a K Vijay Anandh review
ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற கிறிஸ்தவருடன் சேர்ந்து சயத் என்கிற இஸ்லாமியர் 2002 இல் கலவரத்தில் தங்களை திருப்பி அடித்த இந்துக்களை, குறிப்பாக பஜ்ரங்கி என்கிற தலைவனை காத்திருந்து பழிவாங்குகிறார்கள். இத்துடன், கேரளாவில் நீண்ட நாட்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஹிந்துத்துவா புகுந்து விடக்கூடாது என்பதான ஒரு அரசியலும் ஒளிந்து இருக்கிறது.
பழிவாங்குதல் தான் மனிதனை முழுமையாக்கும் என்பதாக அமைக்கப்பட்ட திரைக்கதையை மிகவும் அற்புதமாக, இன்னும் செல்ல போனால் சர்வதேச படங்களுக்கு நிகராக பல்வேறு பிரமிப்பூட்டும் லொகேஷன்ஸ் மற்றும் மிகச் சரியான நடிகர்கள் தேர்வு என்று எம்புரான் படத்தை, அதுவும் மூன்று மணி நேரம் கதை சொல்லலில் கண்களை சிமிட்டக்கூட விடாமல் விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் பிருத்திவிராஜ் சுகுமாரன்.
இந்த படம் வீரசிவாஜியின் மகனை பற்றிய படமாக வெளிவந்த சாவா படத்தைப் போல கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றால் மிகை ஆகாது.
கடந்த 1200 ஆண்டுகளாக இந்த தேசத்தில் இந்த தேசத்தின் பூர்வ கூடிகளுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநீதிகளுக்கும் பழிவாங்க ஆரம்பித்தால், அல்லது அவ்வளவு தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், 1970 களில் வங்கதேசத்தில், அதாவது அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் நடந்த 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள், 1990 இல் நடந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை, கேரளாவில் நடந்த மாப்பிளா படுகொலை ஆகியவற்றை நேரடியாகச் சொன்னால் அந்த படத்தை சர்ச்சைக்கு உள்ளாக்கி வெளியாக கூட விட மாட்டார்கள் என்று நினைத்தாரோ என்னவோ இன்னொரு கோணத்தில் இந்த படத்தின் மூலம் சொல்ல முடியாத பல உணர்வுகளுக்கு வித்திட்டு இருக்கிறார் பிருத்திவிராஜ் சுகுமாரன்.
நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் தொடங்கி மோகனால் வரை அவர்களது கதாபாத்திரங்களுக்கு முழுமையான பங்களிப்பை வழங்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் மயிர்க்கூச்சரியம் ரகம் என்று சொல்லத்தக்க வகையில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
டொவினோ தாமஸ் மற்றும் மஞ்சுவாரியார் ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரதிபலித்திருக்கிறார்கள். ஒரு பாரம்பரிய அரசியல் தலைவரின் வாரிசுகளாக மக்களை எப்படி வசீகரிப்பது என்று தனித்தனியாக இருவருமே மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.
பிருத்திவிராஜ், தனக்கான ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு அதையும் மிகச்சிறப்பாக படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். உண்மையில் இந்த படத்தில் ஒரு இயக்குனராக அதிகம் மெனக்கட்டிருப்பதை, ஒவ்வொரு காட்சியிலும் உறுதிப்படுத்தி இருக்கிறார். கார்த்திகேயா தேவ் இவர்தான் வளர்ந்து பிருத்திவிராஜ் ஆகப் போகிறார் என்பதை முன்கூட்டியே ஊகிக்கக்கூடிய அளவிற்கு சிறு வயது பிருத்திவிராஜ் மாதிரியே இருக்கிறார், கச்சிதமான தேர்வு. அபிமன்யு சிங், சுகந்த் கோயல் மிரட்டி இருக்கிறார்கள்.
கதை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது சீன உளவு செயற்கைக்கோள் இவர்களை கண்காணிப்பதாக சொல்லிவிட்டு, இறுதிக்காட்சியில் அடுத்த பாகம் சீனாவில் தான் என்பதாக முடித்திருப்பது இன்னும் கூடுதல் சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது.
நமது ஐ பி அதிகாரியாக வரும் கிஷோர் முதல் லண்டன் இன்டெல் அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து சர்வதேச போதை பொருள் கடத்தல் வில்லன்களும் மிரட்டி இருக்கிறார்கள்.
கேரளா, மும்பை ஈராக்கின் சில பகுதிகள், லண்டன், ஆப்பிரிக்க கடல், துருக்கி, பாலைவனம் என்று ஒவ்வொரு லொகேஷங்களையும் மிகச் சிறப்பாக படம் பிடித்து ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தீபக் தேவ் வின் இசை, அபிலேஷ் மோகனின் அட்டகாசமான எடிட்டிங் என்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் படத்தை தொய்வில்லாமல் நகர்த்துகின்றன.
எழுத்தாளர் முரளி கோபி, இயக்குனர்களால் தேடப்படும் எழுத்தாளராக மாறிவிடுவார்.
இந்த படம் மலையாளத்தில் எடுத்து தமிழில் டப் செய்தார்களா அல்லது தமிழிலேயே எடுத்தார்களா என்று வியக்கும் அளவிற்கு ஆர்பி பாலாவின் தமிழ் வசனங்கள் அந்த கதாபாத்திரங்கள் பேசும் பொழுது மிகவும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் எம்புரான் ஒரு பிரம்மாண்ட விசுவல் ட்ரீட் !