சுழல் 2

mysixer rating 4.5

343

a K Vijay Anandh review

சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் இல்லாத ஒரு கட்டுப்பாடு படைப்பாளிகளுக்கு இருக்கும் வானளாவிய சுதந்திரம்,, இந்த ஓடிடி தொடர்கள்.

அந்த சுதந்திரத்தை புஷ்கர் காயத்ரி மற்றும் இயக்குனர் பிரம்மா மிகச் சரியாக பயன்படுத்தி சூழல் தொடரின் அடுத்த பாகத்தை கொடுத்திருக்கிறார்கள்.

கதைக்கரு மற்றும் கதைக்களம், கதை கருவை எந்த வித களத்திலும் பொருத்தி படமாக்க முடியும்.  வெறுமனே, கதை களத்துடன் ஒட்டாமல்,  கதை நகர்ந்து கொண்டிருந்தாள் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விட கூடும். கதை கருவிற்கும் கதை களத்திற்கும் ஏதேனும் ஒரு அல்லது பல முடிச்சுகளை போட்டு, தொடரின் சுவராசியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனையும் இந்த கதையை எழுதியவர்களும் இயக்கியவரும் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.

தசரா விழா, எங்கு நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும், காளிப்பட்டினம் பெயர் கூட பொருத்தமான ஒன்றுதான். நம்மூரில் நடக்கும் குறிப்பாக பெண் தெய்வங்களை மையப்படுத்தி நடக்கும் பிரம்மாண்ட திருவிழாவை தொடரின் மைய கதைக்களம் ஆக்கி சுழல் 2 ஐ கொடுத்திருக்கிறார்கள்.

முத்து,  பிடாரி, வீரா,  நாச்சி, காந்தாரி,  உலகு,  சந்தனம் மற்று முப்பி முத்துமாரியம்மன் முதல் முப்பிடாரி வரையிலான நமது தெய்வங்களை தெய்வங்களின் பெயர்களை, செல்லப்பா சார் அந்த குழந்தைகளுக்கு சூட்டும் இடத்திலிருந்து, அவர்களின் ஆக்ரோஷ வடிவங்களை காட்டும் திருவிழா காட்சிகள் முதல் சிறைக் காட்சிகள் வரை மிகப் பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக நமது சிறு தெய்வங்களை, அவர்களை ஏன் சிறு தெய்வங்கள் என்று அழைக்க வேண்டும் எல்லா பெரிய தெய்வங்களுக்கும் இருக்கும் அத்தனை சக்திகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் அவர்களும் தெய்வங்கள் தான், அப்படிப்பட்ட தெய்வங்களை, ஓடிடி வாயிலாக, அகில இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டு செல்லும் இந்த அற்புதமான முயற்சி நிச்சயம் பெரு வெற்றி பெற வேண்டும், இந்தப் படத்தை கிராம தேவதைகளுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று இயக்குனர் பிரம்மா சொன்னது போல, இவர்களின் வெற்றியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மனிதர்களை கடத்துவது குறிப்பாக இளம் சிறுமிகளை அவர்களது வறுமையை பயன்படுத்தி விலைக்கு வாங்குவது மற்றும் வலுக்கட்டாயமாக கடத்துவது , அவர்களை பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக திருட்டுத்தனமாக அனுப்பி வைப்பது என்று சமூகத்தை பயமுறுத்தும் ஒரு குற்றச் செயலை கதைக்கருவாக்கி எடுக்கப்பட்ட இந்த சூழல்2  பொழுதுபோக்கை மட்டுமல்ல, பெண் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை கொடுக்கும் என்றால் மிகை ஆகாது.

நாயகன் கதிர், சக்கரையாக தொடர் முழுவதும் இனிய நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், முன்பு சொன்ன எட்டு தெய்வங்களுடன் இவரும் சேர்ந்து கொண்டு நவ சக்திகளாக இறுதி காட்சிகளில் விஸ்வரூபம் எடுப்பது மயிர் கூச்சரியும் ரகம்.

லால், செல்லப்பா சாராக அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கயல் சந்திரன் மற்றும் மஞ்சிமா மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெறுப்பையும் விருப்பையும் விதைக்கும் ரகம். குறிப்பாக, குழந்தைகளின் வயிற்றுப் பசி ஆற்றுவதற்காக மற்றவர்களின் உடல் பசிக்கு இரையாகி பொருளீட்டி வரும் மஞ்சிமா மோகன், நாகம்மாவாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராகி போவார் என்றால் மிகை ஆகாது.

பிரியம் வதாவாக நடித்திருக்கும், சாந்தினி தமிழரசன். இந்த படத்தில் இவரை காட்டி இருக்கும் விதம், இதுவரை இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்கிற அளவிற்கு சிறப்பாக இருக்கிறது. கதையின் இன்னொரு பாதி, இவரது கதாபாத்திரத்தில் இருந்து விறுவிறுப்பாகிறது.

சரோஜாவாக வரும் அர்க்ஷயா லக்ஷ்மன், இவரது பார்வையில் சித்தப்பா சரவணன் மட்டுமல்ல யாருமே விழுந்து விடத்தான் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு மாதிரியான அழகில் ரசிகர்களையும் கட்டி போடுகிறார். சரவணனின் வாக்குமூலங்கள், மிகவும் யதார்த்தம்.

கௌரி கிஷன்,  சம்யுக்தா விஸ்வநாதன்,  மோனிஷா பிளசி, ஷிரிஷா,  அபிராமி போஸ்,  நிகிலா ஷங்கர்,   ரினி மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகிய எட்டு பேரும் உலக அளவில் அவர்களின் வயதொத்த 200 கோடி பெண்களை பிரதிபலித்து இருக்கிறார்கள்.

சுப்புராயன் சகோதரர்கள் மற்றும் மிராக்கிள் மைக்கேல் இணைந்து வடிவமைத்திருக்கும் சண்டை காட்சிகள் பிரமிக்க வைத்திருக்கின்றன.

ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் சுழல் 2 ரசிக்கும்படி செய்திருக்கின்றன. சாம் சி எஸ்ஸின் பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசை அற்புதம்.

நம் பெண் குழந்தைகள் தீயவற்றுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சுழல் 2, பார்த்து ரசிக்க தரமான ஓடிடி தொடர்!