Tourist Family

mysixer rating 4/5

438

a K. Vijay Anandh review

இந்த வாரம் இளைஞர்களின் வாரம் என்று சொல்லும் அளவிற்கு கிரிக்கெட்டில் 14 வயதே ஆன வைபவ் சூரிய வம்சி, மின்னல் வேக சதம் அடிக்கிறார். இதோ சினிமாவில் 24 வயதே ஆன அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், கமலேஷ், மிதுன் ஜெய்ஷங்கர், யோகிபாபு, ராம்திலக், பகவதி பெருமாள் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோரை வைத்து ஒரு டபுள் செஞ்சரி அடிக்கத்தக்க ஒரு சினிமாவை கொடுத்திருக்கிறார்.

இலங்கையில் இருந்து தவிர்க்க இயலாத காரணங்களால் கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் வந்திறங்கும் சசிகுமார் குடும்பம். சென்னையில் ராகவன் குடியிருப்பில் குடியேறுவது மட்டுமல்லாமல், அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளின் மனதிலும் எப்படி குடியேறி, தங்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதே டூரிஸ்ட் ஃபேமிலியின் மென்மையான அதே நேரம் மிகவும் அழுத்தமான திரைக்கதை.

ஒரு குடும்பம் மற்ற குடும்பத்தினருக்கும் பிடித்துப்போகவேண்டுமென்றால் அக்குடும்பத்தில் இருந்து யாரோ ஒருவர் மட்டும் பிறருக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டால் போதாது, ஒவ்வொருவரும் அப்படி நடந்துகொள்ளவேண்டும்.

குடும்பத்தலைவராக, எம் சசிகுமார் அப்படி எம் எஸ் பாஸ்கரிடம் வேலை வாங்கிக்கொள்வது முதல், myயாருமில்லாமல் இறந்துபோகும் பக்கத்துவீட்டுப்பாட்டிக்கு அந்த குடியிருப்புவாசிகள் அத்தனை பேரையும் வரவழைத்து இறுதியஞ்சலி செலுத்த வைக்கிறார்.

குடும்பத்தலைவி சிம்ரன், அதே பக்கத்து வீட்டு பாட்டி முதல் அக்கம் பக்கம் என்று அனைவருடனும் உணவு பரிமாற்றம் மூலம் அன்பையும் பரிமாறிக்கொள்கிறார்.

மூத்தமகன், மிதுன் ஜெய்ஷங்கர், பகவதிபெருமாள் மகளின் மனதில் நுழைந்து மற்றவர்களையும் கவர்கிறார்.

கடைக்குட்டி கமலேஷ், வகுப்பு ஆசிரியரையே வசீகரித்துவிடுகிறார்.

இப்படி,  அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும் பொழுது, இராமேஸ்வரத்தில் நடந்த ஒரு வெடிவிபத்திற்கு இவர்கள் காரணமாக இருப்பார்களோ ஐயய்யோ போலீஸில் மாட்டிக்கொண்டால் இவர்களது குடும்பம் சின்னாபின்னாமாகிவிடுமே என்று படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் பயத்தை விதைக்கும் இயக்கு\நர் அபிஷன் ஜீவிந்த், அப்பாடா என்பது மாதிரியான கிளைமாக்ஸை வைத்து படத்தை சுபமாக முடித்திருக்கிறார்.

படத்தில் நான்கு ஐந்து நீண்ட முக்கியமான காட்சிகள் அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றன. உதாரணமாக மூத்த மகனுக்கும் அப்பா சசிக்குமாருக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உரையாடல், எம் எஸ் பாஸ்கருக்கும் சசிக்குமாருக்கும் இடையிலான நெகழ்ச்சியான உரையாடல், இறந்த பெண்மணிக்கு நடக்கும் இரங்கல் கூட்டத்தில் வாழ்க்கையே வெறுத்து போயிருந்த ஒரு இளைஞன் சசிக்குமாரால் எப்படி மனிதனானான் என்பதான ஒரு உரை அத்துடன் மொட்டை மாடியில் பகவதியின் மகளின் பாய் ஃப்ரெண்ட் சிக்கிக்கொண்ட கலகலப்பான காட்சி என்று ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை வெரைட்டியாக கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இந்த இளம் இயக்குனர்.

என்ன சிம்ரன் இதெல்லாம் என்று ஒரிஜினல் சிம்ரனை பார்த்து யோகி பாபு கேட்கும் இடம் வெடி சிரிப்பு.

இலங்கையில் இருந்து வரும் தமிழ்ச்சொந்தங்கள் அகதிகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்கிற ஆகச்சிறந்த ஆறுதல் வார்த்தைகளை காட்சிகள் மூலமாக காண்பித்து கண்ணீர் வரவழைத்து விடுகிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் பரத் விக்ரமனின் எடிட்டிங் மற்றும் சான் ரோல்டனின் இசை என்று ஒரு ஆகச்சிறந்த விஷுவல் டிரீட்டாக டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகியிருக்கிறது.

பின்குறிப்பு:

ஆதார்கார்டு முதல் வாக்காளர் அடையாள அட்டை வரை போலியாக ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக குடியேறுவதை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான் என்றாலும், அகதிகளாக வருபவர்களையும் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான சட்ட வரைமுறைகளையும் அரசு எளிமைப்படுத்தவேண்டும். அதனை, வெளியிலிருந்து வருபவர்கள் முறையாக பின்பற்றவேண்டும்.