ராமம் ராகவம்

mysixer rating 4.5/5

137

a K Vijay Anandh review

ராமாயணத்தில் தந்தைக்காக நாட்டையும் ராஜபோக வாழ்க்கையையும் தியாகம் செய்தான் ராமன். இங்கே அதே தசரத ராமன் தனது மகனுக்காக உயிரையே தியாகம் செய்கிறான், செய்கிறார்.

நம்மூரில் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராகவே பிறப்பது என்பது மட்டுமே இயற்கையின் விதிவிலக்கு போலும்!  அதைப்போலவே எல்லா இடங்களிலும் ஒரு நல்லவனின் மகன் அவரைப் போலவே நல்லவனாக பிறப்பது இல்லை தானே!

அப்படி ஒரு நல்ல மனிதருக்கு அதாவது தசரத ராமன் என்கிற பெயருக்கு ஏற்ற, நல்ல மனிதரான சமுத்திரக்கனிக்கு ஒரு உருப்படாத மகன் ராகவனாக அவதரிக்கிறார், தன்ராஜ் கொரனானி. கொரோனாவா நீ ? என்று கேட்காத குறையாக தனது அப்பாவையும் அம்மாவையும் பாடாய்ப் படுத்துகிறார் அந்த மகன்.

மாதம் 10,000 சம்பாதிக்க ஆரம்பித்து 50 ஆயிரம் வருவதற்குள் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது என்று முடிவெடுத்து, அப்பாவின் கோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணத்திற்காக ஒரு சதி திட்டம் தீட்ட அந்தத் திட்டம் எப்படி நிறைவேறுகிறது ? என்பதே படத்தின் விறுவிறுப்பான மற்றும் பதைபதைக்க வைக்கும் இரண்டாவது பாதி.

இதுபோன்ற கதாபாத்திரங்கள் சமுத்திரக்கனிக்கு இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது போல என்றால் மிகை ஆகாது. ஒரு தமிழ் படத்தில், இவரே அவரை வடநாட்டு சாமி, நம்மூரில் இல்லாத சாமியா என்று வசைப்பாடி இருப்பார். இந்தப் படத்தில் அவரை அவர் பயபக்தியுடன் வழிபடுவது ஆகட்டும் அவர் பெயர் தாங்கி அவரைப் போலவே தியாகத்தின் திருவுருவாய் நிற்பது ஆகட்டும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக அல்லது காரணத்தின் அடிப்படையில் உருப்படாமல் போவது ஒரு ரகம். இயல்பிலேயே உருப்படாத ஒருவனாக வாழ்வது அரிதான ரகம். அந்த ரகத்தில் ராகவனாக அற்புதமாக வந்திருக்கிறார் தன்ராஜ்.

அட ஹரிஷ் உத்தமனா , தமிழ் சினிமாக்கள் அவ்வளவாக பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான ஒரு நடிகன். சொந்தமாக லாரி வாங்குவதை தவிர வேறு ஒன்றும் அறியாத, அப்பாவியாகவும் அதே நேரத்தில் சரியான மனிதனாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

விரைவில் தமிழ் சினிமாக்களிலும் இவர் அம்மாவாக மனம் வரக்கூடும் என்கிற அளவிற்கு பாசமான அம்மாவாக பிரமோதினி சிறப்பாக நடித்திருக்கிறார்.

அருண்சிலுவேறு இசையில் கதை ஓட்டத்தோடு ஒலிக்கும் யுக பாரதி மற்றும் முருகன் மந்திரம் எழுதிய பாடல்கள் அருமை.

ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்காக கொண்டு வந்து இருக்கும் ஜி ஆர் ஆர் மூவிஸ் வாழ்த்துக்கள்.

ராமம் ராகவம் தந்தையின் தியாகம்!