a K Vijay Anandh review
யார்ரா அந்த சார்…? கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் கேள்வி. அதற்கு விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பார்ரா இந்த ஃபயர் …! படத்தில் நான் கண்டுபிடிச்சிட்டேன் நிஜத்தில் நீங்க எப்படா கண்டுபிடிக்க போறீங்க என்று கேட்காமல் கேட்டிருக்கிறார், ஜே எஸ் கே .
ஃப்ரீ கிளைமாக்ஸ் என்று சொல்லப்படும் படத்தின் இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சி என்று சொல்லத்தக்க, பிசியோதெரபிஸ்ட் கொலை செய்யப்படும் காட்சியை படத்தின் ஆரம்பத்திலேயே வைத்துவிட்டு, அவனைத் தேடுவது போன்ற ஒரு புலனாய்வை முக்கியமான குற்றவாளிகளை திசை திருப்புவதற்காக நடத்திக் கொண்டே பல பெண்களை காம இச்சையில் சிக்க வைத்து வீடியோ எடுத்து, அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் பிசியோதெரபிஸ்ட் பின்னால் இருக்கும் சாரை கண்டுபிடிப்பதாக அமைக்கப்பட்ட திரைக்கதையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
JSK , பல படங்களை விநியோகிஸ்தவர், பல படங்களை தயாரித்தவர் இவரது பேனர் தாங்கிய படங்கள் சோடை போனதில்லை. அந்த வகையில் ரசிகர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்து தெளிவான படமாக ஃபயரை கொடுத்திருக்கிறார்.
சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி , காயத்ரி ஷான் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதிகளாக இந்த நால்வரும் மிகவும் துணிச்சலாகவும் சிறப்பாகவும் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் இல்லாமல் தாத்தாவின் உதவியுடன் வளரும் துர்கா வாக சாந்தினி, குடிகார கணவனினிடம் மாட்டிக் கொண்டு சீரழிந்து கந்து வட்டிக்கு கடன் வாங்கினாலும் மாவுக்கடைநடத்தி தொழில் செய்து கௌரவமாக வாழும் மீனாட்சி ஆக ரட்சிதா, வெளிநாட்டில் கணவன் வேலை பார்க்க அவரைப் பிரிந்து இங்கே வாழும் பிரியாவாக சாக்ஷி, திருமணமான ஒரே மாதத்தில் கணவனை பலி கொடுத்த இளம் விதவை அனிதாவாக காயத்ரி என்று சமூகத்தில் நாம் பார்க்கும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு ஆனாலும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் முன்னெடுக்கும் பெண்களின் பிரதிபலிப்பாக இவர்களது கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. எப்படிப்பட்ட கஷ்டங்களுக்கிடையில் வாழ்ந்தாலும் கவனமாக இருங்கள் பெண்களே என்று ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் அறைகூவல் விடுத்திருக்கிறார் ஜே எஸ் கே .
கதாநாயகனாக நடிக்க லட்சம் பேர் வருவார்கள் ஆனால் சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் இப்படிப்பட்ட கொடூர விலங்குகளை பிரதிபலிக்க பலரும் தயங்குவார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி முருகதாஸை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பாவி பெண்களுக்கு அவர் வலை வீசுவதும், பிசியோதெரபிஸ்ட் என்பதால் எங்கே தொட்டால் அவர்கள் விழுவார்கள் என்று தெரிந்து அவர்களை காம தீயில் விழவைப்பதும் என்று மிரட்டி இருக்கிறார்.
அவருக்குப் பின்னால் பக்க பலமாக இருக்கும் அரசியல்வாதியாக சிங்கம்புலி, இவர்கள் ஆட்சி அதிகாரங்களுக்கு வருவதே இப்படிப்பட்ட சிற்றின்பங்களுக்காக தான் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு கேவலமான அரசியல்வாதிகளை, தனது கதாபாத்திரம் மூலம் பிரதிபலித்திருக்கிறார். அவர் தனது ஒப்பனையை மெருகூட்ட விக் வைக்காமல் நடித்திருப்பது ஏதேச்சையாக அமைந்ததா என்று தெரியவில்லை.
JSK , பெண்கள் திருமணமானவர்களாக இருந்தாலும் சரி, திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, மாணவிகளாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள் என்பதற்காக பற்ற வைத்திருக்கிறார் இந்த ஃபயரை .
இது காமத்தீ அல்ல, இது தீயவர்களை பொசுக்கும் தீ !!