகும் தேவர் மகன் பட  அப்பா – காக்கா ராதாகிருஷ்ணன் அதன்பிறகு ஆக்ரோஷ வில்லனாக எழுந்து நிற்கும் அவரது மகன் நாசர் போன்ற ஒருகதாபாத்திரம். இறுதியில் இந்தக்கதாபாத்திரம் அவரது அம்மா முலையில் குடித்த பாலும் ரத்த ஆறாக ஓடிவிடுகிறது.  தனிப்பட்ட தோல்விக்கு, நாயகின் அப்பாதான் காரணம் என்று முடிவு எடுத்துக்கொண்டு படம் முழுவதும் வஞ்சனை இல்லாமல் வஞ்சகம் காட்டி அசத்தியிருக்கிறார்.

60 வருட தமிழக அரசியலில் கட்சிக்காக ஓடாய் உழைத்து ஒன்றுமில்லாமல் நிற்கும் பல கோடி தொண்டர்களின் பிரதிநிதியாய்  நாயகனின் அப்பா நல்லசிவம் கதாபாத்திரம். ஒரு அரசியல் கட்சியில் ஒரு கோடி பேர் இருந்தால், அனைவரும் தலைவராக நிற்கவும் முடியாது, அனைவருக்கும் தேர்தலில் போட்டிபோட வாய்ப்பும் வழங்கமுடியாது என்பது நிதர்சனம் தான். ஆனால், அந்த ஒரு கோடி தொண்டர்களின் விசுவாசமும் கட்சியையும் பலப்படுத்தி ஒட்டுமொத்தமாக நாட்டையும் பலப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால், நடைமுறை, ஒரு குடும்பத்தை பலப்படுத்துகிறது, அவர்களுக்கு வேண்டியவர்கள் மாவட்டச்செயலாளர்கள் முதல் மந்திரிகளாக ஆக்கப்படுகிறார்கள். பணபலமும், சமூக அந்தஸ்தும் இல்லாத தொண்டர்கள் கடைசிவரை போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு கொத்தடிமைத்தனத்திலிருந்து வெளிவந்த முதல் தொண்டனாக இந்த நல்ல சிவம் இருக்கிறார், சினிமாவில் நடந்தது நிஜத்திலும் நடந்தால் தமிழகம் அதன் செழுமையை மீட்டெடுக்கும். வழக்கம் போல ஜார்ஜ் மரியன் இந்தக்கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக பொருந்திப்போயிருக்கிறார். உண்மையி;ல்,  தலைவனின் வாரிசு தான் தலைவனாக வேண்டும், தொண்டன் மகன் தலைவனாகவே கூடாதா..? – இந்த தந்தை மகன் கதாபாத்திரம் தான் படத்தின் மையக்கரு. அந்தக்கட்சித்துண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் சிறப்பாக படமாக்கியிருக்கலாம்.

பத்துபேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா, இவன் அடிச்ச பத்துபேருமே டான் தான் டா என்கிற ஒரு பிரபலமான வசனத்தை போல, இவ்வளவு இளம் வயதில் இவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து வெளிவந்திருக்கும் நான்கு படங்களுமே அரசியலை கதைக்களமாக கொண்டது தான் என்பதே மிகவும் ஆச்சிரியப்பட வைக்கிறது. அரசியல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு எடுக்கப்படும் படங்களுக்கு இவர் நிச்சயம் பொருந்திப்போக வாய்ப்பில்லை, அதில் தவறொன்றும் இல்லை. ஜன நாயகம் எனும் தேர்தல் களத்தில், பணபலம் படைத்தவனோ, ரெளடியிசம் வைத்திருப்பவனோ, சாதிக்காரர்களை நம்பி களமிறங்குபவனோ நாயகர்கள் அல்ல, ஓட்டுப்போடும் மக்களாகியாகிய நாம் தான் டா நாயகர்கள்.   இவன் ஜெயித்தால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் என்ன நல்லது நடக்கும் என்று சிந்தித்து, எந்த விதமான புற அழுத்தங்களும் இல்லாமல், குறிப்பாக திருச்சபை – ஜமாத் – சாதிச்சங்கங்கள் போன்றவற்றின் கட்டளை புறந்தள்ளிவிட்டு, காசு, பிரியாணி, குவார்ட்டர், பரிசு பொருட்களுக்கு ஆசைப்படாமல் மிக மிக சுதந்திரமாக ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் காலம் வரை, நடராசன் போன்ற கதாபாத்திரங்கள் அவசியத்தேவையாக இருக்கின்றன. ஆகவே, அரசியல்களத்தை கருவாக வைத்திருக்கும் படங்களிலேயே தொடர்ந்து நடியுங்கள், விஜய்குமார். “ அரசியல் நமக்கு புரியல என்று ஒதுங்கிப்போகும் இடமாகட்டும்… எல்லாத்துக்கும் நீதான் யா காரணம் என்று தங்கை கணவரான மாமா கனியிடம் வெடித்து சிதறுவதாகட்டும், எதிரகளை வதம் செய்து, பாலின சிறுபான்மை சகோதரியை அப்பாவின் ஆதரவுடன் தேர்தலில் களமிறக்குவது வரை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நாச்சியாள் சுகந்தி, ஏற்கனவே ஒரு கட்சிககாரனுக்கு வாக்கப்பட்டு சீரழிஞ்சது போதும், நீயும் அப்படி ஆகிடாதடா நமக்கெல்லாம் அரசியல் சரிப்பட்டு வராது என்று யதார்த்த அம்மாவாக அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

இனி,

சினிமாக்கள், எடுக்கப்படும் கதைக்களங்களுக்கு ஏற்ப கிட்டத்தட்ட வணிகரீதியிலான ஆவணப்படங்களே. அப்படிப்பட்ட படங்களின் உயிர் நாடியாக அப்பகுதி மக்களின் பேச்சு மொழி மிகச்சரியாக கையாளப்பட வேண்டும். நிக்குவேன்… நீ தான் கெலிப்ப… என்று அச்சு அசலாய் கதைமாந்தர்களின் பேச்சுமொழியை காட்சிப்படுத்த அழகிய பெரியவனின் எழுத்து மிக முக்கிய காரணியாய் விளங்கியிருக்கிறது.

மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு, தமிழ் சினிமா வரலாற்றில் காட்ச்சிப்படுத்தப்பட்ட புதிய கதைக்களைத்தை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது.

கோவிந்த வசந்தாவின் இசை இசையென்பதெ எதெரியாமல் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறது.

ஊரு ஊருக்கு பொண்டாட்டிகள் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அத்தனை துணைவி இணைவிகளையும்  மறைத்து ஏதோ ஏகபத்தினி விரதனைப்போல வேட்பமனு தாக்கல் செய்வதை நக்கல் செய்திருப்பது முதல் உள்ளூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் களத்தின் அவல நிலையை கண்முன் கொண்டு வந்ததிலிருந்து மிகவும் துணிச்சலாக எலக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார், தமிழ்.