a K Vijay Anandh review
ஒரு தமிழ் ஆசிரியராக கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கை நடத்திய நடத்திக் கொண்டிருக்கும் அப்பா எம்எஸ் பாஸ்கருக்கும், கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இல்லை இது பத்தாது என்று இயல்பாக அமைந்த நிறைவான வாழ்க்கையில் திருப்தி படாமல் தன் தன்மீதே குறைபட்டுக் கொண்டிருக்கும் மகன் ஸ்ரீகாந்திருக்கும் நடக்கும் பாசப் போராட்டமும் வாழ்க்கை போராட்டமுமே தினசரி .
இது போன்ற பெரும்பாலான நடுத்தர வர்க்கங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளை சுமந்து கொண்டு வரும் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத இளைஞர்களுக்கு இயக்குனர்களுக்கு ஸ்ரீகாந்த் போன்ற ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகர்கள் மையக்கதாபாத்திரங்களாக நடிக்க முன்வருவது வரவேற்கத்தக்க ஒன்று. அதற்கு ஸ்ரீகாந்த்திற்கு பாராட்டுகள்.
உயர் நடுத்தர வர்க்க இளைஞனாக வேலைக்கு போகும் தன்னைவிட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி அமைய வேண்டும் மேலும் தான் சம்பாதித்த பணம் அதிக வட்டியை ஈட்டி தர வேண்டும் அதன் மூலம் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆசாபாசங்களுடன் அப்படியே கண் முன் நிற்கிறார் ஸ்ரீகாந்த்.
எம்.எஸ். பாஸ்கர், இன்றைய தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நடிகர் துணை நடிகர் என்றால் மிகை ஆகாது. படத்திற்கு படம், இவருக்கு ஒரு நீண்ட காட்சிகள் அமைந்து விடுவது தனிச்சிறப்பு. அப்படி ஒரு நீண்ட காட்சி அமைந்தாலும் இதில் முழுவதுமாக அதில் ஆங்கிலத்தில் பேசி அசத்தி விடுகிறார், அற்புதமான காட்சி அமைப்பு அது. ஆங்கிலத்தில் பேசினார் என்பதற்காக அல்ல அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு தெளிவான ஆங்கிலத்தில் எங்களுக்கும் விளக்கம் கொடுக்க தெரியும் எங்களை பழைய தலைமுறை என்று நினைத்து விட வேண்டாம் என்பதாக அமைக்கப்பட்ட அந்த காட்சிக்கு மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அது மிகையல்ல. அவருக்கும் மீரா கிருஷ்ணனுக்கும் இடைப்பட்ட காதல் திருமணத்தில் முடிந்த கதையை அவர்கள் சொல்லும் காட்சி அமைப்புகளும் பிரமாதம்.
வினோதினி வைத்தியநாதன் இவரும் மிகச் சிறந்த குணசித்திர நடிகை. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் ஒரு மகள் என்று பெற்றோருடன் தம்பியுடன் வாழ்ந்து வரும் அற்புதமான அக்காவாக இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நம்ம ஊர் பெண்களே நமது கலாச்சாரங்களை கைவிட துணியும் பொழுது குடும்பம் பொறுப்பு என்று வலிந்து வந்து ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க பெண்ணாக சிந்தியா லூர்டே அற்புதமாக நடித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் நவ நாகரீக மங்கையாக சாந்தினி கதாபாத்திரம், ஏன் எதற்கு என்று தெரியாமலே வந்து போகிறார்.
மற்ற எந்த கதாபாத்திரங்களையும் விட அவரது அலுவலக தோழராக வரும் பிரேம்ஜி கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை தள்ளி வைக்கும் மூடத்தனத்துடன் இருந்தாலும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்து விடாதே என்று நண்பனை எச்சரிக்கும் காட்சிகளில் பாராட்டு பெறுகிறார்.
சில காட்சிகள் காரண காரியங்கள் இன்றி சட்டென முழுமை பெற்று விடுவது ஏமாற்றத்தை தருகிறது என்றாலும், விசு மற்றும் வி சேகர் படங்களை பார்ப்பது போன்ற ஒரு திருப்தியுடன் தினசரியை இயக்கியிருக்கும் ஜி சங்கர்க்கு பாராட்டுகள்.