RETRO

mysixer rating 4.5/5

421

a K. Vijay Anandh  review

என்னதான் வடைபாயாசத்துடன் தமிழக மீல்ஸ் தடபுடலாக இருந்தாலும் நம்மவர்களுக்கு காரசாரம் தூக்கலாக இருக்கும் ஆந்திர மீல்ஸ் மீது ஒரு அளவற்ற காதல் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு காரசாரமான அட்டகாசமான ஆந்திர மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை கொடுத்திருக்கிறது ரெட்ரோ.

அனாதையாக சுவாஸிகாவிடம் குழந்தை கிருஷ்ணனாக வந்துசேரும் சூர்யாவிற்கு ஏன் சிரிப்பே வரமேட்டேன்கிறது என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் ஒளித்துவைத்திருக்கும் விதமும் அதற்கான காரணகாரியங்களும் அருமை. இந்த மண்ணில் பிறக்கும் எந்த ஒரு உயிரினத்திற்கும் அதற்கென்று ஒரு அவதார நோக்கம் இருக்கும். இதில் சூர்யாவின் அவதார நோக்கம், தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை தலை நிமிரச்செய்வது அது மட்டுமல்லாமல், அவர்கள் பலதலைமுறைகளாக மறந்துவிட்ட சிரிப்பை அக்னி ஏவுகணை போல வெளிக்கொண்டுவருவது அதன் மூலம் அடக்குமுறையாளர்களை செல்லாக்காசுகளாக ஆக்குவது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் பேசடப்படும் அரசியல் அதிகம் வலுவானது மிகவும் யதார்த்தமானது. அவரது,  முழிச்சுக்கோ… என்கிற ஒருவரி வாட்ஸப் ஸ்டேட்டஸ் போல. முழித்துக்கொள்வதும், தொடர்ந்து முட்டாள்களாகவே இருப்பதும் அவரவர் விருப்பம், விதி!

தலைமுறை தலமுறையாக மக்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் வீல்சேர் அப்பா  ராஜவேல் மிராசுவாக நாசர், அவர் வழியிலேயே அவரை விட பயங்கரமாக மக்களை கொடுமைப்படுத்தும் மகன் மைக்கேல் மிராசுவாக விது என்று நம் கண்முன்னே நடக்கும் பலவிஷயங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கம்சர்களை அழிக்கும் கிருஷ்ணராக, சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அப்பன், அந்த தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறான், மகன் அவர்களை அந்நிய மண்ணிற்கு விற்கின்றான். நல்லவேளையாக பேரன் பேத்தி என்று தலையெடுக்கும் முன் முடித்துவிடப்படுகிறார்கள்

சூர்யாவின் கிளாசிக் ஹிட் படங்களின் கதாபாத்திரங்களை கோர்த்து செய்த கதாபாத்திரமாக பாரிவேல்கண்ணனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே கூடியிருக்கும் நண்பர்களோ எதிரிகளே துரோகிகளே … இதுதான் இப்படத்தில் சூர்யா பேசும் முதல் வசனம். அங்கேயே, ஏதோ வித்தியாசமான சம்பவம் இருக்கு என்பதை நிரூபித்துவிடுகிறார்கள் படக்குழுவினர்.

அதைத்தொடர்ந்து கட் இல்லாமல் படமாக்கப்பட்ட கனிமா சாங் இடையிடையே வரும் சண்டைக்காட்சிகள் என்று பிரமாதமான பிலிம் மேக்கிங்.

அந்த பிரமிப்பு இறுதிக்காட்சி வரை நீடிக்கின்றது.

பூஜா ஹெக்டே, இனி இவர் நிரந்தரமாக தமிழ் நடிகைதான் என்கிற அளவிற்கு, நம் வீட்டில் ஒருவராக ருக்மணியாக வாழ்ந்திருக்கிறார்.

அந்தமானில் நம்மை வசீகரிப்பது சுஜித் சங்கர், வாங்கிய அடியில் நெளிந்துகொண்டே பூஜா விடம் மன்னிப்பு கேட்கும் காட்சி அடிபொலி. அவரது அப்பாவாக கஜராஜ் சிறப்பான வேடம், சரியாக செய்திருக்கிறார்.

பூர்வகுடி புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளாக தமிழ் மற்றும் பிரேம்குமார் குழுவினர், தங்களது வலியையும் வேதனயும் காட்ச்சிக்கு காட்சி காட்டி கண்கலங்க வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆபத்பாந்தவனாக சூர்யா வந்த பிறகு மாறும் களம் அருமை.

சூர்யாவின் வளர்ப்பு தந்தையாக வரும் ஜோஜு ஜார்ஜ், என்ன நடிகன் டா என்கிற அள்விற்கு,  அவர் முதல் ஜெயராம், ராமச்சந்திரன், கருணாகரன் என்று அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிட்ட்த்தட்ட 70 க்கும் மேற்பட்ட நடிகர்கள் ஒவ்வொருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

தென் தமிழகம், காசி, மதுரை மற்றும் அந்தமான் என்று பயணித்து ரெட்ரோ ஒரு அட்டகாசமான விருந்து படைத்திருக்கிறது.

ஜிகிர்தண்டாவில், பயமுறுத்துபவனை விட எண்டெர்டெய்ன்மெண்ட் செய்பவன் மேல் என்று காட்டியிருப்பார் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோவில் உன் எதிரியை ஒன்றும் இல்லாதவனாக ஆக்க அவன் மீது நீ ஆயுதம் வீச வேண்டியதில்லை,  உன் சிரிப்பை வீசினாலே வீழ்ந்து விடுவான் என்று காட்டி அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணனின் இசை பட்த்திற்கு பெரிய பலம். 1960 களில் கதை நடப்பதால், அன்றைய சென்னையின் மீட்டிங் பாயிண்டான டிரைவ் இன் உட்லண்ட்ஸை ரிகிரியேட் செய்து அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜாக்கி மற்றும் மாயபாண்டி.

RETRO,  நிச்சயம் சூர்யாவின் மகிழ்வான, வெற்றிகரமான  தருணங்களை திரும்பக்கொண்டுவரும்.